களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே வந்து வாசலில் காத்திருப்பதை நினைத்தால் மனதிற்கு வருத்தமாகத்தான் இருக்கும். போஸ்ட் பாக்ஸில் பார்த்தபோது மஞ்சள் நிறத்தில் தபால் கவர் இருந்தது. யாராக இருக்கும் என்று நினைத்தவளாக முகவரியைப் பார்த்தாள். மாமியாரின் கையெழுத்தைப் பார்த்ததும் இதயம் திடுக்கிட்டது. படியிலேயே அமர்ந்தவள் கடிதத்தை எடுத்து அவசரமாகப் படித்தாள். குசல விசாரிப்புகளை, சம்பிராதாய வரிகளை எல்லாம் தாண்டி அசல் விஷயத்திற்கு வந்தாள்.
"சரஸ்வதியின் மகளின் திருமண அழைப்பிதழ் உங்களுக்கும் வந்திருக்கும். ஹைதராபாதில்தான் திருமணம். கல்யாணம் முடிந்த மூன்று வாரங்கள் கழித்து அண்ணாவின் பேரனுக்கு பூணல். இரண்டு பேரும் போனில் முன்னாடியே வரச் சொல்லி திரும்பத் திரும்ப அழைத்தார்கள். அறுவடை நேரமாக இருப்பதால் உன் மாமனாரால் வர முடியவில்லை. நான்தான் வரவேண்டும். ராமனையும், ஜானகியையும் அனுப்பலாம் என்றால் சுமாவுக்கு காலாண்டு தேர்வுகள். அம்மா அருகில் இருந்தால்தான் சுமாவுக்குப் படிப்பு ஓடும். அதனால் நான் கிளம்ப வேண்டியதாயிற்று. ஒன்பதாம் தேதி இரவு பஸ்ஸில் கிளம்பி வருகிறேன். வீட்டை விட்டு ரொம்ப நாள் இருக்க வேண்டும் என்று கவலையாக இருந்தாலும் உங்களுடன், பேரன் பேத்தியுடன் ஒரு மாதம் இருக்கப் போவதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது."
படித்து முடித்ததும் காற்றுப் போன பலூன்போல் ஆகிவிட்டாள் சரோஜா. சின்ன மாமியார் மகளின் கல்யாணத்திற்கு வந்துவிட்டு, அண்ணன் பேரனின் பூணல் வரையில் தங்களுடன் மாமியார் தங்கியிருக்கப் போகிறாள். ஏற்கனவே பள்ளியில் டீச்சர் வேலை, உடல் நலக்குறைவு... இவற்றுக்குத் துணையாக மடி, ஆசாரம் என்று தன் உயிரை எடுப்பதற்கு மாமியாரின் வருகை. மனம் முழுவதும் எரிச்சல் பரவியது சரோஜாவுக்கு. என்றைக்காவது உடல் நிலைமை சரியாக இல்லை என்றால் தாமதமாக எழுந்து கொள்வது, தேவைப்பட்டால் வேலைக்காரியை அனுப்பி டிபன் சென்டரிலிருந்து ஏதாவது டிபனை வரவழைத்துக் கொள்வது, பேப்பர் திருத்தும் வேலை அதிகமாக இருந்தால் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிட்டு வெறும் ரசம், சுட்ட அப்பளத்துடன் ஒப்பேற்றுவது என்று பள்ளிக்கு லீவ் போடாமல் எப்படியோ குடித்தனத்தைச் சமாளித்துக் கொண்டிருந்தாள். பாலு பிறந்த பிறகு தன்னுடைய உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டது. ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்தது, மனைவிக்கு உடம்பு சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டைப் பற்றி பொருட்படுத்தாத கணவன், எல்லா வேலைகளையும் ஒண்டியாகச் செய்ய வேண்டிய கட்டாயம். சாரமில்லாத வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்ட போது கேட் திறக்கும் சத்தம் கேட்டது. குழந்தைகள் இருவரும் ஸ்கூல் பேக் முதுகில் சுமந்தபடி சோர்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். அம்மாவைப் பார்த்ததும் உற்சாகம் மேலிட ஓட்டமாக வந்தார்கள்.
குழந்தைகள் இருவரும் காலணிகளை மூலையில் கடாசி விட்டு, பத்து கிலோவுக்கும் மேல் இருக்கும் புத்தகப் பையைத் தரையில் வீசிவிட்டு, டி.வி.யின் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களை கோபித்துக் கொள்ளவும் திராணியற்றவளாய் பாலையும், பிஸ்கெட்டையும் அவர்களுக்காக டீபாய் மீது வைத்துவிட்டுத் தனக்கு டீயை கலந்து கொண்டாள். யோசனையில் ஆழ்ந்தபடி கொல்லை வாசற்படியில் உட்கார்ந்து டீயைக் குடித்து முடித்தாள். ஜானகிராமன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சுபாவத்திலேயே குறைவாகப் பேசுபவன். மனைவி குழந்தைகளிடம் அன்பு இருந்தாலும் வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தெரியாது. தனியார் கம்பெனி என்பதால் ஆபீசில் வேலையும் அதிகம். அதற்குப் பிறகும் நேராக வீட்டுக்கு வராமல் எல்.ஐ.சி. பாலிஸி என்றும், வியாபாரம் என்றும் சுற்றி அலைந்துவிட்டு இரவு ஒன்பதுக்குப் பிறகுதான் வீடு வந்து சேருவான். குழந்தைகளின் படிப்புக்0காகவும், எதிர் காலத் தேவைகளுக்காகவும் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதும் தங்களைவிடக் குழந்தைகள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதும் அவன் விருப்பம். விவசாயியின் மகனான அவன் படிப்பும், வளர்ப்பும் ரொம்பக் கஷ்டத்துக்கு இடையேதான் நடந்தது. நடுத்தர வாழ்க்கை, இருவரின் வருமானத்தில் நன்றாகவே போய்க் கொண்டிருந்தாலும், கிடைத்த ஓய்வு நேரத்தில் ஏதேதோ பிசினஸ் செய்து கொண்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வருவான். மனம் விட்டு பேசும் வாய்ப்பு இல்லாமல் போனதாலும், வாரம் ஒருமுறைகூடச் சினிமா, டிராமா என்று வெளியில் போக முடியாததாலும் சரோஜா மனதில் அதிருப்தி நிலவியிருந்தது.
