அம்மான்ன இதுக்குத்தான்!
அது ஒரு சுகமான அனுபவம் மித்ராவுக்கு. பெண்ணாகப் பிறந்த அனைவரும் முழுமையடையும் தாய்மை என்கிற உணர்வு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக, திருப்தியாக, நம் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். பிள்ளையார், சிவன், துர்க்கை, பெருமாள், ராகவேந்திரர் என நாளுக்கு ஒரு கோவிலுக்குச் சென்று தன் கனவைக் கடவுளிடம் சேர்த்தாள். பிறந்த வீட்டில் இது முதல் பேரக்குழந்தை என்பதால் ஒரு குதூகலம். புகுந்த வீட்டில் இதுவரை பேத்திகளே இருந்ததால், இதுவாவது பேரனாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

இப்படித் தன் சொந்தங்களையெல்லாம் மகிழ்விக்க வந்து பிறந்தான் அவன். "Your son needs a haircut" என்று பிறந்த மறுநிமிடமே மருத்துவர் கேலி செய்யும் அளவுக்குக் கழுத்துவரை வளர்ந்த கருகரு முடி, ரோஜாப்பூக் கன்னங்கள், பிஞ்சு விரல்கள் என வர்ணித்துக் கொண்டே போகலாம். பிள்ளையைப் பற்றிய அவளுடைய கனவுகளை அப்படியே நிறைவேற்றியிருந்தார் கடவுள். பக்க விளைவுகளைப் பற்றி அவள்தான் யோசிக்கவில்லை. துறுதுறுவென ஒடிக்கொண்டிருந்தான். அதனாலேயே சொல்பேச்சு கேட்க வைப்பது கடினமாக இருந்தது. மூன்று வயதுவரை அதிகம் பேசவில்லை, ஆனால் பேசத் தொடங்கிய பிறகு எதிர்வாதம் செய்யத் தவறவில்லை. அறிவாளி ஆனால் கடின உழைப்பில்லை. கடவுளிடமே சட்டதிட்டங்கள் போட்டதால், தன்னைத் தண்டித்து விட்டாரோ என்றுகூடத் தோன்றியது மித்ராவுக்கு. எல்லாத் தாய்க்கும் இருப்பது போல் இவனை எப்படியாவது நல்லவனாக வளர்த்துவிட வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாள் அவள். அதனால் பாசத்தைக் குறைத்து கண்டிப்பை அதிகமாக்கினாள்.

குழந்தையைக் கட்டியணைப்பது, கொஞ்சுவதெல்லாம் அவனுக்கு 8 வயதாகும் போது முடிந்து போயிருந்தது. அன்பாகப் பேசினால் எங்கே தலையில் ஏறி உட்காருவானோ என்கிற பயம். குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக விலகினான். அடுத்த 5, 6 ஆண்டுகளில் தாயும் பிள்ளையும் பள்ளி, படிப்பு, நண்பர்கள் மற்றப் பொது விஷயங்கள் என்று எதையும் அளவோடுதான் பேசினார்கள். அதுவும் சில நேரம் சுமுகமாகவும், பல சமயம் கருத்து மோதல்களுடனும் முடிந்தன. எதைச் சொன்னாலும் அம்மா திட்டுவாள் என்கிற எண்ணம் பிள்ளைக்கும், எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசுவான் என்கிற எண்ணம் மித்ராவுக்கும் இருந்தது. பாசமும் பற்றும் அற்றுப் போனதால், அவன் பதின்ம வயதடையும் பொழுது பயம்தான் அதிகமாக இருந்தது.

ஒருநாள் பள்ளியிலிருந்து வந்தான் மகன். சோபாவில் அமர்ந்திருந்த மித்ராவின் மடியில் தலை வைத்துப் படுத்தான். அரவணைக்க வேண்டியவள் ஆச்சரியப்பட்டள். மரத்துப்போயிருந்த மனம், அவன் தலையைக் கோதிவிடச் சென்ற கைகளைத் தடுத்தது. "என்ன வந்தவுடனே படுத்திட்ட? போயி கைகால் கழுவிகிட்டு வா" என்றாள் கல் மனதோடு.

பிள்ளை சொன்னான், "பரவாயில்லை விடுங்கம்மா. அம்மான்னா, இதுக்குத்தாம்மா". மித்ரா உயிரோடு செத்துப் போனாள் அந்தக் கணத்தில்.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com