வீரத்துறவியின் வாழ்வில்
கிண்டல்
ஒருமுறை விவேகானந்தர் வடநாட்டில் ரயிலில் பயணம் போய்க்கொண்டிருந்தார். அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சில ஆங்கிலேயர்களும் இருந்தனர். விவேகானந்தரின் தோற்றம் மற்றும் உடையைப் பார்த்து யாரோ ஒரு பரதேசி என்று நினைத்த அவர்கள், ஆங்கிலத்தில் அவரைக் கிண்டல் செய்தவாறே இருந்தனர். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது அவர்கள் எண்ணம்.

விவேகானந்தர் அவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டே வந்தார். ஆனால் பதில் பேசாவில்லை. ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது அந்த நிலைய அதிகாரியை அழைத்த அவர், குடிப்பதற்கு தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

விவேகானந்தர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதைக் கேட்ட ஆங்கிலேயர்கள் "உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் போலிருக்கிறதே, நாங்கள் பேசியதற்கு நீங்கள் ஏன் பதில் எதுவும் கூறவில்லை" என்று கேட்டனர். அதற்கு விவேகானந்தர் புன்சிரிப்புடன், "நான் முட்டாள்களைப் பார்ப்பது ஒன்றும் இது முதல் முறையல்லவே" என்றார்.

*****


அன்புக்கு ஏது வேலி
ஒருமுறை சுவாமி விவேகானந்தர் கேத்ரி சமஸ்தானத்திற்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு நண்பரின் வீட்டில் தங்கியினார். மக்கள் பலரும் வந்து அவரைப் பார்த்து உரையாடிவிட்டுச் சென்றனர். அதனால் அவர் மிகவும் களைப்புற்றிருந்தார். அங்கே ஓர் ஏழைக் குடியானவர் வந்தார். சுவாமிகளின் களைப்பை உணர்ந்த அவர், தான் கொண்டு வந்த ரொட்டியைக் கொடுக்க ஆசைப்பட்டார்.

சுவாமி விவேகானந்தர் அவரிடம் சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். தாழ்த்தப்பட்டவரான தான், அவருக்கு உணவளித்தால் தண்டனைக்கு ஆளாக நேரலாம் என்று கூறினார். ஆனால், விவேகானந்தர் அவரிடம், அதுகுறித்து அஞ்சத் தேவையில்லை, எது கொடுத்தாலும் தான் அன்போடு ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான அவர் கொடுத்த சப்பாத்திகளை அன்போடு ஏற்றுக் கொண்டார்.

*****


இதனை இவ்வாறு இவன் முடிக்கும்....
நரேந்திரன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். அந்நாட்களில் அந்தக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அல்லது கட்டணத் தள்ளுபடி கொடுப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்யுமுன் அந்த மாணவர் தன் ஏழைமையை நிரூபிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் தீர்மானம் எடுப்பது ராஜ்குமார் என்ற முதுநிலை ஊழியரின் கையில் இருந்தது. பரீட்சை வந்துவிட்டது.

நரேந்திரனின் வகுப்புத் தோழனான ஹரிதாஸ் சட்டோபாத்யாயா பெரும் பணநெருக்கடியில் இருந்தான். அதுவரை சுமந்துபோன கட்டணங்களையோ, தேர்வுக் கட்டணத்தையோ செலுத்த முடியாத நிலை. என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன் என்பதாக நரேந்திரன் நண்பனுக்குச் சொல்லியிருந்தான்.

ஓரிரண்டு நாட்களுக்குப் பின் ராஜ்குமாரின் அலுவலக அறையில் ஒரே மாணவர் கூட்டம். அதில் நுழைந்து நரேந்திரன் சென்றான். "ஐயா, ஹரிதாஸால் கட்டணங்களைச் செலுத்த இயலாது. அவற்றுக்குத் தள்ளுபடி கொடுப்பீர்களா? அவன் பரீட்சை எழுதாவிட்டால் வாழ்க்கையே பாழாகிவிடும்."

"உன்னுடைய அதிகப்பிரசங்கித்தனமான பரிந்துரையை யாரும் கேட்கவில்லை. நீ போய் உன் துருத்தியை ஊது. கட்டணம் செலுத்தாவிட்டால் பரீட்சைக்கு அனுப்பமுடியாது" என்றார் ராஜ்குமார். நரேந்திரன் அங்கிருந்து அகன்றான். நண்பருக்குப் பெருத்த ஏமாற்றம்.

"கிழவர் அப்படித்தான் பேசுவார். நீ தைரியம் இழக்காதே. நான் ஏதாவது வழி கண்டுபிடிக்கிறேன்" என்றான் நரேந்திரன்.

மாலை கல்லூரி முடிந்தது. நரேந்திரன் வீட்டுக்குப் போகவில்லை. கஞ்சா பிடிப்பவர்களின் கூடாரம் ஒன்று இருந்தது. இருள் கவியும் வேளையில் ராஜ்குமார் அங்கே வருவது தெரிந்தது. திடீரென்று அவர்முன்னே போய் வழிமறைத்து நின்றான் நரேந்திரன். அந்த நேரத்தில் அங்கே நரேனை எதிர்பார்க்காவிட்டாலும் ராஜ்குமார் அமைதியாகக் கேட்டார் "என்ன விஷயம் நரேன்? நீ இங்கே!" என்றார்.

மறுபடியும் பொறுமையாக ஹரிதாஸின் நிலைமையைச் சொன்னான் நரேன். அதுமட்டுமல்ல, இந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டால் கஞ்சாக் கூடாரத்திற்கு ராஜ்குமார் வருவது கல்லூரியில் விளம்பரமாகும் எனவும் தெளிவுபடுத்தினான். "எதுக்கப்பா இப்படிக் கோபிக்கிறாய்? செய்துவிடுவோம். நீ சொல்லி நான் மறுக்கமுடியுமா" என்றார் முதியவர்.

பழைய கட்டணத்தைக் கல்லூரியே கொடுக்கும், தேர்வுக்கானதை மட்டும் ஹரிதாஸ் செலுத்தவேண்டும் என்று முடிவாயிற்று. நரேன் அவரிடமிருந்து விடை பெற்றான்.

*****


பிரம்ம ராட்சஸனுக்கு அஞ்சாத நரேந்திரன்
சிறுவன் நரேந்திரன் இருந்த சமயம். ஒருமுறை வீட்டருகில் இருந்த மாமரத்தில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அருகில் குடியிருந்த வீட்டுக்காரருக்கு சிறுவர்களின் கூச்சல் பயங்கரமான எரிச்சலைத் தந்தது. அதனால் "இந்த மரத்தில் ஒரு பிரம்ம ராட்சஸன் குடியிருக்கிறான். மரத்தில் ஏறி விளையாடினால் உங்களைப் பிடித்துத் தின்று விடுவான். உடனே ஓடிப் போய்விடுங்கள்" என்று சொல்லி பயமுறுத்தினார். சிறுவர்கள் அதைக் கேட்டு பயந்து போயினர். நரேந்திரன் அதற்கெல்லாம் பயப்படவே இல்லை. "பிரம்மனாவது ராட்சஸனாவது... அப்படி ஒருவன் இருந்தால், இவ்வளவு நேரம் நாம் விளையாடியபோது நம்மைக் கொன்று போட்டிருக்க மாட்டானா? எல்லாரும் பயப்படாமல் விளையாடுங்கள்" என்று கூறி மற்றவர்களை உற்சாகப்படுத்தினார். அந்த தைரியசாலி நரேந்திரன்தான் பின்னாளில் வீரத்துறவி விவேகானந்தர் ஆனது.

© TamilOnline.com