"அப்பப்பா என்ன ஸ்னோ கொட்டிக்கிடக்கு. இந்த வருஷம் ஜாஸ்திதான் போல இருக்கு. எழுபது வயசில இந்த அமெரிக்கா வந்து இப்படிக் கஷ்டப்படணுமா? சிவனேன்னு திருவையாறுல சௌகரியமா வீடு, ஆள், படைன்னு வேற, காவேரி ஸ்நானம் என்னமா தர்மசம்வர்த்தனி தரிசனம் 'ஹூம்' எல்லாம் போச்சு" வாய் விட்டுப் புலம்பினாள் ஜானகி.
"அநாவசியமா ஏதாவது புலம்பிண்டு நடக்கற காரியமா பேசு" அவள் கணவர் கிட்டா சலிப்புடன் கூறியபடி கையிலிருந்த ரிமோட்டைத் தட்டினார். சி.என்.என்.னில் ஜான்கின் நியூஸ் சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 10.6 சதவீதத்தை எட்டிவிட்டது. கடந்த இருபது வருடங்களில் இந்த அளவு மோசமான நிலையை எட்டியதில்லை. இங்கே உள்ள ஐந்து அமெரிக்கர்களில் ஒருவருக்கு வேலை இல்லை" என சதவீதக் கணக்கு மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கிறார்.
தொலைபேசிச் சத்தம் காதைத் துளைக்க, ஜானகி, "டி.வியைக் கொஞ்சம் அணையுங்கோ" என்றபடி எழுந்து சென்று போனை எடுத்தாள். அவளுடைய தங்கை மீனாதான் சென்னையிலிருந்து.
"என்ன அக்கா ஒரு மாசமா பேசவே இல்லை. அதான் நானே கூப்பிட்டேன். நீ அத்திம்பேர், குழந்தைகள் சௌக்கியமா? கார்த்திக், சியாமளா சௌக்கியமா?" ஒரே கேள்விமேல் கேள்வியாகத் துளைக்க ஆரம்பித்தாள் மீனா.
"உம். நன்னா இருக்கோம். குளிர்தான் வழக்கம் போலத் தாங்க முடியல. அத்திம்பேர், கார்த்திக், குழந்தைகள் எல்லோருமே சௌக்கியமா இருக்காங்க," தொண்டையில் அடைத்த துக்கத்தை மறைத்தபடி பேசினாள் ஜானகி.
"சரி அக்கா. ஏதோ யு.எஸ். முன்னமாதிரி இல்ல. எகானமி சரிவுன்னெல்லாம் கேள்விப்பட்டேன். கவலையாய் இருந்தது. அதான் போன் பண்ணேன். சரி வேலைக்காரி வந்திடுவா. நான் அப்புறமா பேசறேன்." மீனா போனை வைத்து விட்டாள்.
அப்பாடா நல்ல வேளையா வச்சுட்டா இங்கே கஷ்டம், சிரமம்னு அவகிட்ட சொல்ல முடியுமா? இத்தனை வயசில என் உயிருக்குயிரான தங்கை மீனாவிடம் எதையுமே மறைச்சதில்லை. அதோட மீனா சின்ன வயசிலேர்ந்தே போட்டியும், பொறாமை குணமும் உடையவள். எல்லாத்திலேயும் தான் முதலா சிறப்பா இருக்கணும்னு நினைப்பவள். பிறர் வாழப் பொறுக்காத ஒரு குணம்.
ஜானகியும் கிட்டாவும் அமெரிக்கா வந்து சிடிஸன்ஷிப் வாங்கி ஆறு வருடங்களாகி விட்டது. கார்த்திக் ஒரே பிள்ளை. அவன் மனைவி சியாமளா. குழந்தை சரிகா ஏழு வயது. பிள்ளை சந்தோஷ் ஒன்பது வயது. கல்யாணமானவுடன் இரண்டு மூன்று வருடங்களிலே அப்பா, அம்மாவை யூ.எஸ்.ஸிற்குப் பிடிவாதமாய் அழைத்து வந்து விட்டான்.
ஜானகியின் தங்கை மீனாவிற்குப் பொறாமை. "உனக்கென்ன ஒரே பிள்ளை, மருமக, ஜம்முனு தாங்கறாங்க. அமெரிக்காவுல கொடிகட்டிப் பறக்கறே. நல்ல யோக ஜாதகம்தான்" என்று வாய்க்கு வாய் கூறிப் பொருமுவாள்.
ஜானகியும் யு.எஸ். வந்த புதிதில் மீனாவுடன் பெருமையாய் சகல வசதியுடன் வீடு, கார், சுகமான வாழ்க்கை என்றெல்லாம் மனம்விட்டு அளவளாவுவாள். மிகவும் நன்றாகத்தான் காலம் ஓடியது. சிலசமயம் நினைத்துக் கொள்வாள். ஒரு கடை, கோயில்னு இஷ்டப்படிப் போக முடியலை. குளிர்காலம் வேற ரொம்பக் கொடுமை. நாலரைக்கே இருட்டி விடுகிறது. கிட்டா நெட்டில் தினமலர், ஹிந்து படித்து விடுவார். பூசை, ராமாயணம் என்று காலம் ஓடியது. அக்டோபர் 2008 வரை ஒரு குறைவும் இல்லை, சௌக்கியமான வாழ்க்கைதான். பிறகு பங்குச் சந்தை சரியச் சரிய உலகப் பொருளாதார நிலை சீர்குலைய வேலை நீக்கம் ஆரம்பித்து, கண் திருஷ்டி பட்டாற்போல ஆகிவிட்டது. கார்த்திக் வேலை பார்த்த கம்பெனி பெங்களூருவில் Off-Shoring என்று அவனை வேலைநீக்கம் செய்து விட்டது. அவன் வேலையை பெங்களூருவில் மூன்று பேர் செய்யலாமாம். மேலும் ஆறுபேர் நைட் ஷிப்டில் வரத் தயாராம். அதைவிடக் கேவலம் கார்த்திக்கை விட்டே அவர்கள் ட்ரெய்ன் பண்ணச் சொன்னார்கள். இரண்டு வாரத்தில் அவனை வீட்டிற்கு அனுப்பியதில் கார்த்திக் மனம் நொறுங்கிப் போய் விட்டான்.
