திருவண்டம்
டாக்டர் யோகநாதன் நியூரோ பிஸியாலஜி நிபுணர். அமெரிக்காவில் தனது ஆய்வகத்தில் மனிதனின் பிரக்ஞை குறித்து ஆய்வுகள் நடத்திவருகிறார். கடுமையான காவல் கொண்ட அவரது ஆய்வுக்கூடத்துக்குள் ஒரு நாள் முதியவர் ஒருவர் தோன்றுகிறார். அவரைப் பார்த்தால் யோகநாதனுக்கு யாழ்மண்ணில் வாழ்ந்து மறைந்த தனது தாத்தாவின் நினைவு வருகிறது. அந்த முதியவருக்குப் பின்னால் மற்றொருவர் நிற்பதும் தெரிகிறது.

தான் செய்துவரும் ஆய்வுகளைப் பற்றி அவருக்குத் தெரிந்திருப்பது யோகநாதனுக்கு வியப்பை அளிக்கிறது. முதியவர் கேட்கவே யோகநாதன் உற்சாகமாகத் தன் ஆய்வின் நோக்கம் குறித்து விளக்குகிறார்:

கனவிலும் நினைவிலும் மூளைப் பகுதிகளுக்குள் செய்திப் பரிமாற்றம் நடந்தவண்ணமே இருக்கிறது. நாற்பது ஹெர்ட்ஸ் மின்வீச்சில் நியூரான் அலைகள் மூலம் இருபத்து ஐந்து மில்லி செகண்டுகளுக்கு ஒருமுறையாக இது நிகழ்கிறது. இதுதான் பிரக்ஞையா என்று கூறமுடியவில்லை.

அதைவிட வியப்பு என்னவென்றால் இந்த நியூரான்களிடையே யான சிந்தனை ஓட்டம், அதிநுண் சக்தித் துகள்களான குவாண்டம் தேற்றத்துக்குப் பொருந்தி வருவதாக இருக்கிறது. நம்முள் நாமறியாப் புதுச் சிந்தனைகளை புறத்தே இருக்கும் குவாண்டம் துகள்களே உண்டாக்குகின்றனவோ?

அப்படியானால், இந்தத் தூண்டுதலின் மையம் மூளைக்குள் எங்கே தோன்றுகிறது?

"என் கருத்து அறிவியலார் எர்வின் ஷ்ரோடிங்கர் மற்றும் ரோஜர் பென்ரோஸ் போன்றோர் கருத்துகளை ஒட்டியதே. மேலும் நியூரானின் சைட்டோஸ்கெலிடன் என்ற உட்கட்டமைப்பின் பகுதியான மைக்ரோட்யூபுள் என்ற அதிநுண்குழல்களே இந்தக் குவாண்டம் பரிமாற்றத்தின் மையம் என்று கருதுகிறேன்" என்று சொல்கிறார் யோகநாதன்.

மேலே...

This life of yours which you are living is not merely a piece of this entire existence, but in a certain sense the 'whole'; only this 'whole' is not so constituted that it can be surveyed in one single glance.
- Erwin Schrodinger, 1925.

கண்டதை அன்றுஅன்று என விட்டுக் கண்ட சத்தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் பண்டணைந்த
ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட
சானத்தில் தீர்விடம் போற்றான்.
- மெய்கண்டதேவர் (சிவஞானபோதம் - புருவமத்தியில் தேனித்துத் தெளியும் பதிஞானத்தைச் சுட்டவந்த ஒன்பதாம் நூற்பாவின் எ.கா. செய்யுள்)

'ஐயா, தாங்கள் இருவரும் யார் என்று சொல்லுங்களேன். எங்கோ நான் நன்கறிந்தவர் போல் தோன்றுகிறது.'

'சொல்கிறோம், சற்றே பொறுத்திருப்பீர் யோகரே. அதற்குமுன் நும் தேடலின் காரணத்தைச் சொல்லுங்கள். இதை அறிந்து கொள்வதால் என்ன பயன் உமக்கு?'

'ஐயா, இதன் பயன்கள் அளவிடற்கரியன. முதலில் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்ற இயந்திரங்களுக்குச் செயற்கை அறிவைப் பொருத்தும் துறை; அப்படியே, ஓருடலின் டிரில்லியன் கணக்கிலான செல்தகவல்களைக் குவாண்டம் கணிணியில் மின்வருடிச் சேகரித்துத் தொலைதூரங்களுக்குத் தொலைநகல் அனுப்புவது போல் அனுப்பலாம். இது சாத்தியமென்றால் அண்டப்பயணம் மட்டுமின்றி, காலத்தில் பயணிக்கவும் இயலும். மேலும் க்ளோனிங் என்ற ஓருடலின் உயிர்ச்செல்களின் பிரதி மூலம் மற்றோர் உடலைத் தயாரிக்கும் துறை; வயதாகிவிட்டால், பழைய உடலின் நினைவுகளுடன் கூடிய மூளைச்செல்களின் நகலெடுத்து, மற்றொரு இளைய உடலை க்ளோனிங் செய்து பொருத்திக் கொண்டு ஆயுளை நீட்டிக்கும் துறை, பொதுவாய்ச் சொன்னால் மனிதன் சாகாமல் நீடித்திருக்க வேண்டுவதன் தூண்டுதலே இந்தத் தேடலின் இலக்கு என்று சொல்லலாம்.'

'சாகாமலிருப்பதும் சாத்தியம்தான். ஆயின் நும்முறையில் அல்ல. யோகத்தால் அன்றி அது நடவாது மகனே. அதுவே பவனவன் வைத்த பழவழி. அதை உரைத்துப் போகவே உம்மைக் காண வந்தோம். அ·தென்ன காலப்பயணம்? அதையும் விரித்துரைக்க!'

'ஐயா, இந்த ஆய்வும் ஒரு தேற்றமாகவே நிற்கிறது. இதன் பெயர் க்வாண்டம் டெலிபோர்ட்டேஷன். ஒரு நொடியின் மிகச்சிறிய பரிமாணத்தில், ஒன்றின்பின் நாற்பத்துமூன்று பூச்சியம் கொண்ட இலக்கத்தில் ஒரு பங்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த உறையும் நொடித் துளியில், குவாண்டம் ·போம் என்ற நுண்துகள் படுகையூடே, அண்டத்து எச்சத்தூடே, ஏற்படும் அதிநுண்துளை வழியே மின்னணுப் பரிமாற்றத்தில் கடந்து சென்றால் காலப்பயணத்தில் முன்னோக்கி யும் பின்னோக்கியும் மட்டுமின்றி அண்டங்களையும் கடக்கலாம் என்ற தேற்றம். அறிவியலார் எவெரெட் எடுத்து ரைத்த மல்ட்டிவெர்ஸ் என்ற முடிவிலாப் பன்னுலகக் கோட்பாடும் இதனால் சமீபத் தில் வலுவடைந்து வருகிறது. சொல்லப் போனால் இங்கே காலம் என்பதே பொருளற்றுப் போகிறது என்றும் சொல்லலாம்.'

'யோகரே, செல்லும் அளவில் சிந்தை செலுத்தியுள்ளீர். பரார்த்தத்தின் பரார்த்தமாய், அணுவின் அணுவாய் யோக உச்சத்தில் உம்முளே உம் மூலத்தைக் கண்டுணர்வதால் மட்டுமே அவ்வண்ணம் பயணிக்க இயலும். யாம் வந்த வழியும் அ·தே.'

'நெற்றிக்கு நேரே
புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க
ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப்
பரமன் இருந்திடம்
சிற்றம்பலமென்று
சேர்ந்து கொண்டேனே.

அடங்கு பேரண்டத்து அணு
அண்டஞ் சென்றங்கு
இடங்கொண்டதில்லை
இதுவன்றி வேறுண்டோ
கடந்தோறும் நின்ற
உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான்
திருவடி தானே!’
என்று பாடி, பின்னால் நின்றவரை அழைத்தார் முதியவர். 'என்ன தோழரே, நீரும் சொல்லும்! அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கத்தை, அந்த வளப்பெரும் காட்சியைக் கண்டு அதிசயித்துப் பாடி வந்தீரே, அந்த அரா முற்றுஞ் சூழ் அகலிட வழியைப் பற்றி நீரே சொல்லும்.'

'மாலவன் மிகுதி. ஆதிசேடம் என்பர் மறையோர். அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்கள் எல்லாம் அண்டங்களாக என்று எம் அணுக்கர் பரஞ்சோதியார் கண்டு பாடுவதுபோல் எண்ணிலி கோடி பிரம்மாக்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், எட்டின் வடிவைப் போலொரு முடிவற்ற அரவரசின் திருவனந்தச்சுழல்' என்று சொல்லி அவரும் முன்வந்து நின்றார்.

'ஆம் மகனே! அதனூடே இப்படி ஒரு பயணமோ, சாகாமலிருப்பதோ அறிவியல் துணை கொண்டு மட்டும் சாதித்தல் இயலாது. நூலுணர்வு உணராத நுண்ணியோன் வழியது.'

யோகநாதன் பிரமித்து நின்றார். இது கனவேயாயினும் இவ்வளவு கோர்வையாய்த் தொடர்வது கனவில்லை போலும் தோன்றியது.

'ஐயா, தாங்கள் சொல்லும் படுக்கவைத்த நிலையில், பாம்பு சுற்றியது போன்ற எட்டின் வடிவம், லெம்னிஸ்கத் என்ற இன்·பினிடி யின் சின்னம். மேலும் சொன்னவை யாவும் உடன் விளங்காவிடினும் பின்னர் யோசிக்கி றேன். தாங்கள் யார் என்று இப்போதாவது சொல்லுங்கள்.'

ஜாவா குமார்

© TamilOnline.com