நாள் முழுவதும் உழைத்ததில் சக்கையாகிவிட்ட கரும்புபோல் வீட்டுக்கு வந்து சேரும் ஜானகிராமனுக்கு உடைகளை மாற்றிக் கொள்ளும் பொறுமையும் சிரத்தையும் இருக்காது. பெயருக்கு கைகால்களை அலம்பிக் கொண்டு வேஷ்டியை சுற்றிக்கொண்டு ஆறி அவலாக இருக்கும் உணவை பசியைத் தணித்துக் கொள்வதற்காக விழுங்கிவிட்டு, அப்படியே கட்டில்மீது சரிந்து விடுவான். சமையலறையில் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுவிட்டு சரோஜா வரும்போது அவன் குறட்டை விட்டுக் கொண்டிருப்பான். அவனிடமிருந்து சின்ன வார்த்தையை, பரிவு கலந்த தொடுகையை எதிர்பார்க்கும் சரோஜாவுக்கு எப்போதும் ஏமாற்றம்தான். பிறகு எப்பொழுதோ நேரம் கழிந்த பிறகு தூக்கமும், விழிப்பும் இல்லாத நிலையில் அவன் உடல்ரீதியான நெருக்கத்தை நாடும்போது அவள் சலித்துக் கொள்வாள். அவனிடமிருந்து பரிவை, அன்பை எதிர்பார்த்து அது கிடைக்காமல் ஏமாற்றத்திற்கும் ரோஷத்திற்கும் நடுவில் ஊசலாடி மெதுவாக உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட பிறகு, எதிர்பாராத வேளையில் அவனுடைய அழைப்பு அவளுக்கு எரிச்சலைத் தரும். பகல் முழுவதும் ஸ்கூட்டரில் சுற்றியதில் உடலில் படிந்த வியர்வை வாடை, தன் மனதைப் பற்றிக் கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாத அவன் போக்கு அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். இருவருக்கும் நடுவில் அதிருப்தி நிலவியிருந்தாலும் ஏதோ ஒரு விதமாக அந்தத் தருணம் கழிந்து போய் விடும்.
விடிந்ததுமே சரோஜா வீட்டு வேலைகளில் மூழ்கிப் போய் விடுவாள். ஜானிகிராமனுக்குக் காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ளும் பழக்கம் இல்லை. அவளுடைய நித்தியப்படி வேலைகளுடன் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நிதானமாக எழுந்து கொள்வான். அவனுக்குக் காபி கொடுத்து குழந்தைகளைத் தயார் செய்து, சமையலை முடித்து, தானும் தயாராகிக் கொண்டிருக்கும் போது அவன் எழுந்து வருவான்.
குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு அவன் வருவதற்குள் வீட்டைப் பூட்டிவிட்டு சரோஜா வெளியில் நின்று கொண்டிருப்பாள். அவளைப் பள்ளியில் இறக்கிவிட்டு அதே வழியில் இருக்கும் தன்னுடைய ஆபீசிற்கு போய் விடுவான். ஏதோ ஒரு விதமாக நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் மாமியாரின் வருகைச் செய்தி சரோஜவின் மனதில் சூறாவளியைக் கிளப்பிவிட்டது.
சின்னக் குடும்பம்! மனதில் சலித்துக் கொண்டாலும், கணவனிடம் எரிச்சலைக் காட்டிக் கொண்டாலும், குளிக்காமலேயே குக்கரை வைத்துச் சமையலை ஒப்பேற்றுவதும், காலையில் மீந்து போனதை வைத்துக் கொண்டு இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்குவதுமாக சமாளித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் இரண்டு நாள் என்று இல்லாமல் ஓரேயடியாக ஒரு மாதம் மாமியாருக்குப் பிடித்த விதமாக இருக்கணும் என்றால். மடி ஆசாரத்தை தாக்குப் பிடிக்க வெண்டும். சரோஜாவுக்கு பயம் பிடித்துக் கொண்டுவிட்டது.
யோசனையுடன் திக்கு முக்காடிக் கொண்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஹோம் வர்க் செய்தபடி பாதியிலேயே தூங்கிவிட்ட குழந்தைகளை ஒழுங்காகப் படுக்கையில் படுக்க வைத்தாள் சரோஜா. ஸ்கூல் வேலை இருந்ததால் திருத்திக் கொண்டிருந்தாள். ஒன்பதரைக்கு ஜானகிராமன் வந்தான்.
ஜானகிராமன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மெதுவாக மாமியாரிடமிருந்து கடிதம் வந்ததைப் பற்றிச் சொன்னாள். ஜானகிராமனின் முகம் பிரகாசமடைந்தது. "எங்க அம்மா வருகிறாளா? அந்தக் காட்டை விட்டுவிட்டு நம் வீட்டில் இருப்பதற்கு வருகிறாளா? எங்க அம்மாவைப் பூக்களுக்கு நடுவில் வைத்துப் பார்த்துக் கொள்ளணும்" என்றான் சந்தோஷமாக.
