டுனீசியாவைப் புரட்சி வெடிக்கத் தயாராக இருந்த நாடு என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சுற்றுப் பயணிகள் நிரம்பிய, உலகவங்கி பெருமைப்பட்டுக் கொண்ட வளமான நாடு அது. முஹமது பென் அஜீஸ் என்ற வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர் டுனீசியாவின் ஸிடி பௌஜிட் நகரில் தன்மீதே நெருப்பிட்டுக் கொண்டார். அவர் இட்ட நெருப்பு 22 அரபு நாடுகளில் பலவற்றில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 'ஜாஸ்மின் ரெவல்யூஷன்' வரலாறு காணாத புதுமை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏனென்றால், இந்த மல்லிகைப் புரட்சி அரசியல் கட்சிகளாலோ, மதத் தலைவர்களாலோ வேறெந்தக் கோட்பாட்டு அமைப்புகளாலோ தலைமையேற்று நடத்தப்படுவதல்ல. பல பத்தாண்டுகளாக அடக்கி ஆண்டுகொண்டிருந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக உள்ளூரப் புகைந்து கொண்டிருந்த நெருப்பைக் கொழுந்து விட்டெறியச் செய்தார் அந்த டுனீசிய இளைஞர். எதிர்ப்புக் குரல்களை இல்லாததாக்கி, நாட்டின் வளத்தை வெளிநாட்டு வங்கிகளில் கொண்டு குவித்து வைத்து, தம்மை நிரந்தர அதிபர்களாக்கிக் கொண்டவர்களின் சிம்மாசனங்களுக்கு இந்த ஜாஸ்மின் நெருப்பு தீயிட்டது. கண்ணிருந்தும் பார்க்கத் தவறும் லிபியாவின் கடாஃபி போன்ற சிலரே மக்களுக்கெதிராக ராணுவத்தை ஏவி ரத்த வெள்ளம் பெருக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சரித்திரத்தின் அலை பொங்கி எழும்போது, நாணயமற்ற அரக்கத்தலைகள் அதை எதிர்த்து நிற்கலாமென்று கனவு காண்பது அறிவீனத்தின் உச்சம்.
இந்தப் புரட்சியின் பரவலிலும், நீடித்துத் தீர்மானமாக நிற்பதிலும், ஸ்மார்ட் ஃபோன்கள் பெரும்பங்கு வகிக்கிறதென்பது ஒரு முக்கியமான தகவல். டி.வி.க்களும் செய்தித்தாள்களும் பணம், பதவி கொண்டோரின் கைப்பாவைகளாக மாறிவிட்ட நிலையில், நவீன மின்னணுக் கருவிகள் தனிநபரைத் தொட்டெழுப்பி எகிப்தின் தாஹ்ரீர் (விடுதலை) சதுக்கத்துக்குக் கொண்டு வந்து, பாரதப் போர்போல 18 நாட்களில் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. மக்களுக்கு இவை தரும் ஆற்றல் இனிவரும் சமூக மாற்றங்களில் மிக முக்கியமானதாக இருக்கும்.
*****
அராபிய மல்லிகையின் வாடை எங்கே தன் தோட்டத்திலும் வீசிவிடுமோ என்று சீனா அஞ்சுகிறது. மற்றொரு டியனான்மேன் சதுக்கம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிற சீனா, உடனடியாக இணையத்தின் வாயை அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. அங்கும் லஞ்சம் உண்டு, தனிமனித சுதந்திரம் அடக்கப்பட்டுள்ளது, உலகத்தைத் தன் ஏகாதிபத்தியத்தில் கொண்டு வரும் பேராசை உண்டு. ஆனால், சீனத் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரே ஒரு மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால், அவர்கள் கருதுவது சீனாவின் நலனை மட்டுமே. அதை யாரும் சந்தேகிக்க முடியாது. “பொருளாதார வளர்ச்சியைச் சற்றே பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தப் போகிறோம்” என்று சீன அரசு கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. ஒரே கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், சீன அரசால் தான் சொல்வதைச் செய்து காட்ட முடியும். “கூட்டணி அரசின் கட்டாயத்தால், எனக்குப் பிடிக்காதது நடந்தாலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறேன்” என்று சாக்குப்போக்கு சொல்ல முடியாது.
