தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 15)
பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires/cordless), சுத்த நுட்பம் (clean tech) போன்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். சென்ற சில பகுதிகளில், வலைமேகக் கணினி, வலைமேக ஊடகம் மற்றும் கம்பி நீக்கத் துறைகளின் பற்பல உபதுறைகளிலம் உள்ள ஆரம்ப நிலை வாய்ப்புக்களைப் பற்றி விவரித்தோம். இப்போது இறுதி CL துறையான சுத்த நுட்பங்களைப் (CLean tech) பற்றியும் இத்துறையிலுள்ள ஆரம்பநிலை மூலதன வாய்ப்புக்களைப் பற்றியும் மேற்கொண்டு காணலாம்.

*****


சுத்த தொழில்நுட்பம் (clean tech) அடுத்த CL துறை என்றீர்கள். அதிக அளவில் ஆரம்ப நிலை மூலதனம் அத்துறையில் ஏற்கனவே போடப்பட்டுள்ளது போலிருக்கிறது... அதில் இன்னும் எதாவது வாய்ப்புள்ளதா?

சுத்த சக்தித் துறையைப் பற்றி சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரையிலும், ‘சுத்த சக்தியின் சங்கடம்’ என்ற சூர்யா துப்பறியும் கதை ஒன்றிலும் முன்பே விவரித்திருந்தேன். ஆனாலும் கடந்த சில வருடங்களில் இத்துறையில் பல முன்னேற்றங்கள் எழுந்துள்ளதால் அத்துறையில் உள்ள மூலதன வாய்ப்புக்களைப் பற்றி மீண்டும் எழுத இது நல்ல தருணம் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் கேட்டுள்ளபடி சுத்த நுட்பத் துறையில் பெருமளவு மூலதனம் ஏற்கனவே பாய்ந்துள்ளது உண்மைதான். ஆனால், கம்பியற்ற கைபேசித் துறையில் குறிப்பிட்டபடி, இத்துறையில் இன்னும் புதுமை நுட்பங்கள் எழுந்து கொண்டே இருப்பதால், இன்னும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புள்ளது என்பது நல்ல செய்தி. அதிலும் சுத்த சக்தி நுட்பங்களுடன் கணினித் துறை நுட்பங்களையும் இணைக்கும் சில வாய்ப்புக்கள் தற்போது அதிகரித்துள்ளன. அவற்றைப்பற்றி இனிவரும் பகுதிகளில் மேற்கொண்டு
விவரிப்போம்.

முதலாவதாக சுத்தத் தொழில்நுட்பம் (clean tech) என்றால் என்ன என்று பார்ப்போம். அந்தப் பெயரைக் கேட்டால் எனக்கு முதலில் "அபாரமான வெள்ளைக்கு ரின்! ரின் சோப் அல்ல - அது ஒரு டிட்டெர்ஜெண்ட் சலவை வில்லை!’ என்ற விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்புக் குரல்தான் ஞாபகம் வருகிறது. சுத்த நுட்பம் துணிகளைச் சுத்தம் செய்வதற்கானது அல்ல. நாம் சுவாசிக்கும் காற்றையும் உலகின் நீர்த்தேக்கங்களையும் சுத்தமாக்கவும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்குமானது.

சுத்த நுட்பங்களை ஐந்து உபதுறைகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:
* முதலாவது, கரியமில வாயுவை வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளிவிடும் தொழில்நுட்பங்கள். உதாரணமாக, மின்சார அல்லது ஹைப்ரிட் கார் போன்ற தொழில்நுட்பங்கள்.
* பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விட சுத்தமாக எரிபடக் கூடிய எரிபொருட்கள் (cleaner burning fuels) - பயோடீஸல், எத்தனால் போன்றவை.
* எரிபொருட்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரேயளவு எரிபொருளுக்கு பலமடங்கு அதிகச் சக்தி அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of energy utilization)
* வெளியிடப்படும் மாசுப் பொருட்களான துகள்கள், திரவங்கள், வாயுக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் அல்லது பிடித்து மாசு செய்யாதவாறு அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration)
* சுத்தசக்தித் தகவல் நுட்பத் துறை (clean energy information technology)

சிலர் அமெரிக்காவிலுள்ள பெட்ரோலியத்தை இன்னும் விலைகுறைவில் அல்லது அதிகமாக எடுக்க உதவும் தொழில் நுட்பங்களையும் சுத்த நுட்பங்களோடு சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் வெனிஸுவேலா போன்ற சோஷலிஸ நாடுகளின் கெடுபிடிகளினால்
அமெரிக்காவும் மற்ற உலகப் பெருநாடுகளும் (சைனா, இந்தியா உட்பட) பொருளாதார மற்றும் உலக அரசியல் சங்கடத்துக்கு உள்ளாகாமலிருக்க அத்தகைய புது நுட்பங்கள் உதவலாமே ஒழிய, அது மாசுக்கள் குறையவும், சுத்தமாக்கப் படவும் உதவாதவை. பார்க்கப் போனால், பெட்ரோலியத்தைச் சார்ந்த மாசுமிக்க எரிபொருட்களை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தவே உதவுகின்றன. அதனால் இந்த வகையறாவை அசுத்த சக்தி நுட்பம் என்றுதான் கூறவேண்டும்.

இப்போது ஒவ்வொரு உபதுறையாக மேற்கொண்டு விவரிப்போம்.

