அன்புள்ள சிநேகிதியே,
41 வருடங்கள் அருமையான திருமண வாழ்க்கை, 40 நிமிடங்களுக்குள்ளாக, என் கண் முன்னாலேயே முடிந்து போய்விட்டது. 2 வருடம் ஆகப் போகிறது. இன்னும் அந்த அதிர்ச்சியில் சித்த பிரமையாக அழக்கூட முடியாமல், எப்படி அனுப்பி வைத்தேன் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. அந்தக் குறை தெரியாத அளவுக்கு உறவினர், நண்பர் குழந்தைகளைச் சீராட்டி எப்போதும் சந்தோஷமாக இருப்போம். சிறுவயதில் அதாவது கல்யாணம் ஆன புதிதில் எனக்குக் கோபம் வரும். எல்லாவற்றிலும் ஒரு படபடப்பு இருக்கும். ஏமாற்றங்களைத் தாங்க முடியாமல் அவ்வப்போது அழுகை வரும். நான் என் வீட்டில் அண்ணன், தம்பி நடுவில் ஒரே பெண். கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டேன். இவர் என்னுடைய குணங்களைப் புரிந்து கொண்டு, அவ்வளவு பொறுமையாக வாழ்க்கையின் விதி, நியதி, விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பார். எனக்கு அவரே கணவர், நண்பர், குரு எல்லாம். அப்படி ஒரு அன்னியோன்யமான உறவு. எல்லாவற்றிலும் அவருக்குக் கட்டுப்பாடு உண்டு. தன் உடம்பை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார். ஆஸ்துமாவைத் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த shortness of breath-ஐத் தவறாகப் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. என்னை எப்படித் தனியாக விட்டுவிட்டு அவரால் போக முடிந்தது? மற்ற தம்பதிகளைப் போல சண்டை போட்டுக் கொண்டிருந்தால், இந்த அளவுக்கு நான் இடிந்து போயிருப்பேனா என்று தெரியவில்லை. என்னுடைய மருமான் என்னை ஒரு மாறுதலுக்காக இங்கே அழைத்து வந்திருக்கிறான். கொஞ்ச நாள், இவருடைய தங்கை பெண் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டாள். எங்கேயும் பிடிக்கவில்லை. மனம் நிலை கொள்ளவில்லை. இங்கே என்னைச் சுற்றி இருப்பவர்கள், உங்களுடையது போல அருமையான கணவர் கிடைப்பது மிகவும் அதிர்ஷ்டம். அவர் நீங்கள் அழுதால் வருத்தப்படுவார். "Celebrate life, celebrate life" என்று சொல்கிறார்கள்.
பாறாங்கல் போல மனது கனக்கும்போது எதைக் கொண்டாடுவது? எப்படிக் கொண்டாடுவது? உறவுகள் அறுந்து போகாமல் இருக்க அறிவுரை சொல்கிறீர்கள். இங்கே அறுகாமல் இருக்கும் உறவால் ஏற்படும் வேதனைக்கு என்ன மருந்து உங்களால் கொடுக்க முடியும்? உங்களை சேலஞ்ச் செய்யவில்லை. என்னால் சோகத்தைத் தாங்க முடியவில்லை. அதற்கு என்ன வழி என்றும் தெரியவில்லை.
இப்படிக்கு ------------
அன்புள்ள சிநேகிதியே,
மனித இழப்பின்போது உறவு இன்னும் பலம் கூடுகிறது. பாரம் இன்னும் அதிகரிக்கிறது. உங்களைப் போன்றோர் படும் வேதனைக்கு, இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருக்கவும் இருக்காது. நினைவு என்று ஒன்று இருக்கும்வரை, இந்தச் சோகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான், காலம் சோகத்தைப் போக்கும் என்கிறோம். ஆனால் உண்மையில் காலம் என்பது, அடுக்கடுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கடமைகளைச் செய்யச் செய்ய, நம் கவனமெல்லாம் கடமைமீது குவிந்துவிட, பழைய சம்பவங்களைப் மறக்கச் செய்யும்.
நாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். உங்களுடைய இழப்பின் கொடுமை எல்லோருக்கும் புரிகிறது. ஏதோ ஒரு வகையில் ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம். இன்னும் அந்த சோக பாரத்தை எங்கே இறக்கிவைப்பது என்று தெரியாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறோம். உங்கள் கணவர் உங்களுக்கு அறிவுரை சொன்னது போல இந்த இழப்பு வாழ்க்கையின் நியதி, நிர்ப்பந்தம். "மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்” என்று சொல்லுவார்கள். அது முடியாது; எப்படி என்றும் தெரியாது. எப்போதும் ஏதாவது 'கமிட்மெண்ட்' என்று வைத்துக் கொண்டால், நாம் அந்த வேலையில் ஈடுபட்டு இந்த நினைவு கொஞ்சம் ஒதுங்கிப் போகும். இடமாற்றம் ஒரு வகையில் நல்லது. மற்றவர் எதிரில் நம் துக்கத்தைக் காட்டாமல், நடந்து கொள்ளும்போது, கொஞ்சம் கொஞ்சமாகச் சோகம் குறைந்து, நினைவுகள் மட்டும் தங்கியிருக்கும்.
