பேராசிரியர் நினைவுகள்: வெல்லுஞ் சொல்
முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்னால், அநேகமாக எல்லா தமிழ்த் திரைப்படங்களிலும்--தமிழாசிரியாரை கோமாளியாகத்தான் சித்திரிப்பார்கள். கோட், தலைப்பாகை, முட்டை முட்டையாக மூக்குக்கண்ணாடி, அசமந்தப் பார்வை, கையில் பிரம்பு, கச்சம் வைத்த வேட்டி.... இப்படித்தான் அவர் தோற்றம் அளிப்பார். பேச்சோ, முட்டாள்தனமாக மட்டும்தான் இருக்கும். அவருக்குத் தமிழிலக்கணம் ஒன்றைத் தவிர வேறெதிலும் பயிற்சி இருக்காது. இப்படிப்பட்ட ஒரு குணச்சித்திரத்தைதான் 'தமிழாசிரியர்' என்ற பெயர் அந்தநாள் ரசிகர்களின் மனத்தில் ஏற்படுத்தும். தமிழாசிரியர் கேலிக்குரிய தன்மைகள் அனைத்துக்கும் ஒரு icon என்ற விதத்தில் சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போதைய படங்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்போதெல்லாம் தமிழாசிரியர் என்றில்லாமல் எல்லா ஆசிரியர்களையுமே இந்த வகையில்தான் காட்டுகிறார்களோ என்னவோ, தெரியாது!

இந்தத் தொடரை ஆரம்பிக்கும்போது ஏதோ ஒரு நான்கைந்து தவணைகளில் என் ஆசிரியரைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு முடிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அவரைச் சந்திக்கும் முன்வரையில் எனக்கு வாய்த்திருந்த தமிழாசிரியர்களை, 'நல்லாப் பாடம் நடத்துபவர்; ஈடுபாடு இல்லாமல் பாடம் சொல்பவர்; அடிப்பதற்கென்றே பிரம்பும் கையுமாய் உலவியபடி, மற்ற ஆசிரியர்கள் மதிக்கப்படுமளவுக்குத் தான் மதிக்கப்படாத காரணத்தால் அடிபட்டிருக்கும் உள்ளுணர்வை--ego--மாணவர்களை மனம்போன போக்கில் அடித்து ஆற்றிக்கொள்பவர்' என்று மூன்று அல்லது நான்கு பிரிவுகளின்கீழ் கொண்டுவந்துவிடலாம். கல்லூரியில் மாணவர்களை அடிக்க முடியாது. அந்தக் குறையை வேறுவகைகளில் நிவர்த்தி செய்துகொள்பவர்கள் உண்டு.

நல்ல தமிழாசிரியர் என்றால், பாடப் பகுதியை நன்றாக விளக்குபவர் என்ற அளவில்தான் பொருள் வரையறை காண முடியும். ஆசிரியர் பணியாற்றிய அதே அ.மா. ஜெயின் கல்லூரியில் இன்னொரு தமிழ்ப் பேராசிரியர் "நாங்கள்ளாம் தமிழ்ப் படிப்பில் உங்கள மாதிரிதான். என்ன, இலக்கணங்களை உங்களைவிட நன்றாக அறிவோம். பலர் உருப்போட்டு ஒப்பிப்பார்கள். ஆனா, கம்பராமாயணம், சிந்தாமணி போன்ற காவியப் பயிற்சியில் எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் நாங்கள் படிச்சபோது இருந்த பாடப் பகுதியும், இதோ உங்களுக்கு நடத்துகிறோமே அந்தப் பாடப் பகுதியும் மட்டும்தான். பாடப்பகுதி மாறினாலொழிய வேறொரு பகுதியைப் படித்துக்கூட பார்க்காதவர்கள்தாம் பெரும்பான்மை. நானே கம்பராமாயணம் முழுக்கப் படித்ததில்லை. வேணுகோபால் ஒருத்தர்தான் எங்களில் விதிவிலக்கு" என்றே என்னிடம் சொல்லியிருக்கிறார்.