சரேலென்று கோபம் வந்தது சரோஜாவுக்கு. "நீங்க ராத்திரி பத்து மணிக்கு வரும்போது ஓரு கூடை பூ வாங்கிக்கொண்டு வாங்க. தினமும் உங்க அம்மாவை அதுக்கு நடுவில் உட்கார வைத்து உபசரிக்கிறேன்" என்றாள் பழிப்பது போல்.
அடி வாங்கினாற்போல் பார்த்தான் அவன். "என்ன இது சரோஜா? இத்தனை வருடத்துக்குப் பிறகு எங்க அம்மா நம்ம வீட்டுக்கு வருகிறாள் என்றால்....."
"அத்தையை வர வேண்டாம் என்று நான் சொன்னேனா? நான் ஓடி ஓடி வீட்டு வேலை, வெளி வேலைளை கவனித்துக் கொள்வதால்தான் இந்த வீடு ஓடிக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்கும் தெரியும். காலையில் கிளம்பிய மனுஷன் நள்ளிரவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து சேருவீங்க. ஞாயிற்றுக் கிழமையிலும் வேண்டாத வேலையை வைத்துக்கொண்டு வீட்டில் இருக்க மாட்டீங்க. எத்தனை வேலைகளைதான் நான் பார்த்துக் கொள்வது? என்றைக்காவது காய்கறி வாங்கி வந்திருக்கீங்களா? ஹோம் வர்க் செய்வதில் குழந்தைகளுக்கு உதவியிருக்கிங்களா? சினிமா டிராமா என்று எங்கேயாவது அழைத்துப் போயிருக்கீங்களா? எதைத்தான் செய்திருக்கீங்க? உங்க அம்மா வந்தால் பூக்களுக்கு நடுவில் வைத்து கொண்டாடணும் என்று ஆர்டர் போட்டுவிட்டால் உங்கள் வேலை முடிந்து விட்டது." மனதில் இருந்த கோபத்தையெல்லாம் குரலிலும், வார்த்தைகளிலும் கொட்டினாள் சரோஜா.
"சீச்சீ.." என்றபடி தட்டில் கையை அலம்பிவிட்டுப் போய்விட்டான் ஜானகிராமன்.
"கோபம் வந்தால் தட்டிலேயே கையை அலம்பிவிட்டு உங்களால் போய்விட முடியும். விட்டெறிந்ததை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, மேஜையை சுத்தம் செய்யும் வேலை என் தலையில்தான். சாப்பிடுவீங்களோ மாட்டீங்களோன்னு தெரியாவிட்டாலும், எனக்குச் சாப்பிட வேண்டும் என்று இல்லாவிட்டாலும் சமையல் செய்வது எனக்குத் தப்பாது. இந்த உழைப்பும் என்னை விடாது." முணுமுணுத்துக் கொண்டே எப்போதும் இல்லாத விதமாகப் போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் போய் படுத்துக் கொண்டாள் சரோஜா. வேர்ப்பகுதியைப் பூச்சி தாக்கினால் இலை உதிர்வதுபோல் ஒரு விஷயத்தில் தலைதூக்கிய அதிருப்தி வேறு இடத்தில் வெளிப்பட்டது.
மனதில் மாமியாரின் மடி ஆசாரம், கிராமத்துப் பழக்க வழக்கங்கள் பயமுறுத்திக் கொண்டு இருந்தால் சரோஜாவுக்கு ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை. கல்யாணம் ஆனது முதல், கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு இவர்கள் போய் வருவார்களே தவிர அவர்கள் தங்களுடைன் வந்து தங்கியதில்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களுக்கு மேல் இருந்தது இல்லை. மைத்துனர் குடும்பம் அவர்களுடன் தங்கியிருந்ததால் இவர்கள்தான் கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சில நாட்கள் போய் இருந்து விட்டு வருவார்கள். நாள் முழுக்க ஏதோ வேலையைச் செய்து கொண்டு இருப்பதும், தூய்மையான காற்று, தண்ணீர் கலக்காத பாலில் புது டிகாஷன் காபி, மாலை வேளையில் தோட்டத்திற்கு போவது எல்லாம் பிடித்து இருந்தாலும் மாமியாரின் பழக்க வழக்கங்களை நினைத்தால் சரோஜா அரண்டு போய் விடுவாள். ஏதாவது செய்ய நினைத்தாலும் தவறாகி விடுமோ என்று பாத்திரங்களை அலம்பித் தருவது, காய்கறி நறுக்குவது போன்ற சுற்றுக் காரியங்களைச் செய்து கொடுத்து ஒப்பேற்றி விட்டாள். ஆனால் இப்பொழுது? யோசித்துக் கொண்டே எப்படியோ தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.
பார்த்துக்கொண்டிருந்த போதே பத்தாம் தேதி வந்து விட்டது. சரோஜாவும், குழந்தைகளும் பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் தாயை அழைத்து வருவதற்காகப் போயிருந்த ஜானகிராமன் வந்து சேர்ந்திருக்கவில்லை.
"காலையில் மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பாள். அவளை இறக்கி விட்டுவிட்டுக் கணவன் ஆபீசுக்கு போயிருப்பான். காலையில் அரக்கப் பரக்க தான் செய்த சமையலைச் சாப்பிட்டுவிட்டு மாமியார் என்ன நினைத்துக் கொண்டாளோ என்னவோ?" யோசித்துக் கொண்டே சரோஜா வீட்டிற்கு வந்தபோது உள்ளேயிருந்து குழந்தைகளின் கும்மாளமும், மாமியாரின் குரலும் கேட்டது. குழந்தைகள் பாட்டியிடம் பேச்சில் ஆழ்ந்து விட்டார்கள். மாமியார் பெட்டியைத் திறந்து அவர்களுக்காக கொண்டுவந்ததை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.
