தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 13)
முன்னுரை: பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற சிலி துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளான தகவல் பாலம் மற்றும் பாதுகாப்புப் பாலம் பற்றி விவரங்களைக் கண்டோம். சென்ற பகுதியில் கம்பிநீக்க நுட்பங்களைப் பற்றிப் பார்க்க ஆரம்பித்து கம்பியற்ற அண்மைத் தொடர்பைப் பற்றி விவரித்தோம். அதை இங்கே தொடர்வோம்...

*****


கம்பியற்ற தொலைத்தொடர்பில் இடம் குறித்த சேவைகளைப் பற்றிக் கூறினீர்கள். இன்னும் நவீனமாக இத்துறையில் வாய்ப்புக்கள் ஏதேனும் உள்ளனவா?

ஆஹா, என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆப்பிள் என்ன, கூகிள் என்ன, மைக்ரோஸாஃப்ட் என்ன, மற்றும் ஸாம்சங், ஹெச்.டி.சி., மோட்டோரோலா, எல்லோரும் போட்டி போட்டு புதுப்புது நுட்பங்களை அறிவுபேசி (Smart Phone) துறையில் அளித்து வருகின்றன. ஆனால் அவையெல்லாம் பெரும் ராட்சஸ நிறுவனங்களாயிற்றே, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு என்ன வாய்ப்பிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? வாய்ப்புக்கள் உள்ளன.

இந்தப் பெரும் நிறுவனங்கள் அளிப்பது ஒரு கருவி அல்லது பயன்பாட்டு மேடை (platform). அவற்றைப் பயன்படுத்தி, பயனர்களுக்கு மென்பொருள் அல்லது சேவை அளிக்கும் வாய்ப்புக்கள் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு நிறையவே உள்ளன.

சென்ற முறை கூறியபடி இடம் குறித்த சேவைகள் பல அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் நவீனமாக வர ஆரம்பித்துள்ள குறிப்பிடத் தக்க ஒரு வாய்ப்பு, திடீர்த் தள்ளுபடி. அதாவது, நீங்கள் பல கடைகள் உள்ள ஒரு பகுதியில் உங்கள் அறிவுப்பேசியுடன் போய்க் கொண்டிருக்கும் போது, குறுந்தகவல் (short message) மூலமோ அல்லது கருவியில் நிலைநாட்டப்பட்ட வேறு பயன்பாட்டு மென்பொருள் மூலமோ பொதுவாக அந்த சமயத்துக்கு மட்டுமே, அல்லது உங்களுக்கு மட்டுமே உரித்தான தள்ளுபடி பற்றி அறிவிக்கும் சேவைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. இது நன்கு செயல்பட வேண்டுமானால் பல நுட்பங்கள் தேவைப் படுகின்றன. பயனர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் உணர்ந்து அவர்கள் நடமாடும் பகுதியில் என்ன கடைகள் உள்ளன என்று கணித்து, அக்கடைகள் எந்தத் தள்ளுபடி அறிவிப்புகளை அனுப்ப விரும்புகிறார்கள் என்பவற்றைக் கூட்டி, இறுதியாக குறிப்பிட்ட நுகர்வோரின் (specific consumers) தேவைக்கு எந்த அறிவிப்பு பொருந்துகிறது என்று பார்த்து, அதை அவர்களுக்கு அனுப்பி, அவர்கள் எவற்றை விரும்பி அதன்மீது செயல்படுகிறார்கள் என்ற தகவலைக் கடைகளுக்குக் கொடுத்து... புரிகிறதா? இவ்வாறு பலப்பல புதிய நுட்பங்களுக்கும், இருக்கும் நுட்பங்களை மேம்படுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன.

அதுமட்டுமல்ல, மெய்மைகூட்டல் (Reality augmentation) என்னும் புதுநுட்பமும் இப்போது சேர்ந்துள்ளது. அதாவது, உங்கள் கைபேசியின் காமிராவை எதாவது இடத்தைக் மெய்மைகூட்டும் மென்பொருளுக்குக் காட்டினால், அவ்விடத்தின் வரலாற்று முக்கியத்துவம், மற்றும் அதைப் பற்றிய பல்வேறு விவரங்கள் மட்டுமல்லாமல், அவ்விடத்தின் சுற்றுப்புற வரைபடம், அருகிலுள்ள கடைகள், உணவிடங்கள் போன்ற எல்லாவற்றையும் கைப்பேசி திரையில் ஒட்டு மொத்தமாகக் காட்டிவிடும்!