நானறிந்திருந்த தமிழாசிரியர்களில், தமிழைத் தவிர மற்ற ஒன்றையும் அறியாத ஆசிரியர்கள் உண்டு. மஹாமஹோபாத்தியாய பட்டம் பெற்ற உ.வே.சா. அவர்களே இந்த வகைப்பாட்டுக்குள்தான் வருவார். அவருக்கு இசைப்பயிற்சி பாரம்பரியமாக வந்திருந்தது என்பது கூடுதலான ஒன்று. தமிழிலும் வடமொழியிலும் வல்லவர்களான நல்ல தமிழாசிரியர்களையும் அறிந்திருந்தேன். அரிதிலும் அரிதாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒன்றுபோலப் புலமைபெற்ற ஆசிரியர்கள் உண்டு. தமிழே சரியாகத் தெரியாத, ஒற்று பற்றிய ஐயங்களைக் கூடச் சரியாக விளக்கத் தெரியாத, தானே விளங்கிக்கொள்ளாத ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன். என்ன பெரிய ஆச்சரியம் என்றால், ஆங்கிலம் அறிந்த தமிழாசிரியர்களைக் காட்டிலும் தமிழ்ப்புலமை பெற்ற ஆங்கில ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகம் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் ஓர் ஆங்கிலப் பேராசிரியர்தான். அவருக்குத் தமிழில் இருந்த பயிற்சி, மற்றத் தமிழாசிரியர்களுக்கேகூட இருந்திருக்குமா என்பது ஐயத்துக்குரியது.

இப்படி, விஞ்ஞானம், கணிதம், தாவரவியல் போன்ற மற்ற துறைகளில் வல்லவர்களான ஆசிரியர்கள் ஆர்வம் காரணமாகத் தமிழை நாடிவந்து, தாமே உழைத்துப் படித்து, எழுதியும் சொற்பொழிவுகளை ஆற்றியும் வந்திருக்கிறார்கள். தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைக்கப் பெருமளவுக்கு உறுதுணையாக நின்ற, உயர்ந்த தமிழறிஞர் வரிசையில் முன்னணியில் நிற்கும் டாக்டர் வா.செ. குழந்தைசாமி நீர்வளத் துறைப் பொறியிலாளர்தான். தன்னார்வத்தால் தமிழைப் பயின்றவர். தமிழாசிரியர்களோ என்றால், தம் துறையைத் தவிர, பிற துறைகளை எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். அதுதான் சொன்னேனே... தமிழிலேயே போதுமான பயிற்சி இல்லாமல் கடனுக்கு வகுப்புக்கு 'வந்து போகும்' தமிழாசிரியர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பிரிவினர் இன்றளவும் இருக்கின்றனர். சொல்லப் போனால், தமிழ்மொழி, கல்லூரிப் பாடங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிராத இந்தக் காலகட்டத்தில், இந்தப் பிரிவின்கீழ் வரும் ஆசிரியர்கள் பெருமளவுக்கு இனவிருத்தி அடைந்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மைகளை நான் படிக்கிற காலத்திலேயே அறிந்திருந்தேன். மேலே சொன்னபடி, ஒரு தமிழ்ப் பேராசிரியரே இதை எனக்குச் சொல்லியிருந்தார். ஆனால், அவரேகூட 'வேணுகோபால் ஒருத்தர்தான் விதிவிலக்கு' என்றும் சொல்லியிருந்தார். நான் பேராசிரியரிடத்தில் கல்லூரியில் நேரடியாகப் பயின்றதில்லை. இந்தத் தொடரின் தொடக்கத்தில் சொன்னதுபோல், நல்லூர் இலக்கிய வட்டத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் ஆழமும் தாக்கமும் தீவிரமும் என்னை அவரை நோக்கிச் செலுத்தின. அவரே நான் குடியிருந்த நங்கநல்லூருக்கு வீடுகட்டிக் கொண்டு வந்துவிட்டது மேலும் சௌகரியமாகப் போய்விட்டது. அப்படித்தான், கல்லூரிப் படிப்பு முடித்த 1973க்குப் பிறகு சுமார் 24 ஆண்டுகளுக்கு எங்கள் உறவு நீடித்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடைய வீட்டுக்குப் போய் உரையாடிக் கொண்டிருப்பதும், பல சமயங்களில் அவருடைய சொற்பொழிவுகளுக்கு என்னுடைய இருசக்கர வண்டியில் அவரை அழைத்துச் செல்வதும், அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்பதும், அலுவலகத்துக்குச் செல்லும்போது, அவருடைய வீட்டுக்குப் போய், கல்லூரி வரையில் அவரை வண்டியில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போகும் நேரத்தில் நிகழ்ந்த உரையாடல்களுமே மிகுந்த நேர நெருக்கடியான ஒரு தொழிலில் உழன்று கொண்டிருந்த எனக்கு இன்பமான போதுகளாக அமைந்தன.