சரோஜா மாமியாரைக் குசலம் விசாரித்துவிட்டு கைகால் கழுவிக்கொண்டு வந்தாள். இருவருக்கும் சேர்ந்து காபி கலந்து கொண்டிருக்கும் போது "களைத்துப் போய் வந்திருப்பாய். வேண்டுமானால் நான் காபி கலக்கட்டுமா?" என்றபடி மாமியார் உள்ளே வந்தாள்.
"களைப்பு எதுவும் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு புதிது இல்லையா."
இருவரும் காபியைக் குடித்தார்கள்.
சமையலறையில் மாமியார் கொண்டு வந்த காய்கறி பழங்களும், ஊறுகாய் பாட்டில்களும் பார்த்து "இதையெல்லாம் சுமந்து கொண்டு வந்தீங்களா?" என்றாள் கூச்சப்பட்டுக் கொண்டே.
கமலாம்பாள் சிரித்தாள். "நான் எங்கே சுமந்தேன்? அங்கே ராமன் பஸ்ஸில் ஏற்றிவிட்டான். இங்கே இவன் இறக்கினான். கத்திரிக்காய், தக்காளி, கொய்யாப்பழம் எல்லாமே நம் தோட்டத்தில் விளைந்ததுதான்" என்றாள். ஊர் விசேஷங்கள், குழந்தைகளின் படிப்பு, பெரியவர்களின் உடல்நலம் எல்லாவற்றையும் பேசிக் கொண்டே காபி குடித்து முடித்தார்கள். கமலாம்பாள் காபி டம்ளரை சிங்க்கில் போட்டுவிட்டுக் கையை அலம்பிக் கொள்வதைப் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தோன்றினாலும் வலுக்கட்டாயமாக எழுந்து தம்ளரை சிங்க்கில் போட்டுவிட்டுக் கையை அலம்பினாள் சரோஜா.
"என் மடி ஆசாரம் என் வரையில் இருக்கட்டும். காபி டம்ளரை தொட்டாலும் கையை அலம்பும் பழக்கம் உங்களுக்கு இல்லையே. ஜானகிராமனுக்கு மடி ஆசாரம் எதுவும் தெரியாது. உனக்கு மட்டும் எதுக்கு மடி?" என்றாள் கமலாம்பாள்.
மகனுக்கு ஒரு சட்டமும், மருமகளுக்கு ஒரு சட்டமும் அமல்படுத்தும் தன் தாயின் நினைவு வந்தது சரோஜாவுக்கு. பாட்டி கொண்டு வந்த திண்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஹோம் வர்க் செய்யச் சொல்லி துரத்திவிட்டுக் குளிக்கப் போனாள். குளிக்காமல் சமைத்தால் மாமியார் சாப்பிட மாட்டாளாய் இருக்கும் என்ற எண்ணம் அவளுக்கு.
சூடான நீரில் குளித்துவிட்டு காட்டன் சேலையை உடுத்திக் கொண்டு சுவாமி விளக்கை ஏற்றினாள். மாலை நேரத்தில் லேசாக இருள் பரவிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துப் போல் ஜொலித்துக் கொண்டிருக்கும் விளக்கை பார்த்தபோது ஏதோ புதிய சக்தி உடலில் புகுந்து கொண்டாற்போல் இருந்தது. சமையலறைக்கு வந்தால் கத்தரிக்காயை நறுக்கித் தண்ணீரில் போட்டு வைத்திருந்தாள் கமலாம்பாள். மிக்ஸி ஜாரில் இஞ்சி பச்சை மிளகாய் அரைத்த விழுதும், அடுப்புக்குப் பக்கத்தில் தட்டில் கடுகு உளுத்தம் பருப்பும் எடுத்து வைத்திருந்தது தென்பட்டது.
"வந்துவிட்டாயா? குழந்தைகளைக் கேட்டால் கத்தரிக்காய் சாப்பிடுவதாகச் சொன்னார்கள். எடுத்து பிரிஜ்ஜில் வைப்பானேன் என்று அதையே நறுக்கி வைத்தேன்" என்றாள் கமலாம்பாள்.
சிரித்தபடி தலையை அசைத்துவிட்டு ஒரு அடுப்பில் சாதமும், இன்னொரு அடுப்பில் ரசமும் செய்துவிட்டாள். "நாளையிலிருந்து மாலை வேளை சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ உன்னுடைய ஸ்கூல் வேலையிருந்தால் அதையும், குழந்தைகளின் படிப்பையும் கவனித்துக் கொள் நிம்மதியாக" என்று குழந்தைகளிடம் போய் உட்கார்ந்து கொண்டாள்.
"உங்களுக்கு போர் அடிக்குமோ என்னவோ. டி.வி. பார்க்கிறீங்களா?" டி.வி. போட்டால் குழந்தைகளின் படிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று தெரிந்தாலும் கேட்டாள்.
"எனக்கு எந்த போரும் அடிக்கவில்லை. குழந்தைகள் பள்ளிப் பாடங்களைச் செய்து கொண்டிருந்தால் பார்ப்பதுதான் எனக்கு சந்தோஷம்" என்றாள் கமலாம்பாள். சரோஜா சமையலை முடித்துவிட்டு எல்லாம் மேஜைமீது எடுத்து வைப்பதற்குள் குழந்தைகளின் வீட்டுப் பாடமும் முடிந்துவிட்டது. நடுவில் ஓரிரு முறை பாலு டி.வி. போடப் போனபோது அன்பு கலந்த குரலில் தடுத்துவிட்டு அவனுடைய பள்ளிப்பாடத்தில் ஆர்வம் காட்டியபடி கேள்வி கேட்டாள் கமலாம்பாள். அவன் பெருமையுடன் விவரமாகச் சொல்லிக்கொண்டே வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டான்.
