பாட்காஸ்டிங்
புறாவின் மூலம் தலைவனுக்குத் தலைவி தூது விட்ட அந்தக் காலமாக இருக்கட்டும், SMS மூலம் "I luv u-டா" என்று அன்பொழுகச் சொல்லும் இந்தக் காலமாக இருக்கட்டும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டியது சமுதாயத்தின் அடிப்படைத் தேவையாகவே இருக்கிறது. பாருங்களேன்! தபால், தந்தி, தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல் என்று தனிநபர் தொடர்புகொள்ள எத்தனை நவீன சாதனங்கள் வந்துவிட்டன!

தனி நபர்களுக்கிடையே இல்லாமல் பொதுவாக அனைவருக்கும் செய்தி சொல்ல அந்தக் காலத்தில் அரசர்கள் தண்டோரா போட்டார்கள் அல்லது கல்வெட்டுக்களில் செதுக்கி வைத்தார்கள். தற்போது நம்மிடையே செய்தித்தாள்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்று பல சாதனங்கள் வந்துவிட்டாலும், இவையெல்லாம் அரசாங்கம் அல்லது பெரிய நிறுவனங்களின் கைவசமே இருக்கின்றன. ஊர், பேர் தெரியாத என்னுடைய கருத்தை நான் எப்படிப் பரப்புவது, அதுவும் குறைந்த செலவிலோ அல்லது செலவே இல்லா மலோ? நடக்க முடியாத காரியம் என்று நினைத்திருந்த போது அதைச் செய்வதற் கான வாய்ப்பு 1990-களில் நமக்கு வந்து சேர்ந்தது இணையம் என்ற மாபெரும் புரட்சி ஊடகத்தின் மூலம்!

இணையம் தோன்றிய கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் வியக்கத்தக்கது! தற்போது யார் வேண்டு மானாலும், மிகச் சுலபமாக ஒரு இணையத் தளத்தை உருவாக்கலாம். ஆனால் அதை விடச் சுலபமாக வலைப்பூ (blog) ஒன்றைத் துவங்கித் தன் கருத்துக்களை உலகறியச் செய்யலாம். 2002-ல் Wired பத்திரிகை நடத்திய கருத்தெடுப்பின்படி, 40 வினாடி களுக்கு ஒரு புதிய வலைப்பூ பூக்கிறது என்று நிர்ணயித்தனர்! அது மேலும் விரைந்து இடைவிடாமல் இப்போது வலைப்பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன! 2005-ன் துவக்கத்தில் PubSub Concepts, Inc. என்ற நிறுவனம் (www.pubsub.com) 6.5 மில்லியன் வலைப்பூக்களைக் கணக்கெடுத்திருப்பதாக அறிவித்தது.

ஆனால் இணைய சமுதாயம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. வலைப்பூக்களில் ஒலியை எப்படிச் சேர்ப்பது என்று ஆராய்ந்தது. பலர் முயன்ற போதும், டேவ் வைனர் (Dave Winer), ஆடம் கர்ரி (Adam Curry) என்ற கணினிப் பொறியாளர்களின் முயற்சியால் அது நனவாயிற்று. வைனர் ஜனவரி 11, 2001-ல் தனது பதிவில் Grateful Dead என்ற புகழ் பெற்ற இசைக்குழுவின் பாடல் ஒன்றைச் சேர்த்து ஒலிபரப்பினார். இதுவே ஒலிப்பூக்களின் (audio blogging) முன்னோடி.

இதே சமயம் இணையத்தில் மற்றொரு புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. நாப்ஸ்டர் என்ற நிறுவனம் தனி நபர்களின் சேகரித்து வைத்திருக்கும் பாடல்களை இலவசமாகத் தன்மூலம் ஒருவருக்கு ஒருவர் பறிமாறிக் கொள்ள வகை செய்தது. குறுந்தட்டு வெளியிடும் நிறுவனங்களும், இசைக் கலைஞர்களும் அது குற்றம் என்று வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டனர். அந்தச் சமயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) தலைமையில் ஆப்பிள் கணினி நிறுவனம் (Apple Computer, Inc.) ஐ-டியூன்ஸ் (iTunes) என்ற பிரிவைத் தொடங்கி ஐ-பாட் (iPod) என்ற கருவியை வெளியிட்டது. அதோடு ஒரு டாலருக்கும் குறைவாக, 99-சென்ட்டிற்கு பாடல்களை விற்பனை செய்ய இசைக் குறுந்தட்டு வெளியிடும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த வியாபார உத்தியும் கையடக்கமான கருவிக்குள் பல நூறு பாடல்களைச் சேகரிக்க முடிந்த வசதியும் ஐ-பாட் கருவியை ஒரே நாளில் பிரபலமடையச் செய்தது. ஐ-பாட் இல்லாத வீடே இல்லை, அதுவும் முக்கியமாக ஐ-பாட்வைத்திராத இளைஞர்களே இல்லை என்ற நிலைமை இப்போது நிலவுகிறது.

