இதெல்லாம் நல்லதுங்க....
நம்ம கிச்சன்ல இருக்கற பல சரக்குகள் (பலசரக்குதாங்க) மருந்தாகவும் பயன்படும், தெரியுமா? இதை முந்தியெல்லாம் பாட்டி வைத்தியம், கைவைத்தியம் அப்படின்னு சொல்வாங்க. நீங்களும் முயற்சி செய்யுங்க.

மஞ்சள் பொடி
இது ஒரு அருமையான நோய்த் தடுப்பு குணமுள்ளது. ஒரு கோப்பைப் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், கொஞ்சூண்டு பனங்கற்கண்டு சேர்த்து நல்லாக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூட்டில் ராத்திரி படுக்கும் முன் மூணு நாள் குடிச்சா, வறட்டு இருமல், தொண்டைக் கட்டு குணமாகும்.

மிளகு
முக்கியமான மருத்துவப் பொருள். ராத்திரியெல்லாம் லொக்லொக்குன்னு இருமுதா? ஒரு கரண்டியில 2 தேக்கரண்டி நெய் விட்டு, 7 மிளகைச் சேர்த்துச் சூடாக்கி நெய்யில் மிளகு பொரிந்ததும் இறக்கி, இளஞ்சூட்டில் வாயில் இட்டு மென்னு முழுங்குங்க. இருமல் நின்னு போயிடும். நிக்கலியா? மரியாதையா டாக்டர்கிட்ட போங்க!

சீரகம்
தினமும், 4 கோப்பை தண்ணீரில் 4 தேக்கரண்டி சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். இந்தத் தண்ணியை அப்பப்ப ஒரு முழுக்கு குடியுங்க. ஜீரணம் நல்லா ஆயிடும். பொதுவாக ஆரோக்கியத்துக்கும் நல்லது.

ஓமம்
ஒரு வெத்தலையில 1/2 தேக்கரண்டி ஓமம், 2 கல் உப்பு, ரவையூண்டு பெருங்காயம் வெச்சு நல்லா மென்னு முழுங்கிடுங்க. ஆசைப்பட்டு தின்ன எக்ஸ்ட்ரா பீட்சா அப்படியே செரிச்சுடும், வயித்து வலி தீரும். சளி, கபத்துக்கும் நல்லது.

வெந்தயம்
1 தேக்கரண்டி வெந்தயத்தை 1 கோப்பை தண்ணியில முதல்நாள் ராவே ஊறவையுங்க. மறுநாள் நீங்க எப்ப எந்திரிச்சாலும் சரி, வெறும் வயித்தில குடியுங்க. சர்க்கரை நோய் கட்டுப்படும். என்ன, கொஞ்சம் கசக்கும். அதனால என்ன, நல்லதுன்னா நீங்க எப்படி இருந்தாலும் குடிப்பீங்கதானே.

மல்லி
பித்தத்தைப் போக்கும் அருமருந்து. மல்லி (தனியா) 1/2 கிண்ணம், மிளகு 1 தேக்கரண்டி, சுக்கு 1 துண்டு மூணையும் பொன்போல வறுத்து, பொடி செய்து வச்சிக்கிட்டு, அப்பப்ப இந்தத் தூள்ல டீ போட்டுக் குடியுங்க. இனிப்புக்குக் கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி
ஜீரணத்துக்குக் கைகண்ட மருந்து. தீபாவளி சமயத்துல கன்னாபின்னான்னு தின்னுப்புட்டு இதுல செஞ்ச லேகியம்தானே முழுங்கறோம். இதைச் சாப்பிட்ட பின்னால் யாராவது உங்களைப் பாத்து ‘இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கே’ன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்க. மெய்தானே!

சித்தர் பாடல் ஒன்றில்

காலையில் இஞ்சி
கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
மண்டலம் உண்டால்
கோலூன்றி நடந்த கிழவனும்
கோல் வீசி நடப்பான் காண்

அப்படீன்னு பாடியிருக்கார்னா பாருங்களேன்.

வசந்தா லக்ஷ்மண்,
ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com