"உங்களுக்குக் கீழே பரிமாறட்டுமா அத்தை?" கேட்டாள் சரோஜா.
"எதுக்கு? மேஜைமீது சாப்பிட எனக்கு எந்த தடையும் இல்லை. என்னுடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் அங்கே மட்டும்தான். இங்கே உங்களுக்கு எப்படியோ அதேபோல்தான்" முறுவலுடன் சொன்னாள். குழந்தைகளுக்கும் மாமியாருக்கும் பரிமாறப் போனபோது சரோஜாவையும் உட்காரச் சொல்லி வற்புறுத்தினாள். கணவன் வந்த பிறகு தான் சாப்பிடுவதாக சரோஜா சொன்னபோது "அவன் வரும்போது பத்து மணியாகிவிடும் என்று சொன்னான் இல்லையா? அதுவரையிலும் சாப்பிடாமல் இருந்தால் காலையில் எழுந்து ஸ்கூலுக்குக் கிளம்ப வேண்டாமா? சாப்பாடு தூக்கம் எல்லாம் நேரத்துடன் முடிக்க வேண்டும். அவன் வந்தால் அருகில் இருந்து பரிமாறு. இப்போ சாப்பிட வா" என்றாள் கமலாம்பாள்.
நாலு பேரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். குழந்தைகள் ஏதோ பேசப் போனபோது சாப்பிடும் போது பேசக்கூடாது என்று எச்சரித்தாள். டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிடுவதாக குழந்தைகள் சொன்னபோது அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று மென்மையாகத் தடுத்து விடாள். ஏறத்தாழ மௌனமாக சாப்பிட்டு முடித்தார்கள். சாப்பிட்டதும் தட்டிலேயே கை அலம்பப் போன குழந்தைகளைத் தடுத்துவிட்டு, தானும் அவர்களுடன் சேர்ந்து வாஷ்பேசினில் கையை அலம்பினாள். வாயைக் கொப்பளிக்க வேண்டும் என்று அவர்களையும் செய்ய வைத்தாள். தான் கத்திக் கூச்சல் போட்டாலும் செய்யாதவர்கள் பாட்டி சொன்னதும் செய்வதைப் பார்த்துவிட்டு "ஏதோ புதிதாக வந்திருப்பதால் சொன்னபடி கேட்கிறார்கள். எப்படியோ செய்தால் சரி" என்று உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டாள் சரோஜா.
கையைத் துடைத்துக் கொண்டதும் "பாட்டி! டி.வி. போடுகிறேன்" என்றான் பாலு. "உங்கள் விருப்பம்" என்றவள் "அரைமணி ஆனதும் நிறுத்திவிடணும். உங்களுக்கு நல்ல கதை சொல்கிறேன்" எஎன்று ஆசைகாட்டினாள்.
அவர்கள் உறங்கும் நேரம் ஜானகிராமன் வந்தான்.
குழந்தைகளுக்கு நடுவில் படுத்துக் கொண்டு அவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தவளை அருகில் சென்று குசலம் விசாரித்ததும் எழுந்து வந்தாள். "குளித்து வாப்பா. சாப்பிடலாம்" என்றாள்.
"நீ படுத்துக்கொள் அம்மா. காலையில் பேசிக் கொள்ளலாம்" என்றான்.
"எனக்கு தூக்கம் வரவில்லை. நீ குளித்துவிட்டு வா" என்றாள்.
தாய் சொன்னதும் குளித்துவிட்டு தூய வேட்டியை அணிந்து கொண்டு வந்தான் ஜானகிராமன். தாயிடம் பேசிக்கொண்டே, மனைவி பரிமாறியதைச் சாப்பிட்டான். அவனுடைய சாப்பாடு முடிந்ததும் எல்லாம் ஒழித்துவிட்டு சரோஜா போய் படுத்துக்கொண்டாள். வெந்நீரில் குளித்துவிட்டுத் தாயின் அருகில் ருசியான உணவை சாப்பிட்ட திருப்தியுடன் ஜானகிராமன் வாசற்படியில் காற்று வாங்க உட்கார்ந்து கொண்டான். கமலாம்பாளும் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். ஒட்டிப் போன கன்னங்களை, மேடிட்டுக் கொண்டிருந்த நெற்றியை பரிவுடன் தடவிக் கொடுத்தாள். ஈரம் கசிந்த விழிகளுடன் ஊமையாகிவிட்ட குரலுடன் அப்படியே உட்கார்ந்து விட்டான் ஜானகிராமன்.
"ஜானா! வேளா வேளைக்கு உணவும் தூக்கமும் மனிதனின் ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியம். கண்ணா! நீ எவ்வளவு சம்பாதித்தாலும், குழந்தைகளுக்காக எவ்வளவு சேர்த்து வைத்தாலும், நீ எதை இழந்து அந்தப் பணத்தை வீட்டிற்குக் கொண்டு வந்தாயோ அவர்களுக்கு என்ன புரியும் சொல்லு? நீ அவர்களுடன் கழிக்கும் நேரம், அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அன்பு, அவர்களுடன் விளையாடி சிரித்தது இவைதான் அவர்களுக்கு நினைவில் இருக்கும். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு ஏற்றாற்போல் செலவும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. கூடாததும் குறையாததும் நாளில் இருக்கும் இருபத்திநான்கு மணி நேரம்தான்." மென்மையான குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
தாயின் குரலில் நிரம்பி வழிந்த அன்பு அவனுக்கு குழந்தைப் பருவத்தை நினைவூட்டியது. தெருப்பள்ளிக்கூடத்தில் விளையாட்டுக்கு நடுவில் பாடம் படித்தது, இரவு நேரத்தில் தந்தையுடன் சேர்ந்து வெட்டவெளியில் படுத்தது, கதை சொல்லச் சொல்லிச் செல்லம் கொஞ்சியது, இப்பொழுது கிராமத்திற்கு போனாலும் தாய், தந்தை, அண்ணா, மன்னி குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுவது, தினமும் கொஞ்ச நேரமாவது வாய்விட்டு, மனம்விட்டு பேசிக் கொண்டிருப்பது எல்லாம் நினைவுக்கு வந்தபோது அவனுக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.
