ஹரியானாவில் அய்யனார் சிலை
புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். நாகசாமியிடமிருந்துதான் முதன்முதலில் நான் 'சம்ஸ்கிருதி' பற்றித் தெரிந்து கொண்டேன். என்ன ஆனாலும் சரி, டெல்லிக்குப் போனால் பார்க்கத் தவறக்கூடாது என்று என்னிடம் அவர் சொன்னார். டெல்லி சித்திரக் கல்லூரி பேராசிரியர் அபிமன்யுவின் உதவியில் அந்த இடத்தைக் கண்டு பிடித்தேன். மெஹரோலி-குர்காவுன் நெடுஞ்சாலையில் ஹரியானா எல்லைக்குள் ஒரு கி.மீ. தொலைவில் சம்ஸ்கிருதி உள்ளது. 'அனந்த கிராமம்' என்ற இடத்தில் வரிசையாகப் பெரிய பண்ணை வீடுகளைக் காணலாம். அவற்றில் கடைசிப் பண்ணைதான் சம்ஸ்கிருதி. சுமார் பத்து ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் வளாகம் அது. அங்குள்ள தொகுப்பு வீடுகளில் சுடுமண் காட்சிச் சாலைஅமைந்துள்ளது. குடிசைகளின் உட்புறம் சாணத்தால் மெழுகப்பட்டுள்ளது. சுடுமண் பொருள் செய்முறை, சுடுமண் உருவங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பெரிய மண்பானைகள், அம்மி, ஆட்டுக்கல் முதலியன முற்றத்தைச் சுற்றி இருந்தன. ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த, தனித்தனிக் குடிசைகள். உ.பி. பகுதியில் திருவிழாச் சமயங்களில் தீபாலங்காரம் செய்வதற்கான விளக்குகள், அகல் விளக்குகள் ஏராளமாக இருந்தன. பீகார் பகுதியில் வர்ணம் பூசப்பட்ட சுடுமண் பொருள்கள் பிரமாதம். அழகிலும் செய்நேர்த்தியிலும் மதுபனி சுடு பொம்மைகளுக்கு அடுத்தபடியாக தர்பங்காவின் வர்ண பொம்மைகள் கண்ணைக் கவர்ந்தன. ஆயினும் மதுபனி குடிசைதான் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. காரணம், அதன் மண் சுவர்கள் நேர்த்தியாக வர்ணம் பூசப்பட்டிருந்ததுதான்.

வங்காளப் பகுதியில் அதிகமான பாங்குரா குதிரைகள் இருக்கின்றன. தமிழ்நாடு பிரிவில்தான் நட்சத்திரக் கவர்ச்சி மிக்க உருவங்கள் பல உள்ளன. இது முற்றத்தின் நடுவில் திறந்தவெளியில் மிகப் பெரியதும் உயரமுமான அரங்கில் அமைந்திருக்கிறது. இதில் முக்கியமான படிமங்கள், இரண்டு பெரிய அய்யனார்கள். தலையில் மகுடத்துடனும் கையில் வாளுடனும் குதிரையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கின்றன. இரு பக்கத்திலும் ஏராளமான குதிரைகளும் யானைகளும் இதர பிராணிகளும். ஆயிரக்கணக்கில் சிறு தெய்வங்களும், விநாயகர்களும், அழகிய ஆடவர்களும், விதவிதமான ஆடை அணிகளுடன் வசீகரமான பெண்கள் எனப் பல அங்கே இருந்தன. நான் தமிழ்நாட்டிலிருந்து தான் வந்திருக்கிறேன். ஆயினும் பல்லாயிரம் விதமான சுடுமண் படிவங்கள் இங்குதான் உருவாக்கப்படுகின்றன என்பதை நான் அறியாமல் இருந்திருக்கிறேன். அவற்றைப் பார்த்தபோது பெருமிதத்தால் என் இதயம் பூரித்தது.

சுடுமண் பொருள் காட்சியிலிருந்து அப்பால் சென்றபோது திறந்தவெளியில் ஓர் அழகான கோவில், குளம் இருப்பது தெரிகிறது. அந்தக் குளத்தின் ஒரு பக்கத்தில் சந்தனம் அறைக்கும் கல் ஒன்று இருந்தது. கிராமங்களில் இயல்பாகவே, பக்தர்கள் குளத்தில் இறங்கி கை, கால்களை சுத்தம் செய்து கொண்டோ அல்லது குளித்துவிட்டோ தெய்வ அலங்காரத்திற்காக சந்தனக்கட்டையை வெண்ணைய் போல அரைக்கிறார்கள். குளத்தின் மறுபக்கத்தில் அழகான தூண்கள். அவற்றில் செதுக்கப்பட்ட மாடம் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாடம் குஜராத்தின் உட்புற கிராமங்களிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. குளத்தின் மூன்றாவது கரையில், அலங்காரமான மரக்கதவுகள், கோவில் மணிகள், தாழ்வாரத்தின் கூரையிலிருந்து தொங்கும் பித்தளை விளக்குகள், இவற்றுடன் ஒரு கோவில் அமைந்துள்ளது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததுமே, அது கோவில் அல்ல, அன்றாடக் கலைகளின் காட்சிசாலை என அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அங்கு, ஹுக்கா, சில்லம் (பழங்காலப் புகைபிடிக்கும் சாதனம்) பலவகையான பாத்திரங்கள், பானைகள், வாணலிகள், மணிகள், கிண்ணங்கள், விளக்குகள், பெண்கள் அணியும் நகைகள், தினசரி வழிபாடு செய்யும் தெய்வங்கள், நகைப்பெட்டிகள் போன்ற பலவற்றைக் காணலாம். சாதுக்கள் தண்ணீர் வைத்துக்கொள்ளும் சுரைக்குடுக்கை, மரப்பாதுகைகள், ருத்திராட்சமணிகள் ஆகியவற்றின் சேகரமும் அங்கே இருந்தன.