வேறு மாதிரியான ஒரு புது நுட்பம் தனியார் கணினித் துறையிலிருந்து கைபேசித் துறைக்குக் சமீபத்தில் குதித்துள்ளது! இதுதான் தனியார் விழிம உரையாடல் (personal video conferencing).. ஆப்பிள் நிறுவனம் தன் ஐஃபோன்-4 கைபேசியில் முன்புறம் நோக்கிய லென்ஸ் ஒன்றைச் சேர்த்து, ஃபேஸ்டைம் என்னும் மென்பொருளையும் சேர்த்தவுடன் அச்சாதனம் உள்ளவர்கள் மிக எளிதில் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்தே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உரையாடலாம். பெரும் நிறுவனங்கள் மட்டுமே, தங்கள் அலுவலகங்க்ளிருந்து மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த நுட்பம், எவரும் எவருடனும் தொடர்பு கொள்ள, இருக்கும் இடத்திலிருந்தே பயன்படுத்தும்படி வந்துவிட்டது! ஏதாவது அவசரமாகக் காட்ட வேண்டுமானால், மற்றவரை வரவழைக்கத் தேவையில்லை, அவர்களைக் கூப்பிட்டு உங்கள் கைப்பேசி வழியே காட்டிவிடலாம். வியக்கத்தக்க முன்னேற்றம் அல்லவா? இதிலும் பல புது மென்பொருட்களையும் சேவைகளையும் அளிக்க வாய்ப்புக்கள் உள்ளன; சிந்தியுங்கள், கண்டுபிடியுங்கள்!

அறிவுக் கைபேசித் துறையில் தற்போது உருவாகிவரும் இன்னொரு பரபரப்பான துறை எங்கும் தொலைக்காட்சி (TV-on-the-go). வீட்டில் கேபிள், செயற்கைக் கோள் (satellite), போன்றவற்றின் மூலம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து நமக்குப் பழக்கம். ஆனால் இப்போது, தனியார் கணினியில், மின்வலை மூலம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அது நடக்கும் போதேயோ, அல்லது பின்னரோ பார்க்கும் வசதி வந்துள்ளது என்று சென்ற பகுதி ஒன்றில் கண்டோம். இந்தப் பழக்கம் இப்போது நெட்ஃப்ளிக்ஸ் (netFlix),, ஹூலு (hulu) போன்ற மின்வலைத் தொலைக்காட்சி சேவைகளின் எழுச்சியால் இன்னும் அதிகரித்துள்ளது.

இதில் மிகவும் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இருக்குமிடத்திலிருந்து கைபேசியில் தொலைக்காட்சி பார்ப்பது மட்டுமல்லாமல், ஓரிடத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு, இன்னொரு இடத்தில் இருக்கும்போது வேறொரு சாதனத்தில் விட்ட இடத்தில் தொடர்வது. இது சேமித்து வைக்கப் பட்டிருக்கும் பழைய நிகழ்ச்சிகளை மட்டுமல்ல, நிஜநேரத்தில் (real time/live) நிகழும் காட்சிகளையும் கூட நீங்கள் எங்கிருந்தாலும், அங்கிருந்தே, கைபேசி, பலகைக் கணினி (tablet computers) போன்ற பல்வேறு சாதன வகைகளில் பார்க்கலாம். எக்கோஸ்டாரின் ஸ்லிங்பாக்ஸ் சேவைப் பிரிவும் இதில் குதித்துள்ளதால், தமிழ்த் தொலைக்காட்சிப் பிரியர்கள் தங்கள் அபிமான சின்னத்திரைக் காட்சிகளையும் இவ்வாறு நிறுத்திவிட்டுத் தொடர்ந்து காணமுடியும்! சின்னத்திரைக்கு இது பிரமாதமான முன்னேற்றம் அல்லவா? இந்த வசதியை இனி தொடர்காட்சி என அழைக்கலாம்.

இதெல்லாம் சரி, ஆனால் இத்தகைய வசதிகளுக்கு ஆரம்பநிலை நிறுவனங்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி மீண்டும் எழலாம். தொடர்காட்சி சேவைகளும் அதைக் காண வசதி தரும் சாதனங்களும் பெரும்பாலும் பெரும் நிறுவன எல்லைக்குள் வந்து விட்டாலும், ரோக்கு பெட்டி, பாக்ஸி, ஸேஸ்மீ போன்ற பல புது நிறுவனங்களும் இந்தத் துறையில் முன்வந்துள்ளன. மேலும், தொடர்காட்சியை மின்வலையின் பல தடங்கல்களையும் சமாளித்து நன்றாகப் பார்க்க வைக்க (viewing experience) இன்னும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக கைபேசிகளில் பார்க்கத் தேவையான அளவுக்கு அலையகலம் கிடைப்பதில்லை; மேலும் தொடர்காட்சி விளம்பரங்களை எவ்வாறு கைபேசி இட நெருக்கச் சேவையுடன் இணைத்து இன்னும் அதிகப் பலன் தருமாறு செய்வது; இது போன்ற பலப் பல வாய்ப்புக்கள். பரபரப்பான புதுமையான துறை, பல பெரும் வாய்ப்புக்கள்! சவாலே சமாளி.

மேலும் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com