அவன் மனதைப் படித்துவிட்டவள் போல் பேச்சை மாற்றினாள் கமலாம்பாள். நிலத்தைப் பற்றி, பேத்தியின் பரீட்சைபற்றி, கிராமத்தில் இருக்கும் உறவினர்களைப் பற்றி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு "இனி தூங்கப் போகலாம். நேரமாகிவிட்டது" என்றாள்.
படுக்கையில் சரிந்துவிட்ட ஜானகிராமன் அன்பு ததும்பும் தாயின் குரலையும், எப்பொழுதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியின் குரலையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான். "நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்து கொண்டு வரும் கணவனிடம் எவ்வளவு அலட்சியம்?" என்று தோன்றியது. காயப்பட்ட மனதுடன் சுவரின் பக்கம் திரும்பிப் படுத்தவன் தாயின் பரிவு கலந்த தொடுகையை நினைத்துக் கொண்டே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான். மறுநாள் காலையில் சரோஜா எழுந்திருக்கும் போது கமலாம்பாள் குளித்து முடித்துவிட்டு பூஜை செய்து கொண்டிருந்தாள். ஊதுபத்தியின் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருந்தது.
குற்ற உணர்வுடன் சரோஜா உடனே அறைக்குப் போய் காபிகூடக் குடிக்காமல் குளித்துவிட்டு வந்தாள். அதற்குள் பூஜையை முடித்துக் கொண்ட கமலாம்பாள் காபி கலந்து கொண்டிருந்தாள். குளித்துவிட்டு வந்த மருமகளைப் பார்த்துவிட்டு "காபிகூடக் குடிக்காமல் குளிக்கப் போய்விட்டாயே?" என்று கேட்டாள். சங்கடத்துடன் பார்த்த சரோஜாவிடம் "நீ தினமும் எப்படிச் செய்வாயோ அதோபோல் செய், போதும். நான் வந்திருக்கிறேன் என்பதற்காக எதையும் மாற்ற வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் உனக்கும் இடைஞ்சல், எனக்கும் சங்கடம். என் வருகையால் உங்கள் நித்தியப்படி வேலைகளை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை" என்று சரோஜாவுக்குக் காபி கொடுத்துவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு கொல்லைப்புற வாசற்படியில் உட்கார்ந்து கொண்டாள். சரோஜா காபி குடித்துவிட்டு குழந்தைகள் இருவரையும் எழுப்பினாள். சமையலை ஆரம்பித்தாள். பாட்டியின் பேச்சில், கவனிப்பில் குழந்தைகள் இருவரும் சீக்கிரமாகவே தயாராகிவிட்டார்கள். கமலாம்பாள் காய்கறி நறுக்கிக் கொடுத்ததும் சரோஜா அடுப்பில் ஏற்றி சமையலை முடித்துவிட்டாள். ரொடீன் வேலைகளில் மாற்றம் வந்ததால் சரோஜாவுக்குக் கிளம்புவதற்கு தாமதமாகிவிட்டது.
"இது சரியாக வராது. நாளை முதல் காலை சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகளை நீ பார்த்துக் கொள். நீங்கள் கிளம்பிப் போன பிறகு நிம்மதியாக பூஜையை செய்து கொள்கிறேன்" என்றாள் கமலாம்பாள்.
"அப்போ பூஜை முடியும் வரையில் காபி குடிக்காமல் இருக்கப் போறீங்களா? வேண்டாம் வேண்டாம். பத்து நிமிடம் முன்னால் எழுந்தால் போதும் எனக்கு" என்றாள் சரோஜா.
"காபி குடித்து விடுகிறேன். அங்கே குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் ஒன்பது மணிக்குத்தான். மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள். அதனால் சாவகாசமாக சமையல் செய்வது பழக்கம். அங்கே அப்படி இருப்போம் என்பதற்காக இங்கேயும் அப்படி இருக்கணும் என்று இல்லை. குழந்தைகள்தான் தெய்வம் எனக்கு" என்றாள் சிரித்தபடி.
ஸ்கூலில் ஓய்வு நேரத்தில் மாமியாரின் பேச்சுதான் நினைவுக்கு வந்தது சரோஜாவுக்கு. மறுநாள் முதல் பள்ளியிலிருந்து வந்ததும் மாமியார் தரும் சூடான காபியைக் குடித்துவிட்டு, அன்றைய விசேஷங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டு, குழந்தைகளை குளிக்கச் செய்து, வீட்டுப் பாடங்களை செய்யச் சொல்லி உட்கார வைத்துவிட்டு, தானும் குளித்துவிட்டுச் சமைக்கத் தொடங்குவாள். பாட்டியின் மேற்பார்வையில் குழந்தைகள் வீட்டுப் பாடத்தை சீக்கிரமாக முடித்துவிட்டு விளையாட வெளியே போய்விடுவார்கள். கமலாம்பாள் எடுத்துச் சொன்ன பிறகு ஜானகிராமன் எட்டுமணிக்கு வீட்டுக்கு வருவதை பழக்கப் படுத்திக் கொண்டான்.