சம்ஸ்கிருதியில் இந்த அரும்பொருள் காட்சியகத்தை உருவாக்க இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மண்பொருள் கைவினைஞர் வந்து கூடியிள்ளனர். இந்த வளாகத்திற்கு அருகிலேயே அவர்களது இருப்பிடம் அமைந்துள்ளது. அங்கிருந்தே அவர்கள் பணிபுரிகின்றனர். அதே இடத்தில் மண்பொருள்களின் அனைத்து பாகங்களும் தயாராகின்றன. இந்த வளாகத்தின் உள்ளேயே வெளி நிகழ்ச்சிகளாக சங்கீதக் கச்சேரி, நாட்டியம், கிராமியக் கலை நிகழ்ச்சி, விரிவுரைகள், செய்முறைச் சோதனைகள், பட்டறை வேலைகள் ஆகியவற்றை நடத்த ஒரு சிறிய திறந்தவெளி அரங்கம் உள்ளது. மாணவர்கள், ஆர்வலர்கள் பயன்பெற இங்கு முறையாக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சர்வதேசக் கலைஞர்கள் அமைதியான சூழ்நிலையில் பணிபுரிய சம்ஸ்கிருதி வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதற்காக பதினாறு குடிசைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள கலைஞர்கள் தங்கள் ஆக்கத் திறமையை வெளிப்படுத்த நன்கு பணிபுரிகின்றனர்.

ஒரு குடிசையின் அருகே நடந்து சென்றபோது ஒரு ஸ்காட்டிஷ் பெண் கலைஞரைச் சந்தித்தேன். ஐ.நா.சபையின் கல்வி, அறிவியல் கலாசார அமைப்பு அவர் இங்குவர உதவி செய்திருக்கிறது. சம்ஸ்கிருதி உள்ளூரில் தங்குமிடம், உணவுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அடுத்த குடிசையில் ஒரு சிற்பி மரவேலை செய்து கொண்டிருந்தார். ஸ்காட்டிஷ் கலைஞர் சாயத்தில் உருவம் அமைப்பதிலும் துணியில் முடிச்சிடுவதிலும் ஈடுபட்டிருந்தார். ராஜஸ்தானத்துப் பெண்களின் ஒட்டுப்போட்ட வண்ண உடைகளைப் போன்ற அவரது ஒரு வண்ணச் சித்திரம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் சம்ஸ்கிருதி, கலைப் பாணிகளின் இணைப்பிற்கும் வாய்ப்பு தருகிறது. இங்கு இந்திய, மேலைநாட்டு கலைப்பாணிகள் ஒன்றுடன் ஒன்று கலக்கிறது. கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உள்ளூரிலும் தேசீய அளவிலும் காட்சிகள் வைத்து பிரபலப்படுத்துகின்றனர்.

புகழ்பெற்ற மண்பாண்டக் கலைஞர் கிரிஸ்டின் மைக்கேல் இங்குதான் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது மிகச்சிறந்த படைப்புகளின் கண்காட்சி முடிவடைந்து இந்தியாவின் இதர இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்தச் சமயம் சென்னையிலும் அவரது கைவினைப் பொருள்கள் காட்சி நடைபெற்றது. கலைஞர்களின் படைப்புகளை வெளியே கொண்டுவந்து காட்சிகளில் வைத்து அவர்களுக்கு மக்களிடையே அங்கீகாரமும், விளம்பரமும் கிடைக்கச் செய்யும் இந்தமுறை என் மனத்தை மிகவும் கவர்ந்தது. இதனிடையில் குழந்தைகளுக்காக கலைத்தொழில் பட்டறையும், செயல்முறைக்கான வசதிகளும் இங்கு செய்து கொடுக்கப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க முயற்சி. இதனைப் பின்னாலிருந்து இயக்குகிற திருமதி. சஹாயே கலைத்துறையுடன் நீண்டகாலத் தொடர்பு உள்ளவர். இதுபோன்ற ஒப்புயர்வற்ற ஒரு கலை அமைப்பை நிர்வாகம் செய்வதில் உறுதியும் திறமையும் உள்ளவர்.

இது ஒரு அபூர்வமான நிறுவனம். டில்லிக்குப் போகும் ஒவ்வொருவரும் இதைத் தவறாமல் பார்க்கவேண்டும். குதுப்மினாருக்கு அருகில் இது அமைந்துள்ளது.

ஆங்கில மூலம்: கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com