ஐ-பாட் கருவியின் வெற்றி, ஒலிப்பூ என்னும் ஆடியோ வலைப்பதிவுகள் வளர மேலும் வகை செய்தது. ஒலிப்பூக்களை வலையிறக்கி ஐ-பாட் கருவிகளில் சேமிக்கப் பல மென்பொருட்கள் வெளிவர ஆரம்பித்தன. 2004-ல் கார்டியன் (The Guardian) பத்திரிகையில் பென் ஹாமர்ஸ்லி (Ben Hammersley) என்ற கட்டுரையாளர் முதன் முறையாக பாட்காஸ்டிங் (podcasting) என்ற சொல்லைப் பயன் படுத்தினார். ஆக்ஸ்·போர்ட் அமெரிக்கன் அகராதி (Oxford American Dictionary) 2005-ல் பாட்காஸ்டிங் அந்த ஆண்டின் வார்த்தை என்று அங்கீகாரம் செய்தது. Pod என்பதைத் தமிழில் நெற்று என்பார்கள். எனவே, ரேடியோ பிராட்காஸ்டிங் என்பதை வானொலி என்பது போல் பாட்காஸ்டிங் என்பதை நெற்றொலி என்று சொல்லலாமே!

ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் பாட்காஸ்ட் என்ற சொல்லை ஐ-பாட் உடன் சேர்ப்பதற்கு விரும்பாமல் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனால் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. பாட்காஸ்டிங் கில் உள்ள P-O-D என்ற எழுத்துகளுக்கு Personal Option Digital, Personal On Demand என்று விளக்கங்கள் கொடுக்க முயற்சிகள் நடந்தன. ஆப்பிளின் போட்டி நிறுவனமான கிரியேடிவ் டெக்னாலஜி (Creative Technology) ஐ-பாட் கருவிக்குப் போட்டியாக ஸென் (Zen) என்ற கருவியை விற்பனை செய்கிறது. அதனால் zencasting என்ற சொல்லைப் பரப்ப முயல்கிறது. பாட் காஸ்டிங்கின் பிரபலத்தையும், முக்கியத்தை யும் உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் 2005 ஜூன் மாதம் வெளியிட்ட ஐ-டியூன்ஸ் மென்பொருளில் பாட்காஸ்டிங்கையும் இணைத்தது. வெளியிட்ட இரண்டே நாட்களில் ஒரு மில்லியன் சந்தாப் பதிவுகள் வந்ததாக ஆப்பிள் அறிவித்தது.

சரி, பாட்காஸ்டிங் என்றால் என்ன? அது ஒரு இணையப் பக்கத்தில் வெளியிடும் ஒலிப்பதிவு, மற்றும் இணைய வானொலி களில் இருந்து எப்படி வேறுபடுகிறது? பாட்காஸ்டிங்கின் முக்கியமான வித்தியாசம் வெளியீடு-சந்தா முறை (publish-subscribe model). ஒரு இணையப் பக்கத்தில் வெளியிடும் ஒலிப்பதிவு மாறிப் புதிதாகத் தோன்றினால், ஒவ்வொருவரும் அந்த மாற்றம் எப்பொழுது நிகழ்கிறது என்று கவனித்து வரவேண்டும். இணைய வானொலியிலோ ஒலிபரப்பாகும் பதிவு களைக் கேட்கலாமே ஒழிய, கீழிறக்கி ஐ-பாட் போன்ற கருவிகளில் சேமிக்க முடியாது. ஆனால் உங்களுக்கு விருப்பமான பாட் காஸ்ட்டிற்கு நீங்கள் பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு முறை புதிய பதிவு தோன்றும்போதும், அவை தாமாகவே உங்கள் கணினியில் இறக்கப்படும். நீங்கள் அதை ஐ-பாட் போன்ற கருவிக்கு மாற்றி எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம்! கணினியின் உதவில்லாமல், ஐ-பாட் போன்ற கருவி களுக்கு நேரடியாக இறக்கும் வகைமுறை களும் வர ஆரம்பித்துள்ளன.

பாட்காஸ்ட் கேட்பதற்கு ஐ-பாட் போன்ற கருவி தேவையில்லை. உங்கள் கணினியி லேயே நேரடியாகக் கேட்கலாம். ‘கேட்பது’ என்பது கூடத் தவறு. இப்போது ஒலி மட்டும் இல்லாமல் ஒளி வடிவமாக வீடியோக்களும் பாட்காஸ்டில் வர ஆரம்பித்துவிட்டன. ஒலி, ஒளி வடிவ பாட்காஸ்ட்டுகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் நிகழ்ச்சி களிலிருந்து, அரசியல் விவாதம் வரை பாட்காஸ்டிங் செய்யாத தலைப்புகளே இல்லை என்று கூறலாம். உங்கள் குரலைக் கணினியில் பதிவு செய்வதற்கான சாதனங் களும், மென்பொருட்களும் இருந்தால் போதும், நீங்களும் பாட்காஸ்ட் செய்யலாம். அதற்கு வேறு செலவு கிடையாது.