சமீபத்தில் என்னுடைய தோழிக்கும் உங்களுடையது போல ஒரு இழப்பு. "I Feel so desparate, so helpless and hopeless" என்றாள். தன்னுடைய வேலையில் தன்னைப் புதைத்துக்கொண்டு விட்டாள். உங்களுக்கு அது முடிவதில்லை. எப்படி முடிய வைப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. சில உதாரணங்கள் கொடுக்கிறேன், முயற்சி செய்து பாருங்கள்.
1. நமக்குப் பிடித்த காட்சி; பிடிக்காத காட்சி. தெருவில் போய்க் கொண்டிருக்கிறோம். ஒரு குப்பை மேடு தெரிகிறது ஒரு பக்கம். மறு பக்கம், ஒரு குடிசை வாசலில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையின் விளையாட்டை ஒரு நொடி அனுபவித்து, நாம் மேலே நடக்கும்போது, குப்பை மேட்டின் துர்வாசனை மறந்து போகிறது. 'தேர்வு' நம் கையில். எந்தக் காட்சியைப் பார்த்தால் எதை மறக்க முடியும் என்பது.
2. நமக்கு ஒரு கலையில் ஈடுபாடு இருக்கிறது. ஒரு பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கிறது. நம் வயதுக்கேற்ப, பொருள் வசதிக்கேற்ப எந்தக் கலையில் அல்லது சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என்று பார்க்கவேண்டும். இந்த வயதில் பாட்டுக் கற்றுக் கொள்ளுவார்களோ, வேற்று மொழி கற்றுக் கொள்வார்களோ என்ற சங்கோஜம் இருக்கக் கூடாது. கற்றுக் கொள்வதிற்கு வயது தடை இல்லை. அதேபோல, 'என்னைப் பார்த்துக் கொள்ளவே இரண்டு பேர் தேவைப்படுகிறது. நான் என்ன சமூக சேவை செய்யமுடியும்?' என்ற நினைப்பும், நம்மைப் பின்னால் தள்ளிவிட்டு, நமக்குள் இருக்கும் சோகத்திலேயே சுய பரிதாபத்தில் முழுகடித்துவிடும். எவ்வளவுக்கெவ்வளவு பிறர் நலனில் அக்கறை காட்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு வேதனையின் வலி குறையும். குழந்தை இல்லாத குறையை எண்ணாமல், பிறர் குழந்தைகளை உங்கள் குழந்தையாகப் போற்றி வளர்த்திருக்கும்போது, இந்தச் சேவை உணர்வு உங்களுக்கு எளிதாகப்படும்.
3. நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் லட்சியம், நோக்கு, விருப்பம், ஆர்வம் - அதன் பின்னணியில் நாம் ஏதாவது ஆரம்பித்து முழுமையாக ஈடுபடும்போது, அவர்கள் நம்முடன் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் கற்பித்து, நம் இழப்பை மறந்து, மானசீகமாக நம் செயல்மூலம் அவர்களுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருப்போம். வயதோ, வசதியோ நாம் செய்யாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடாது. அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை. அதற்கு முதுமையோ, இயலாமையோ தடையாக இருக்காது.
இவ்வளவு எல்லாம் எழுதினாலும், எனக்கு ஒன்று நிச்சயமாகப் புரியும். பிரிவின் சோகத்தில் துவண்டிருக்கும் மனதுக்கு, சோம்பி, சோர்ந்து கிடக்கத்தான் பிடிக்கும். ஒரு காலகட்டத்தில் அது, தானே, தன்னுடைய வெறுமையை வெறுத்து ஒரு Self start, Jump start செய்து, செயல்பட ஆரம்பிக்கும். அப்போது வலியைப் பொறுத்துக்கொள்ளக் கூடிய சக்தி பிறக்கும்.
மனித இழப்புக்களினால் ஏற்படும் வலி என்றும் போகாது. ஒன்று நாம் மறக்க வேண்டும். இல்லை, மனத்திடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இதற்கு மேல் எழுதத் தெரியவில்லை.
உங்கள் வேதனை குறைய என்னுடைய பிராத்தனைகள்.
இப்படிக்கு சித்ரா வைத்தீஸ்வரன் |