நோபெல் பரிசு வாங்கியவர்கள் மிக அதிகமானோர் எங்கிருக்கிறார்கள் என்று பார்த்தால் அது அமெரிக்காவாகத்தான் இருக்கும். புதுமை படைப்பதற்கான சூழலும் சுதந்திரமும் இருக்கும் காரணத்தால் அதற்கான திறமும் அறிவும் பெற்றவர்கள் உலகெங்கிலுமிருந்து அங்கே வந்து குவிகின்றனர். அதனால்தான் "புதியன படைத்தலில் நமது தலைமுறையின் ஸ்புட்னிக் கணத்தைக் கொண்டுவர வேண்டும்" என்று அதிபர் ஒபாமா செல்லும்போது நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். பெட்ரோலியத்துக்கு மாற்றாக சுத்தசக்தி எரிபொருள்களைக் கண்டுபிடித்தல், அதிவிரைவு ரயில்களைப் பெரும் எண்ணிக்கையில் அறிமுகப்படுத்துதல் ஆகிய எல்லாமே அவசரத் தேவைகள்தாம். தனது ஸ்டேட் ஆஃப் த யூனியன் உரையில் இவற்றை ஒபாமா அழுத்தந் திருத்தமாகக் கூறியிருக்கிறார். 'Brave New World' ஆக அமெரிக்கா இருக்க வேண்டுமானால் இவை எல்லாவற்றிலுமே உடனடி கவனம் செலுத்தி ஆகவேண்டும்.
*****
ஜனவரி 26 அன்று இந்தியாவெங்கும் குடியரசு நாள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் மஹாராஷ்டிரத்தில் மன்மாட் அருகே சிலர் அடிஷனல் கலெக்டரான யஷ்வந்த் சோனாவானேவின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள். அவர் செய்த தவறு, மண்ணெண்ணெய் மஃபியா டேங்கர் லாரியிலிருந்து மண்ணெண்ணெய் திருடுவதைத் தனது செல் ஃபோனில் விடியோ எடுத்ததோடு அல்லாமல் ரெய்டு செய்யப் போலீஸ் அதிகாரிகளைக் கூப்பிட்டதுதான். போலீஸ் வந்தபோது யஷ்வந்த் உடலின் கரிக்கட்டைதான் அகப்பட்டது. நாட்டின் மிக உயர்ந்த நிலையிலிருந்து மிகக் கீழ்மட்ட மனிதர்கள் வரை அரசியல்வாதிகளின் பாதுகாப்போடு தமது சட்ட மீறுதல்களைத் தொடர்ந்து செய்கிறார்கள். அப்படியே அரசியல்வாதிகளின் ஊழல்கள் அம்பலமானாலும் தமது தடயங்களை அழிக்குமளவுக்குப் பதவியில் நீடிக்கக் காலம் தரப்படுகிறது. வேறு வழியே இல்லாமல் உச்சநீதி மன்றம் போன்றவை கேள்வி கேட்டால் மட்டுமே 'இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று வாக்குமூலம் கொடுத்தபடியே அவர்கள் தமது இஷ்டப்படி பதவி விலக அரசு அனுமதிக்கிறது. பத்து புள்ளிகளில் 2.9 புள்ளிகள் மட்டுமே எடுத்து உலக அளவில் லஞ்சம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் மிக மோசமான 88வது நிலையில் இந்தியா இருக்கிறது. சுவிஸ் வங்கிகளில் ஏராளமான இந்தியக் கருப்புப் பணம் இருக்கிறதென்றால் வரி ஏய்ப்பு, லஞ்சம், ஊழல் என்று எல்லாமே பொதுமக்களை ஏமாற்றிய பணம்தான். "அந்த விவரங்களை நாம் கேட்டால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். யாருடைய பணம் வெளிநாட்டு வங்கியில் இருக்கிறது என்ற பட்டியலை வெளியிட முடியாது" என்று நாட்டின் நிதியமைச்சர் சற்றும் முகத்தில் சலனமில்லாமல் ஒரு நீண்ட அறிக்கையைத் தொலைக்காட்சியில் வாசிக்கிறார். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
*****
"காய்கறி விலை கைக்கெட்டாத உயரத்துக்குப் போய்விட்டது. காய்கறி பழங்களைக் குறைத்துக் கொண்டு, சோறு அதிகம் சாப்பிடுவதால் என் ரத்தத்தில் சர்க்கரை கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது" என்று ஒருவர் கூறியிருந்தது இந்திய செய்தித் தாளில் வந்தது. அலுவலகத்தில் கிடைக்கும் ஒரே வருமானத்தில் நியாயமாக வாழ்பவர்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு எல்லாப் பொருட்களும் இந்தியாவில் விலையேறிவிட்டன. நடுத்தர வருமானக் குடும்பம் என்று நினைக்கக் கூடியவர்களும் திணறுகிற காலத்தில் ஏழை எளியவர்கள் என்ன செய்வது? பெரிய இடத்தில் இடத்தில் இருப்பவன் பெரிய அளவில் திருடுகிறான், நான் என் வயிற்றை நிரப்பச் சிறிய தவறு செய்தால் என்ன என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. வன்முறை, பாலியல் குற்றங்கள் என்று பார்க்கும் செய்திகள் சினிமாவில் வருவதைவிட திடுக்கிடச் செய்பவையாக இருக்கின்றன. நல்ல உள்ளம் படைத்தவர்கள் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். வேறு மாற்று இருப்பதாகத் தெரியவில்லை.
*****
"எனக்கு இந்தியப் பாரம்பரியம் தெரியும். ஆபாசமில்லாத நகைச்சுவை எனது குறிக்கோள்" என்று கூறும் தயா லக்ஷ்மிநாராயணன் (பார்க்க: நேர்காணல்) போன்ற இரண்டாம் தலைமுறை இந்திய அமெரிக்கர்கள் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். கர்நாடக இசையில் பொன்விழா கண்டுவிட்ட பம்பாய் சகோதரிகளின் நேர்காணல் ரசிக்கத் தக்கது. சோமலே அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு, வேறு கோணங்களில் வாழ்க்கையைப் பார்க்கத் தூண்டும் சிறுகதைகள், கவிதைகள் என்று இந்த இதழ் உங்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
வாசகர்களுக்கு வேலன்டைன் நாள் வாழ்த்துக்கள்.
பிப்ரவரி 2011 |