மன்னனின் கேள்வி
அமரபுரி நாட்டை அமரசேனன்கற மன்னன் ஆண்டு வந்தான். அடுத்து அந்த நாட்டை ஆளத் தனக்கு ஒரு வாரிசு இல்லையேங்குற குறை இருந்தது. திடீர்னு ஒருநாள் மன்னனுக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சி. படுத்த படுக்கையா ஆயிட்டான். அதுனால அவனால ஆட்சிய கவனிக்க முடியலை. மந்திரியும் வயசானவரா இருந்ததால அடுத்து யாரை ஆட்சிப் பொறுப்புல நியமிக்கலாம்னு அவன் யோசிச்சிக்கிட்டு இருந்தான்.



ஒருநாள் மந்திரியைக் கூப்பிட்ட மன்னன், நான் கேக்குற அஞ்சு கேள்விகளுக்கும் யார் சரியா பதில் சொல்றாங்களோ அவங்களத்தான் அடுத்து நான் ஆட்சி பீடத்துல நியமிக்கப் போறேன். இதை நாடு முழுக்கத் தண்டோரா போடுங்க. யார் சரியாச் சொல்றாங்களோ அவங்க இந்த நாட்டின் மன்னர். தவறாச் சொன்னாங்கன்னா அவங்களுக்கு நூறு கசையடி தண்டனைன்னு சொல்லி அனுப்பினான்.

மந்திரியும் நாடு முழுக்க பறை அடித்து மன்னனோட கேள்விகளைப் பரப்பினார்.

உலகத்திலேயே வேகமானது எது?
உலகத்திலேயே கொழுப்பு அதிகமானது எது?
உலகத்திலேயே மென்மையானது எது?
உலகத்திலேயே சிறப்பானது எது?
உலகத்திலேயே உயர்வானது எது?

நாட்டை ஆள்ற ஆசையில பலபேரு அரண்மனைக்கு வந்தாங்க. விதவிதமான பதில்களைச் சொன்னாங்க. உலகத்திலேயே வேகமானது சிறுத்தைன்னான் ஒருத்தன். இன்னொருத்தன் இல்லை கங்காருன்னான். பன்றி இறைச்சிக்குத்தான் கொழுப்பு அதிகம்னான் ஒருத்தன். கிடையவே கிடையாது மான் இறைச்சிலதான் அதிகக் கொழுப்புன்னான் இன்னொருத்தன். உலகத்திலேயே மென்மையானது இலவம் பஞ்சுன்னான் ஒருத்தன். இன்னொருத்தன் இல்லை, இல்லை, மயிலிறகுன்னான். சிறப்பானது அலங்காரமான குதிரைல போறதுன்னான் ஒரு ஆள். இல்லைப்பா, யானை மேல உட்காந்து போறதுதான் சிறப்புன்னான் இன்னொருத்தன். உயர்வானது செல்வத்தோட பணக்காரனா வாழறதுதாங்கறது ஒரு ஆளோட கருத்து. இன்னொரு ஆளோ, இல்லை, மன்னா, உறவுகளோடு மூணு வேளையும் நிம்மதியா சாப்பிட்டு கவலை இல்லாமத் தூங்குறதுதான் உயர்வானதுன்னான்.

இப்படி ஆளுக்கு ஆள் மாறிமாறிச் சொல்லிட்டிருந்தாங்க. இதுல எதுவுமே மன்னன் நினைச்ச கருத்துக்கு ஏத்த மாதிரி இல்லாததுனால எல்லோருக்கும் நூறு கசையடி கொடுத்து விரட்டி விட்டான். இப்படியே நாட்கள், வாரங்கள்னு போயி மாசங்கள் பலது ஆச்சு. மன்னனோட கேள்விக்குச் சரியான பதிலை யாராலயும் சொல்ல முடியலை. மன்னனுக்கோ நாளுக்கு நாள் உடம்பு நலிவடைய ஆரம்பிச்சுது.

இப்படி இருக்குறப்போ மன்னனோட அந்தரங்க சேவகன் வீட்டுக்கு, பக்கத்து நாட்டுல வசிச்ச அவனோட மச்சான் வந்திருந்தான். சேவகன் மூலமா மன்னனோட கேள்விகளைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டவன், இவ்ளோதானா, நாளைக்கு என்னை ராசாகிட்ட கூட்டிக்கிட்டுப் போ. நான் பதில் சொல்றேன்னான். இதோ பாரு நீ தப்பா பதில் சொன்னீன்னா நானே உன்னை சவுக்கால அடிக்க வேண்டி இருக்கும்னான் சேவகன். அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, நீ கூட்டிட்டுப் போன்னான் மச்சான்.

மறுநாள் அரண்மனைல மன்னன் முன்னாடி போய் நின்னான் சேவகன். தன்னோட மச்சான் கேள்விக்கு விடையோட வந்திருக்கான்னு சொல்லி, மச்சானை அறிமுகப்படுத்தினான். மன்னனும் பதிலை சொல்லச் சொன்னான்.

ஒவ்வொரு கேள்விக்கும் அவன் பதிலச் சொல்லச் சொல்ல மன்னன் முகத்துலே ஒரே சந்தோஷம். "நீதான்பா இனிமே இந்த நாட்டோட ராஜா" அப்படின்னு சொல்லி, ஓடி வந்து அவனைக் கட்டிக்கிட்டான். உடனே அவனுக்கு அந்த நாட்டோட ராஜாவாகப் பட்டம் சூட்டினான்.

குழந்தைகளே, மன்னன் கேட்ட கேள்விக்கு அந்த மனிதன் என்ன பதில் சொல்லியிருப்பான்? நல்லா யோசிச்சு விடைய தென்றலுக்கு எழுதி அனுப்புங்க. அது சரியா இல்லையான்னு அடுத்த மாசம் பார்க்கலாம். சரியா?

சுப்புத்தாத்தா

© TamilOnline.com