இப்பொது பாட்காஸ்ட் விமர்சகர்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களுடைய விமர்சன இணையப் பக்கங்களும் பிரபல மாக ஆரம்பித்திருக்கின்றன! அரசியல் கட்சிகளும், பாட்காஸ்டிங்கை விட்டுவைக்க வில்லை. ரிபப்லிகன், டெமக்ராட் மற்றும் பல செனட்டர்களின் இணையத்தளங்களில் பாட்காஸ்ட் ஒலிபரப்புகள் இருக்கின்றன. தமிழிலும் பாட்காஸ்ட்டுகள் வரத் தொடங்கியிருக்கின்றன. மாமியின் சமையல் குறிப்புகளில் இருந்து, ஹ¥ஸ்டனில் சுகி சிவம் செய்த சொற்பொழிவுவரை பல சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கின்றன.

இணையத்தில் எங்கெங்கே பாட்காஸ்டுகள் இருக்கின்றன? எப்படி பாட்காஸ்ட் செய்வது? அதற்கான தொழில் நுணுக்கங்கள் என் னென்ன? - என்று கேள்விகள் தோன்று கின்றனவா? கீழ்க்கண்ட வலைத்தளங்களில் மேலும் விவரங்கள் காணலாம்:

http://www.podcastingnews.com/ - பாட்காஸ்ட் பற்றிய விளக்கங்கள், மென் பொருட்கள், உத்திகள், அட்டவணை, குழுமம், செய்திகள் என்று பல விஷயங்கள் இந்தத் தளத்தில் இருக்கின்றன.

http://www.apple.com/itunes/ - ஐ-டியூன்ஸ் மென்பொருள், மற்றும் பல சுவையான பாட்காஸ்ட்டுகள் இங்கே கிடைக்கும். அதோடு, பாட்காஸ்ட்டுகளின் தரத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். அனைவரும் விரும்பும் பாட்காஸ்ட்டுகள் எவை என்றும் அறிய முடியும். வீடியோ பாட்காஸ்டுகளும் இங்கே கிடைக்கும்.

http://www.thepodcastnetwork.com/ - இங்கு இணையத்தில் இருக்கும் பல பிரபல மான பாட்காஸ்ட்டுகளின் அட்டவணை இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Podcasting - பாட்காஸ்ட் பற்றிய அறிமுகம், சுவாரசியமான தகவல்கள் இங்கு கிடைக்கும்.

http://www.podbazaar.com/ - இங்கு தெற்காசிய மொழிகளைச் சேர்ந்த பாட்காஸ்டுகளின் அட்டவணை இருக்கிறது (தமிழ் உள்பட).

http://www.podcast.net/ - இங்கும் பாட்காஸ்ட்டு களின் அட்டவணை இருக்கிறது.

கருத்துச் சுதந்திரத்தின் புதிய அத்தியாயம் தான் பாட்காஸ்ட்டுகள். தமிழோசை எட்டுத்திசையும் ஒலிக்க பாட்காஸ்ட் வழிவகுத்துத் தந்திருக்கிறது. தமிழில் பல தரமான பாட்காஸ்டுகளை உருவாக்க வாசகர்கள் முன்வர வேண்டும்.

***


நீங்கள் புதிர் மன்னரா?

அமெரிக்க தேசியப் பொது வானொலியில் (NPR - National Public Radio) வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் புதிர் நிகழ்ச்சி மிகப் பிரபலம். வில் ஷார்ட்ஸ் (Will Shortz) நடத்தும் இந்தப் புதிர்களும் பாட்காஸ்டிங்கில் இலவசமாக ஆப்பிள் ஐ-டியூன் தளத்தில் கிடைக்கின்றன. அதில் பிப்ரவரி 5, 2006 அன்று வந்த ஒரு புதிர்:

மனிதர்கள் தொடர்பு கொள்ள வழக்கமாகப் பயன்படுத்தும் சாதனம் எட்டெழுத்து ஆங்கில வார்த்தை. இதில் இருக்கும் R என்ற ஆங்கில எழுத்தை நீக்கிவிட்டு மீதியுள்ள ஏழு எழுத்துக்களை மாற்றி அமைத்தால் மனிதர்கள் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் ஒரு புதிய வழிமுறைக்கான சொல் கிடைக்கும். இரண்டு சொற்களும் ஒரே ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கின்றன. அந்த வார்த்தைகள் என்ன?

விடை


சிவா சேஷப்பன்

© TamilOnline.com