நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி
பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடன் 2010 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெறுகிறார். அவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. நவீன இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக மதிக்கப்படும் நாஞ்சில்நாடன், கன்னியாகுமரி மாவட்டத்தின் வீர நாராயண மங்கலத்தில் பிறந்தவர். தலைகீழ்விகிதங்கள் என்னும் முதல் நாவல் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கை கவனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். மரபிலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் தோய்ந்தவர். நாஞ்சில்நாடனது அங்கதம் கலந்த எழுத்து நடை, தனிச்சிறப்பு வாய்ந்தது. தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், வாக்குப்பொறுக்கிகள், பேய்க்கொட்டு போன்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் முக்கியமானவை. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, தீதும் நன்றும் போன்ற தனது கட்டுரைத் தொகுப்புகளில் தனது சமூக அக்கறையைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மாமிசப்படைப்பு, என்பிலதனை வெயில் காயும், மிதவை, எட்டுத் திக்கும் மதயானை என ஏராளமான நாவல்களை எழுதியிருக்கிறார். மண்ணுள்ளிப் பாம்பு என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.



© TamilOnline.com