சேர்ந்து சாப்பிடுவது, பிறகு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருப்பது, தாய்க்கும், மனைவிக்கும் நடுவில் நகைச்சுவை நிறைந்த உரையாடல்கள், அன்பு கலந்த விசாரிப்புகள் எல்லாம் புரிந்த பிறகு அவன் மனம் லேசாகிவிட்டது. அப்படியும் தாயின் கடிதம் வந்த அன்று சரோஜா பேசிய பேச்சை அவனால் மன்னிக்க முடியவில்லை. ரொம்ப நாளாக இருவருக்கும் இடையே அதிகரித்துக் கொண்டிருந்த இடைவெளி அவன் மனதில் வெறுமையை உருவாக்கியிருந்தது. பதிமூன்றாம் தேதியன்று சித்தியின் வீட்டில் தாயை இறக்கிவிட்டு வந்தான் ஜானகிராமன். அன்றுதான் சுமங்கலிப் பிராத்தனை. சரோஜாவையும், குழந்தைகளையும் மாலையில் அழைத்துவரச் சொல்லிவிட்டு, காலையில் அவர்கள் பள்ளிக்குக் கிளம்பியதும் புறப்பட்டாள் கமலாம்பாள். தாயை இறக்கிவிட்டு, ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்த பின் அங்கிருந்தே ஆபீசுக்குக் கிளம்பினான்.
ஆட்டோவில வரும்போது வழியில் தானும் அம்மாவும் பேசிக் கொண்டது ஜானகிராமன் மனதில் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. எப்போதும் சமையலறை வாசலுக்குக் கூட வராத தந்தை, மாமியாரின் மேற்பார்வையில் நித்தியமும் சமையல் என்று கூட்டுக் குடும்பத்தின் பொறுப்புகளை சிரித்த முகம் மாறாமல் நிறைவேற்றிய தாய் நினைவுக்கு வந்தாள்.
"வீட்டுப் பழக்க வழக்கங்களை பொறுத்து வீட்டு வேலைகளும் சமையலும் கஷ்டமாகவோ, எளிதாகவோ இருக்கலாம். வேலையைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்னொரு ஆள் கூட இருந்தால் கொஞ்சம் சுலபமாக இருக்கும். உங்க பாட்டி இருந்தவரையில் நான் தனிமையாக உணர்ந்தது இல்லை. வீட்டு வேலைகள் எவ்வளவு இருந்தாலும், ராமனுக்குக் கல்யாணம் முடிந்து ஜானகி வீட்டுக்கு வரும் வரையில் நான் அதிகமாக புழங்கிக் கொண்டிருந்த கொல்லைப்புறம் கூட வெறுமையாக இருக்கும். நீ வேலையில் சேர்ந்து பட்டினத்துக்கு வந்து விட்டாய். சின்னச் சின்ன உடல்நலக் குறைவுக்கு கூட ரொம்ப தளர்ந்து போய்க் கொண்டிருந்தேன். உங்க அப்பாவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருந்தார். சமையல் ஆகிக் கொண்டிருந்தால் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று விசாரிக்கத் தொடங்கினார்." சொல்லும் போது தாயின் இதழ்களில் மலர்ந்த சிரிப்பும், மின்னலாய் ஜொலித்த மூக்குத்தியும் நினைவுக்கு வந்து அவன் இதழ்கள் மலர்ந்தன. அவனுக்குத் தெரியாமலேயே அம்மா சொல்லாமல் விட்ட செய்தி அவன் மனதில் குடிகொண்டு விட்டது.
கல்யாணம் நன்றாக நடந்தது. மனைவி குழந்தைகளுடன் கல்யாணத்திற்கு போய்விட்டுத் தாயை வீட்டுக்கு அழைத்து வந்தான் ஜானகிராமன். "ஜானா! நம் ராமனுக்காக கேட்டபோது பட்டிக்காட்டு வரன் வேண்டாம் என்று மறுத்துவிட்ட கிரிஜாவை, சுவாமிநாதய்யரின் மகள், நினைவு இருக்கிறதா? எப்படி இருக்கிறாள் என்று பார்த்தாயா?" ஒரு நாள் இரவு பேச்சுவாக்கில் கேட்டாள் கமலாம்பாள்.
"ஊம் பார்த்தேன். உடல் முழுவதம் நகைகள், பெரிய கார். நன்றாகத்தானே இருக்கிறாள்?" இயல்பான தோரணையில் சொன்னான். "அப்போ சரியாக கவனிக்கவில்லை என்று சொல்லு. கணவனின் அன்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும்போது அந்த மனைவியின் முகத்தில் ஒருவிதமான ஜொலிப்பும், நிம்மதியும் தென்படும். அவள் முகத்தில் எதுவும் எனக்குத் தென்படவில்லை."
"போம்மா! உன் மகனை மறுத்துவிட்டாள் என்று உனக்குக் கோபம்," சிரித்தான் ஜானகிராமன். சுரேஷ், கிரிஜாவின் திருமணம் விவாகரத்திற்கு அருகில் இருக்கும் விஷயம் தனக்குத் தெரிந்தாலும் தாயிடம் சொல்ல விரும்பவில்லை
"நன்றாக இருக்கு. எனக்கு எதற்கு கோபம்? என் மகனும் மருமகளும் நிம்மதியாக குடித்தனம் செய்து கொண்டிருந்தால் நான் யாரைப்பற்றியோ மண்டையை குடைந்து கொள்வானேன்? இருந்தாலும் உலகத்தில் எல்லா கணவன் மனைவியும் சந்தோஷமாக, நிறைவாக குடித்தனம் செய்யவேண்டும் என்பது என் விருப்பம்."