தமிழைத் தவிர மற்ற துறைகளில் அவருக்கிருந்த நாட்டமும் பயிற்சியும் அபாரமானது. மருத்துவத் துறையில்கூட அவருடைய அறிவுக்கூர்மை பிரமிக்க வைப்பதாக இருந்தது. அவருக்கு இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை நடந்திருந்த சமயத்தில் அவரைச் சந்திக்க வந்திருந்த நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, இதய அறுவை சிகிச்சையின் நுட்பங்களை அவர் விளக்கிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கணேஷ் கே. மணி (தென்னக ரயில்வே மருத்துவமனையில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்) "வேணுகோபால்! நீங்க பேசாம எங்க காலேஜுக்குப் பாடம் நடத்த வந்துரலாம்" என்று குறிப்பிட்டதைப் பற்றி இந்தத் தொடரில் சொல்லியிருக்கிறேன்.

இப்படிப் பலதுறைப் பயிற்சி கொண்ட தமிழாசிரியராக இருந்தது என்னைப் போன்ற இலக்கிய தாகம் மிகுந்தவர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்திருந்தது. ஒருமுறை பாரதியின் குயில் பாட்டைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். இந்தப் பகுதியைப் பற்றி பேச்சு திரும்பியது:

உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி

வட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகிறாய்.

எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளை
பொல்லாப் பிரமா புகுத்திவிட்டாய் அம்மாவோ!

காலம் படைத்தாய் கடப்பதில்லா திக்கமைத்தாய்......


'உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத' என்ற தொடர் தொடங்கி, காலம் படைத்தாய், கடப்பதில்லா திக்கு அமைத்தாய்' என்பது வரையில் அந்தச் சொற்கூட்டத்தில் அமைந்திருக்கும் ஆழ்ந்த பொருளை, கேட்பவர்களுடைய உள்ளங்களையெல்லாம் கவ்வும்படியாக அவர் விளக்கிய பாங்கு, அவருடன் உரையாடினால்தான், அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டால்தான் தெரியும். அண்டவெளியின் பெரும்பரப்பு எப்படி, கற்பனைக்கும் எட்டாத ஒன்று என்பதை விளக்க எச்.ஜி. வெல்ஸை மேற்கோள் காட்டுவார். "இந்த நம்முடைய பூமிப் பந்தை, இதோ இந்த வாக்கியத்தின் இறுதியில் இருக்கும் முற்றுப்புள்ளி அளவுக்குச் சுருக்கிவிடுவோம். அப்போது, சூரியன் எங்கே இருக்கும்? ஒன்பது அடி தொலைவில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டமான ப்ராக்ஸிமா சென்டாரி எங்கே இருகும்? சுமார் நாலாயிரத்து ஐநூறு மைல் தொலைவில் இருக்கும்" என்று தொடங்குவார். விவரிக்க விவரிக்கத்தான் 'உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத' என்ற பாரதி பாட்டின் சிறு துணுக்கில் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் கூர்மையான அறிவுப் பாங்கும், எவ்வளவு தூரம் பொருளுணர்ந்து பாடியிருக்கிறான் பாரதி என்ற உண்மையும், அப்படிப்பட்ட வைரமணிக் கோவையை எவ்வளவு மேம்போக்காகப் படித்துவிட்டு (ஒருவேளை தப்பித் தவறிப் படித்திருந்தால்!) பாரதி பாடல்களை எவ்வளவு புரிந்துகொண்டு ரசித்திருக்கிறோம் என்று நமக்கு நாமே அளவுக்கதிகமாக கற்பனை செய்துகொண்டிருக்கிறோம் என்ற பெரும்பேருண்மையும் விளங்கும். பாரதி பாடல்களை எப்படி அணுகவேண்டும் என்ற அடிப்படையே புரியத் தொடங்கும்.

"பேசினால் போதாது. உங்களுக்குப் பிறகும் உங்களுடைய சிந்தனை வளம் அடுத்தடுத்த தலைமுறைகளைச் சென்றடைய வேண்டும். எனவே, புத்தகமாக எழுதுங்கள் சார்" என்று நானும், தென்றல் ஆசிரியர் மதுரபாரதியும் பலசமயங்களில் அவரிடம் வற்புறுத்தியிருக்கிறோம். என்ன காரணமோ, எழுதுவதில் ஆசிரியருடைய நாட்டம் அதிகமாகச் செல்லவில்லை. 'வள்ளுவரும் பாரதியும்' என்ற ஒரு சிறிய புத்தகத்தை மட்டுமே எழுதினார். ஸ்ரீராம் ட்ரஸ்ட் வெளியிட்டது. சிறுகதைகள், நாடகங்கள் என்று எழுதிக் குவித்திருந்த போதிலும், இப்படிப்பட்ட இலக்கிய ஆய்வுத் துறையில், 'ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கிறோம்' என்ற உணர்வே எழாமல் (பொதுவாக, இப்படிப்பட்ட ஆய்வுச் சொற்பொழிவுகள் பத்தே பத்து நிமிடங்களுக்குள் கொட்டாவியை வரவழைக்கும் தன்மையன என்பதை நாம் எல்லோருமே அறிவோம்) 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்' என்று வள்ளுவர் சொல்வதைப் போல, கேட்கக்கேட்க, இன்னும் கேட்கவேண்டும் என்ற தாகத்தை உண்டுபண்ணுவனவாய் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளை, மற்றவர்கள் கேட்டால் அல்லவோ நான் சொல்வதில் மிகைநவிற்சி என்பது துளியும் இல்லை என்பது விளங்கும்! என்ன செய்வது, இப்படிப்பட்ட அளப்பரிய செல்வத்தை, மேதையை, இலக்கிய இன்பத்தை இதைக்காட்டிலும் மேலாகச் சொல்பவர் யாரும் இல்லை என்னும் அளவுக்கு விளங்கிய பெருந்தகையை உலகம் அறியாமலேயே போய்விட வேண்டியதுதானா என்ற மன உளைச்சலே என்னை இந்தத் தொடரை எழுத வைத்தது. என்னையும் அறியாமல் ஓராண்டுக் காலமாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடரும்.

கடந்த தவணையில், அவருடைய மனைவி ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார்; அவரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தத் தொடரின் முதல் தவணைக்குத் 'தேடாமல் கிடைத்த சொத்து' என்று தலைப்பிட்டிருந்தேன். இம்மாதம் இன்னொரு சொத்து தேடாமல் கிடைத்தது. ஆசிரியர், தன் சொற்பொழிவுகளைக் கையடக்கமான ஒலிப்பதிவுக் கருவியில் பதிந்துகொள்வார். அது அவருடைய சொந்தப் பயன்பாட்டுக்கானது. சொற்பொழிவு முடிந்த பிறகு, திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டு, எங்கே தவறுகிறோம், எங்கே இன்னும் விவரமாகச் சொல்லவேண்டும், எங்கே சுருக்கிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சுயவிமரிசனம் செய்துகொள்வதற்காக அவர் செய்த பதிவுகள் அவை. சில சொற்பொழிவு நாடாக்களை, மற்றொரு சொற்பொழிவைப் பதிவதற்காகப் பயன்படுத்தி, முதல் பொழிவை அழித்துவிடுவார். 'வாழ்ந்த நாளில், அவர் இவற்றை என்னையே கேட்க அனுமதித்ததில்லை. அவருடைய மரணத்துக்குப் பிறகுதான், தனிமையைத் தாங்க முடியாமல் இவற்றைக் கேட்கத் தொடங்கினேன்' என்றார் அவர் மனைவி திருமதி சரஸ்வதி வேணுகோபாலன்.

என்ன புண்ணியமோ, அவருடைய திருக்குறள் வகுப்புச் சொற்பொழிவுகளின் பதிவுகள் ஒலிநாடாக்களாக இருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியை என்னிடம் கொடுத்தார் சரஸ்வதி அம்மா. அவற்றை ஒலிநாடாவிலிருந்து, கணினி வடிவுக்கு மாற்றியிருக்கிறேன். என்னிடம் கொடுக்கப்பட்டவற்றைப் பகுதி பகுதியாக வலையேற்றவும், 'தமிழ் மரபு அறக்கட்டளை' ஆவணக் களறியில் வைத்திருக்கவும் கொரியா கண்ணன் என்றறியப்படும் நண்பர் டாக்டர் நா. கண்ணன் சம்மதித்திருக்கிறார். முதல் நான்கு பகுதிகள் வலையேறிவிட்டன. இங்கே கேட்கலாம் இவற்றைத் தவிர தன்வசமிருக்கும் மற்ற பதிவுகளையும் அனுப்புவதாக சரஸ்வதி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தமிழுலகம் அவருக்குப் பெருத்த நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை, இந்த ஒலிக்கோப்புகளைக் கேட்டால் ஒப்புக்கொள்வீர்கள். எழுத்து மூலமாக இல்லாவிட்டாலும், குரல் வடிவமாகப் பேராசிரியர் நாகநந்தி அவர்களுடைய சொல் நிற்கத்தான் போகிறது. வெல்லுஞ் சொல்லாக விளங்கத்தான் போகிறது.

ஆசிரியரிடம் பெற்ற இலக்கிய அனுபவங்களோடு மறுபடியும் அடுத்த இதழில் வருகிறேன். அதுவரையில், அவசியம் இந்தப் பதிவுகளைக் கேளுங்கள். கேட்பவரைக் கிறங்க அடிக்கிறார் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com