சியாமளாவையும் அவளுடைய கம்பெனி வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அவளும் C.P.A எல்லா அக்கௌண்டிற்கும் இனிமே கொச்சினில் ஏதோ கம்பெனி உடன்பாடு என்று வேலை நீக்கம் செய்து விட்டனர். வேலை கிடைப்பது லேசான விஷயமில்லை. ஒருமாதம் இரண்டு மாதம் என இழுத்துக் கொண்டே போனது. ஆறுமாதம் ஓடி விட்டது. 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' என்கிற நிலைமை. இருக்கிற சேவிங்க்ஸை எடுத்துச் செலவு செய்தனர்.
ஜானகியும் கிட்டாவும் மனம் நொந்து போயினர். இந்தப் போறாத வேளையில் நாம் வேறு வந்து மாட்டிக் கொண்டோமே என்று தாளாத வேதனை.
ஒருநாள் கார்த்திக் மெல்ல, "அம்மா, நான் ஒண்ணு சொல்றேன். டே கேருக்கு மாசம் ரெண்டு குழந்தைகளுக்கும் 350 டாலர் ஆறதே. நீங்களே பார்த்துக்க முடியாதா? செலவும் குறையுமே. என்ன சொல்றீங்க?. ஒன்றும் பிரச்னை இல்லையே" என்றான்.
ஜானகிக்கு மனதுக்குள் நெருடியது. இருந்தாலும் பிள்ளை கஷ்டப்படுகிறானே என்று ஒப்புக் கொண்டாள். இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது ஒன்றும் சாதாரண வேலை இல்லை. மகனும், மருமகளும் பாதி நேரம் வேலைவாய்ப்பு தளங்கள், டெலிஃபோன் இண்டர்வியூ என்று வேலைக்காகச் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். வீட்டுப் பொறுப்பு முழுவதும் ஜானகியின் தலையில். "அப்பா, கூமான் கிளாஸ் நிறுத்திடப் போறேன். பசங்களுக்கு மேத்ஸ் சொல்லிக் கொடுங்க. என் பிரண்ட் கிட்டேயிருந்து கூமான் பழைய மேத்ஸ் பேப்பர் எல்லாம் காபி வாங்கிட்டு வரேன். மாசம் அது ஒரு செலவு மிச்சம் பண்ணலாமே."
கிட்டா ஒத்துக் கொண்டார். மனதுக்குத் தன்னுடைய பேப்பர் படிக்கிற டைம், டி.வி. பார்க்கற டைம் எல்லாம் போச்சு எனச் சங்கடப்பட்டார்.
"வாரத்தில் ஒரு நாள் புல் வெட்டறது. மிஷின்தான் இருக்கே. ஸ்னோ விழற நாள்ல ஸ்னோ க்ளியர் செய்யறது. இப்படியே வேலை செய்தா நமக்கு டாலர் செலவு மிச்சம்தானே" பிள்ளையின் பேச்சுக்கு மறுபேச்சுக் கூறாமல் எல்லாம் செய்ய வேண்டியதாயிற்று.
மகனுக்கும் மருமகளுக்கும் வேலை கிடைத்தபாடில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை கிட்டாவும், ஜானகியும் வேலை செய்த வண்ணம் இருந்தனர். வயது காரணமாக அயர்ச்சியும் சோர்வும் சேர்ந்து கொண்டது. வீடு வாக்குவம் செய்வது, பாத்ரூம் க்ளீனிங் எல்லாம் சேர்ந்து கொண்டது.
"இன்னும் என்ன யோசனை, குழந்தை சரிகா அழறதே, காதுல விழலையா?" கதவைத் திறந்து கொண்டு வந்த கிட்டா "வெளில ஸ்னோ அள்ளிக் கொட்டிட்டு வந்திருக்கேன். கை, கால் எல்லாம் விரைச்சுப் போச்சு. சூடா ஒரு காபி குடு. குழந்தையைப் பார்" சோபாவில் சாய்ந்தார்.
போன் மணி அடித்தது. சென்னையிலிருந்து தங்கை மீனாதான். போனை எடுக்கத் தோன்றாமல் வெறித்துப் பார்த்தபடி ஜானகி இருந்தாள்.
"உம். எடு. போனை"
எடுத்தாள்.
"அட மீனாவா. நாங்க ரொம்ப நன்னா இருக்கோம். இவாளுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லைடிம்மா. எல்லாம் நல்லபடியா போயிண்டிருக்கு. எல்லோரும் சௌக்யம். சரி. வேற ஒண்ணுமில்ல," என்று தங்கையிடம் கூறி விட்டுக் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டாள். போனை வைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள்.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |