பிப்ரவரி 2011 வாசகர் கடிதம்
ஏறக்குறைய 50லிருந்து 60வரை வயதுள்ள பெரும்பாலான தமிழர்களின் பள்ளிக்கால, இளமைக்கால ஆதர்ச எழுத்தாளர்களான வாண்டுமாமா, சாண்டில்யன் ஆகியோரைப் பற்றிய ஜனவரி இதழ்க் கட்டுரைகள், நினைவுகளை மீண்டும் மலரச் செய்தன. என்னுடைய மூத்த மகனின் குழந்தைப் பருவத்தில் அவனுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் வாண்டுமாமாவின் 'கபீஷ்'! சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சியை, மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு, தமது நண்பர்களுடன் உருவாக்கிய AID நிறுவனத்தின் டாக்டர் பாலாஜி சம்பத் அவர்களின் நேர்காணல் உற்சாகத்தைத் தருகிறது.

"பிச்சைக்காரர்களுக்குக் கூட மறுவாழ்வு மையம் இருக்கிறது, ஆனால் எழுத்தாளர்களுக்கு எந்தவித அங்கீகாரமுமில்லை" என்ற ஜி. அசோகனின் குமுறலை அரசு ஒரு தனிக்குழு அமைத்து ஆராய்வது நல்லது. பண்டித கோபாலய்யர் பற்றிய கட்டுரை அருமை. எந்த விளம்பரமோ ஆரவாரமோ இன்றித் தம் வாழ்நாளில் பல்வேறு வழிகளில் தமிழுக்கு அணிசெய்து முன்னுதாரணமாய் நின்ற ஒருவரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்த தென்றலுக்கு நன்றி. விவேகானந்தர் தினத்தையொட்டி விவேகானந்தரைப் பற்றிய பல செய்திகளை ஜனவரி தென்றலில் வெளியிட்டு வீரத்துறவிக்கு நினைவாஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

சென்னிமலை சண்முகம்,
நியூயார்க்

© TamilOnline.com