மாமியார் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பழத்தை உரித்துக் கொண்டிருந்த சரோஜாவின் முகத்தில் கறுமையின் நிழல் படிந்தது. கிரிஜாவின் முகத்தில் பார்த்த உணர்வுகளை மாமியார் தன்னுடைய முகத்தில் ஏற்கனவே உணர்ந்துவிட்டாள் என்று அவளுக்குத் தெரியும்.
"எந்த கணவன் மனைவியும் சந்தோஷமாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் நீயே சொல்லு. உலகத்தில் பாதி தம்பதிகள் தேவையில்லாத விஷயத்துக்காகச் சண்டை போட்டுக்கொண்டு வாழ்க்கையை பாழடித்துக் கொள்கிறார்கள். சின்னச்சின்ன விஷயங்களில் ஒத்துப்போகப் பழகிக் கொண்டால் போறாதா? முன்னைப் போல் கூட்டுக் குடும்பமா? தலைக்கு மிஞ்சிய பொறுப்புகளா? இந்தச் சின்னக் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவானேன்? நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கு பெரிய கார், அவ்வளவு நகைகள் அவசியமா? காதில போட்டுக்கொள்ள பளபளவென்று வைரத்தோடு வாங்கிக் கொடுத்தால் போதுமா? மனைவியின் முகத்தில் சிரிப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?" பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னாள்.
"அப்போ தவறு முழுவதும் சுரேஷுடையதுதான் என்கிறாயா அம்மா? குணம் இல்லாத மனைவியை எந்தக் கணவனாலும் திருப்திப்படுத்த முடியாது. கிரிஜா அவனுடன் எப்படிக் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறாள் என்று யாருக்குத் தெரியும்?"
"தவறு யாருடையது என்று நான் இப்போ பேசவில்லை. பலபேர் தங்கள் கையில் இருப்பதை கவனிக்காமல் தொலைவில் இருக்கும் பொருளை நோக்கி ஓடிக் கொண்டு வாழ்க்கையை கழித்துவிடுவார்கள். கடைசிக் கட்டத்தில் இருக்கும்போது பின்னால் திரும்பிப் பார்த்து தாங்கள் இழந்தவற்றை நினைத்து வருத்தப்படுவார்கள். இன்னும் சிலருக்குத் தாங்கள் எதை இழந்தோம், அதற்கு பொறுப்பு யார் என்று தெரிந்துகொள்ளும் விவேகம் கூட இருக்காது. யாரையோ குற்றம் சாட்டிக்கொண்டு, தங்கள் தலையெழுத்தை நினைத்து நொந்துகொண்டு வாழ்க்கையைக் கழித்து விடுவார்கள். எத்தனையோ பேரின் வாழ்க்கை வியர்த்தமாக முடிந்து போய்விடும். முன்பின் தெரியாதவர்களுடன் அட்ஜஸ்ட செய்து கொள்ளாமல் ஒரு நாள் கழியாதபோது, கணவனுடனோ, மனைவியுடனோ சின்னச் சின்ன விஷயங்களில் சமாதானமாகப் போகாமல் ஏன் இந்த பிடிவாதம்?" மெல்லிய குரலில் நயமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த தாயின் பேச்சுக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் தலையை அசைத்தான் ஜானகிராமன்.
பார்த்துக் கொண்டிருந்த போதே பூணல் பங்ஷனும் முடிந்து விட்டது. கமலாம்பாள் ஊருக்குத் திரும்பும் நாளும் வந்துவிட்டது. மகன் கொண்டுவந்த பூச்சரத்தில் பாதியை சுவாமி படத்துக்குப் போட்டுவிட்டு, ஒரு கிள்ளலைத் தலையில் சூடிக்கொண்டு, மீதியை மருமகளிடம் கொடுத்தாள். "உடல்நலம் ஜாக்கிரதை! வீடு முழுவதும் உன்னைச் சார்ந்துதான் இருக்கிறது" என்றாள் கமலாம்பாள்.
முதல்நாள் இரவு கூந்தலில் சூடியிருந்த மலர்களை முகர்ந்துகொண்டே கணவன் சொன்னது நினைவுக்கு வந்தது. தொண்டைக்குழியில் ஏதோ அடைத்துக் கொள்வது போல் இருந்தது. தயக்கங்களை எல்லாம் உதறிவிட்டு மாமியாரை அணைத்துக் கொண்டே "அத்தை! நீங்க ஊருக்குப் போக வேண்டாம். எங்களுடைனேயே இருந்து விடுங்கள் ப்ளீஸ்" என்றாள்.
"பைத்தியக்காரி! மறுபடியும் வரத்தானே போகிறேன்? கோடையில் நீங்கள் எப்படியும் வருவீங்க" எனாறள் கமலாம்பாள்.
"பாட்டி! போகாதீங்க" என்று குழந்தைகள் அழுது ராகம் பாடினார்கள். மறுநாள் இரவு, மாலையில் வந்ததும் மாமியார் கலந்து கொடுக்கும் காபிக்குத் தான் எவ்வளவு அடிமை ஆகிவிட்டாள், வீடு எவ்வளவு வெறிச்சோடி விட்டது, குழந்தைகள் எவ்வளவு ரகளை செய்தார்கள் என்பதையெல்லாம் விவரமாக எழுதினாள் சரோஜா. கடிதத்தைக் கவரில் வைத்துக் கொண்டிருந்த போது ஓரு மாதத்துக்கு முன்னால் மாமியாரிடமிருந்து வந்த கடிதம் அவள் நினைவுக்கு வந்தது.
தெலுங்கில்: வாரணாசி நாகலக்ஷ்மி தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் |