வரமா, சாபமா?
குழந்தைகளே, போன மாதக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? அதைக் கடைசியில் பார்ப்போம். முதலில் ஒரு கதை...

ஒரு ஊரில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் ஒரு முட்டாள். பேராசைக்காரனும், முரடனும் கூட. எப்போதும் காட்டுக்குள்ளே செல்லாமல் அதன் எல்லையிலே விறகுகளை வெட்டுவான். பிறகு தான் கொண்டு வந்திருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவான். மாலையில் விறகைச் சந்தைக்கு எடுத்துக் கொண்டு போய் விற்பான். அவன் சொன்ன விலைக்குத்தான் விறகுக் கட்டை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அடித்து விரட்டுவான். அவன் முரடன் என்பதால் மக்களும் அவனுக்கு அஞ்சினார்கள்.



ஒருநாள் அவன் காட்டுக்கு விறகு வெட்டப் போனான். எப்போதும்போல் அல்லாமல் நடுக்காட்டில் போய் விறகு வெட்ட ஆரம்பித்தான். ஒரு மரத்தை அவன் வெட்ட ஆரம்பித்ததும், "வெட்டாதே! இது என் வசிப்பிடம். அதற்குப் பதிலாக உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்று கூறியபடித் தோன்றியது ஒரு தேவதை. சற்று யோசித்த விறகுவெட்டி, "நான் எது கேட்டாலும் தருவீர்களா?" என்று கேட்டான்.

"நிச்சயம்" என்றது தேவதை.

உடனே அவன், "எனக்கு நடந்து நடந்து கால்கள் வலிக்கின்றன. எனவே வேகமாக நடக்க மேலும் இரண்டு கால்கள் வேண்டும். அது போல விறகு வெட்டி வெட்டிக் கைகள் நோகின்றன. அதனால் வேகமாக விறகு வெட்ட மேலும் இரண்டு கைகள் வேண்டும். எனது கோடாரியும் தங்கக் கோடாரியாக ஆக வேண்டும்" என்று கேட்டான்.

"அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டு மறைந்தது தேவதை.

உடனே விறகு வெட்டிக்கு மேலும் இரண்டு கைகள் முளைத்தன. அதில் பளபளத்தது தங்கக் கோடரி. அதுபோல மேலும் இரண்டு கால்கள் தோன்றின. விறகுவெட்டிக்கு ஒரே ஆனந்தம். தனக்குக் கிடைத்த வரத்தைப் பற்றிச் சொல்ல வேக வேகமாக ஊரை நோக்கிச் சென்றான்.

வழியில் கிராமத்துச் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். நான்கு கைகளுடனும், நான்கு கால்களுடனும், உயர்த்திப் பிடித்த பளபளப்பான கோடரியுடனும் விறகுவெட்டி வேகவேகமாக வந்து கொண்டிருப்பதைத் தொலைவிலிருந்து பார்த்தவர்கள், ‘ஏதோ அரக்கன்தான் நம்மைக் கொல்ல வருகிறான்’ என நினைத்தனர். ஊருக்குள் ஓடிப் போய்த் தகவல் கூறினர்.

கம்புகளையும், கற்களையும் எடுத்துக்கொண்டு திரண்ட ஊர்மக்கள், விறகுவெட்டி தங்களிடம் வந்து நடந்ததைச் சொல்வதற்கு முன்னரே அவனைக் கற்களாலும், கழிகளாலும் தாக்கிக் காயப்படுத்தினர். மீண்டும் காட்டை நோக்கி ஓடிப் போனான் விறகுவெட்டி. பேராசையும் முட்டாள்தனமும் கொண்டவர்களுக்கு வரங்கள் கூட சாபங்கள்தான் இல்லையா?

சரி. இனி போன மாதக் கதையில் மன்னன் கேட்ட கேள்விக்கான விடைகளைப் பார்ப்போமா?

மன்னன் கேட்ட கேள்விகள்: உலகத்திலேயே வேகமானது எது? கொழுப்பு அதிகமானது எது? மென்மையானது எது? சிறப்பானது எது? உயர்வானது எது?

சேவகன் சொன்ன பதில்கள்:
உலகத்திலேயே வேகமானது, எப்போதும் சிந்தித்தபடியே இருக்கும் மனித மனம்; கொழுப்பு அதிகமானது, யாரையும் தராதரமின்றிப் பேசிவிடும் அவனது நாக்கு; உலகத்திலேயே மிகவும் மென்மையானது, ஒரு குழந்தையின் ஸ்பரிசம்; உலகத்திலேயே மிகவும் சிறப்பானது, உண்மையையே பேசி வாழ்வது; உலகத்திலேயே மிக மிக உயர்வானது, இரக்கத்தோடு அடுத்தவருக்கு உதவிசெய்வது.

சரிதானே குழந்தைகளே! அடுத்த மாதம் சந்திக்கலாம்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com