புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பத்தாண்டுகள் தாண்டி பதினோராம் ஆண்டில் காலைப் பதித்த தென்றல் இதழுக்கு மனமார்ந்த ஆசிகள். 'இசையுதிர் கால'ச் செய்திகள் சுவையாக உள்ளன. அறுபதில் என்னைப் பெண் பார்க்க வந்த என் கணவர், நிச்சயமானவுடன் 'திக்குத் தெரியாத காட்டில்' பாடலை 'காடு மேடு மலை தாண்டி கடுகி வந்தேன் உன்னைப் பார்க்க' என்று கூடச் சேர்த்துப் பாடி அசத்திவிட்டார். ஜி.என்.பி. எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்த பாடகர். அவருடைய சிஷ்யைகளான ராதா-ஜயலக்ஷ்மி இருவருமே அவரைப் பின்பற்றிப் பாடுவதைக் கேட்டு ரசித்துள்ளோம். வற்றாயிருப்பு சுந்தரின் கடைசிப் பக்க 'அவர்களுக்கு நன்றி' இறுதி வரிகளைப் படித்தவுடன் என்னால் என் கண்ணீரை அடக்க முடியவிலை. அத்தனையும் உண்மை.
கமலா சுந்தர், வெஸ்ட் விண்ட்சர், நியூஜெர்ஸி
*****
நான் சென்னையில் வசிக்கும் தமிழ் எழுத்தாளன். சான் ஹோசேவிலுள்ள மகன் வீட்டுக்கு அவ்வப்போது வருவேன். வரும்போதெல்லாம் கண்டிப்பாகத் தென்றல் படிப்பேன். அதில் உள்ள விஷயங்களின் வகைகளும் விரிவும் என்னை வியக்க வைக்கின்றன. படிக்கும்போது தமிழ் நாட்டில் இருப்பது போல உணர்கிறேன்.
எஸ்.எல்.வி. மூர்த்தி, சான் ஹோசே, கலிஃபோர்னியா
*****
பத்தாண்டு நிறைவுகண்ட தென்றலுக்கு வாழ்த்துகள். தமிழ் இதழ்களில் வெளிவராத பலவற்றைத் தென்றலில் படித்து மகிழ்கிறோம். சி.கே. கரியாலியின் நினைவலைகள் தொடர் அற்புதமாக உள்ளது. பார்க்கவே முடியாத பல இடங்களுக்கும் அவர் கூடவே பயத்தோடும், ஆச்சரியத்தோடும், பக்தியோடும் நாமும் நேரிலேயே சென்றுவந்த உணர்வு. தமிழ் வடிவாக்கம் செய்த திருவைகாவூர் கோ. பிச்சை அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தென்றலுக்கும் அதன் அனைத்து வாசகர்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்.
மைதிலி பார்த்தசாரதி, பாஸ்டன், மசாசூசெட்ஸ்
*****
யாரையா இந்த அபர்ணா பாஸ்கர்! இத்தனை நாளா எங்கிருந்தீர்கள்? என்ன சரளமான, யதார்த்தமான நடை! ஒரு பாக்கியம் ராமசுவாமியோ, கிரேசி மோகனோ வரிந்து கட்டிக்கொண்டு எழுதியது போலிருக்கிறது. ஒரு 'வாழைக்கன்னு' வைப்பதில் இத்தனை சிரிப்பைக் கொண்டு வரமுடியுமென்று நான் எதிர் பார்க்கவே இல்லை. கொஞ்சநேரம் TVயில் Seinfeld show பார்த்துக்கொண்டிருந்தது போல் ஒரு திகைப்பு. இங்கு நம்மவர்கள் தமிழில் படித்துச் சிரிப்பதற்குக் கொஞ்சம் பஞ்சம்; நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
கோம்ஸ் கணபதி, டென்னஸீ
*****
அமெரிக்காவுக்குப் போய்விட்டு இன்றுதான் வந்தேன். வந்ததும் தென்றலைப் படிக்க ஆரம்பித்தேன். தென்றல் பத்தாண்டுகளை நிறைவு செய்துவிட்டது என்பதைக் கவனித்தேன். வாழ்த்துக்கள். புகழ்பெற்ற ஓவியர் கோபுலுவின் நேர்காணலையும் மிகவும் ரசித்தேன். தென்றல் ஆசிரியர் குழுவுக்கும், ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கும் விழாக்கால வாழ்த்துக்களும், வளமான புத்தாண்டுக்கு வாழ்த்துக்களும்.
அ. முத்துலிங்கம், கனடா.
*****
டிசம்பர் மாதத் தென்றல் இதழில் அபர்ணா பாஸ்கர் எழுதிய 'வாழைக் கன்னு' கதை மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. நடைமுறைத் தமிழில் அவர் எழுதியிருந்தது சிறப்பு. இது கதையா அல்லது உண்மைச் சம்பவமா என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு அவர் எழுதியிருந்தார். அவருக்கும், தென்றலுக்கும், வாசகர்களுக்கும் புது வருட வாழ்த்துகள்.
திருக்கோடிக்காவல் எஸ். வைத்தியநாதன், பிரான்க்ஸ், நியூயார்க் |