*****
டுனீசியா ஒரு வளமான நாடு என்று கூறிய கையோடு வேலையில்லாத இளைஞரின் தற்கொலை பற்றிப் பேசியது சற்றே முரணாகத் தோன்றியிருக்கலாம். நாட்டின் வளங்கள் எல்லா மக்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் போதுதான் அங்கே மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் சாத்தியம் ஏற்படுகிறது. இந்தியாவும் இன்றைக்கு ஒரு வளமான நாடுதான். கல்வியறிவு பெற்ற ஒரு பகுதியினர் ஏராளமாகச் சம்பாதிக்கின்றனர். அவர்களும், சீறி வளரும் தொழில்துறையும் செலுத்தும் வரியை மீண்டும் அரசு பொதுநலத் திட்டங்களில் செலவிடும்போது, செல்வப் பங்கீடு ஓரளவு நிகழ்கிறது. ஆனால், பட்ஜெட்டில் அறிவித்த கோடிகளை, போய்ச் சேர வேண்டிய மக்களுக்குப் போகவிடாமல், ராசாக்களும், கல்மாடிகளும், இன்னும் பெயர்கூறப்படாத 'தலைவர்'களும் இடைத்தரகர்களோடு பங்கிட்டுக் கொண்டுவிட்டால், கீழ்த்தட்டுக் குடிமகன் இன்னும் கீழே போகிறான். இந்தியாவில் ஊடகங்கள் அடக்கப்படவில்லை, அடங்கிப் போகின்றன. இந்தியக் குடிமக்கள் பொங்கி எழமாட்டார்கள், காரணம் அவர்களுக்குக் கிரிக்கெட்டும் சினிமாவும் இருந்தால் போதும். வேறு சில இலவசங்களுக்கும் மயங்கிவிடுவார்கள். ஆன்மீகத்தில், கலாசாரத்தில், கல்வியில், சமீப காலமாகப் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் உயர்ந்தது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியா, அதன் தலைவர்களின் ஊழலால், நாணயமின்மையால், இரட்டை நாக்குப் பேச்சால் உலக அரங்கில் சிறுமைப்பட்டு நிற்கிறது.
*****
இந்த மகளிர் சிறப்பிதழ் பல சாதனைப் பாவையரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதோடு, டாக்டர் பத்மினி சர்மாவின் நேர்காணலையும் தாங்கி வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னால், இரவில் மணிக்கு ஊரே அடங்கிவிட, கருப்புக் குதிரையின் குளம்புச் சத்தம் மட்டும் கேட்க வைத்த 'மர்ம தேசம்' தொடரை ஒரு சிறிய திகிலோடு நினைக்காதவர்கள் யார்? அதற்கும், இன்னும் பல மறக்க முடியாத தொடர்கள் புதினங்களையும் ஆக்கியவர் இந்திரா சௌந்தர்ராஜன். அவருடனான நேர்காணலையும் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். பயனுள்ள செய்தித் துணுக்குகள், கதைகள், ஏராளமான நகைச்சுவை இவையெல்லாம் கலந்து சமைக்கப்பட்டுள்ளது மார்ச் இதழ். இனி, சுவைப்பது உங்கள் வேலை.
உலக அளவில் மகளிர் நாள், நீர்வள நாள், கவிதை நாள் என்று பல முக்கியமான நாட்களைக் கொண்டது இந்த மாதம். எல்லாமே உணர்ந்து கடைப்பிடிப்பதற்கானவை. அவற்றை அறிந்து பயனுற வாழ்த்துக்கள்!
மார்ச் 2011 |