கரியமில வாயுவை வெளிவிடாமல் சக்தி தரும் நுட்பங்கள்:
உதாரணமாக, முழுவதும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளைக் குறிப்பிடலாம். தற்போது ஏற்கனவே ஹைப்ரிட் எனப்படும் பாட்டரியில் மின்சார மோட்டார், கேஸலின் எரித்து ஓட்டும் மோட்டார் இரண்டையும் மாறிமாறி உபயோகிக்கும் வண்டிகள் பிரபலமாகி உள்ளன. அதே மாதிரி வண்டிகளுக்கு, வீட்டு மின்சாரத்தில் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரித் தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ளன. முழுதும் மின்சாரத்திலேயே ஒடக்கூடிய வண்டிகளும் தயாரிக்கப்படலாம். டெஸ்லா மோட்டர் நிறுவனத்தின் அதிவேக வண்டியை உதாரணமாகக் குறிப்பிடலாம். அது மட்டுமல்லாமல், பல மின்சார மோட்டர் வண்டிகள் வந்துள்ளன. நிஸ்ஸான் லீகப் மற்றும் ஷெவர்லே வோல்ட் குறிப்பிடத்தக்கவை. வோல்ட் வண்டி ஒரு சிறு கேஸலின் எஞ்சினையும் வைத்திருந்தாலும், பொதுவாக மின்சார மோட்டரிலேயே ஓடுவதால், அதையும் இவ்வகையில் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் பல வண்டிகள் இவ்வகையில் அடுத்த வருடம் சேர்வதற்குள்ளன (டொயோட்டாவின் ப்ரியஸும் கூடத்தான்).

சூரிய ஒளி மின்னணு சிப்கள் மேல் படுவதால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பலவிதமான நுட்பங்களைப் பெருமளவில் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதில் சில
வணிக ரீதியில் வந்துள்ளன. கூகிள், வால்மார்ட் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்கள்மேல் வைத்துப் பெருமளவில் மின்சார உற்பத்தி செய்து தங்கள் மாசு வெளியீட்டைக் குறைத்து வருகின்றன. வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டின் கூரை ஓடும் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது!

மேலும் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை சூடாக்கும் நுட்பம் இப்போது நீச்சல் குளங்களுக்குப் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் குளிக்கும் நீரைச் சூடாக்கவும் சூரிய வெப்ப பாயிலர்கள் வீட்டுக்கு வீடு மொட்டை மாடிமேல் வைக்கப் பட்டுள்ளன.

மிக ஆழ்ந்த சந்தேகங்களுக்காளான அணுசக்தியையும் கூட இந்த வகையில் குறிப்பிடலாம். முக்கியமாக, பெட்ரோலியம் மற்றும் கார்பன் சார்ந்த எரிபொருட்களின் மேல் தங்களுக்குள்ள சார்பைக் குறைப்பதற்காக இந்தியாவும் சைனாவும் அணுசக்தித் துறையில் மிகப்பெரும் கவனம் செலுத்துகின்றன. இத்துறையில் இரு பெரும் கேள்விக்குறிகள் உள்ளன: சக்தி உற்பத்திக்குப் பிறகு எப்படி கதிர்வீச்சுக் கழிவுப் பொருட்களை (radioactive waste) தீய விளைவின்றிப் பாதுகாப்பாக வைப்பது. இரண்டாவது 3-மைல் தீவு, செர்னோபில் போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் எப்படித் தடுப்பது. இப்பிரச்சனைகளை சமாளிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அணுப்பிளவுக்குப் (nuclear fission) பதிலாக, சூரியசக்திக்கு மூலகாரணமான அணுச்சேர்க்கைச் (fusion) சக்தி சுத்தமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு ஆராய்ச்சி நடைபெறுகிறது.

அது மட்டுமன்றி, ஹைட்ரொஜன் ஃப்யூயெல் ஸெல், புவிவெப்ப சக்தி (geo thermal), காற்றுச் சக்தி, கடலலைச் சக்தி, மின்சக்தியை இன்னும் அதிகமாக தேக்கி வைக்கக் கூடிய பேட்டரிகள், போன்ற பல நுட்பங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. ஹைட்ரொஜன் துறையில் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய கார் நிறுவனமான ஃபோர்ட், பில்லியன் டாலர் கணக்கில் இழப்படைந்து தடுமாறும் நிலையில் தன் எதிர்காலத்தையே ஹைட்ரொஜன் கார்கள் மேல் பணயம் வைத்துள்ளது! அப்பணயம் வெற்றி பெற்றால் அது ஃபோர்டுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே பெரும் நன்மை பயக்கும். நம்மூர்க்காரரான நாஸா விஞ்ஞானியாக இருந்த ஸ்ரீதர் அவர்கள்
ப்ளூம் சக்தி (Bloom energy) என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து சக்திக்கலம் (fuel cell) என்னும் நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சக்தி உருவாக்கும் சாதனைத்தை வணிக ரீதிக்குக் கொண்டு வந்துள்ளார். இதை கூகிள் போன்ற தகவல் மைய நிறுவனங்கள் சோதனையளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இத்துறையில் நிறுவனம் ஆரம்பிக்க பொதுவாக பெரும் மூலதனம் வேண்டும் என்றாலும், சிறுசிறு நுட்ப முன்னேற்றங்களை உருவாக்கும் சிறு நிறுவனங்களுக்கும் சில வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணமாக, சூரியஒளி மின்கலத்தில் உற்பத்தியாகும் சக்தியை அதிகரித்தல், பேட்டரியில் சேர்த்து வைத்தல், வளையக் கூடிய மின்சக்தித் தாள்கள் போன்ற நுட்பங்களைக் குறிப்பிடலாம்.

அடுத்து, சுத்த நுட்பத் துறையில் ஆரம்பநிலை மூலதனத்தாருக்கு ஆர்வமுள்ள வாய்ப்புக்களைப் பற்றி மேலும் பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com