ஷிர்டி
மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் ஜில்லாவில் கோபர்காங் தாலுகாவில் கோதாவரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஷிர்டி. சாயிபாபாவினால் முக்கியத்துவம் பெற்றது இந்த ஊர். ஷிர்டி பாபா ஓர் அவதார புருடர். ஷிர்டியில் ஒரு வேப்ப மரத்தடியில் அழகிய முகம் படைத்த இளைஞனாக ஆத்ம நிஷ்டையில் அமர்ந்ததாக அறியப்பட்டார். அந்தணர் குலத்தில் தெய்வக் குழந்தையாகப் பிறந்து, இஸ்லாமியப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு ஊர் ஊராகச் சுற்றிப் பின் ஷிர்டியில் தங்கி அங்கேயே மக்கள் மதிக்கும் மனித தெய்வமாக, பாபாவாக ஆனார்.

பாரசீக மொழியில் பாபா என்றால் பெரியவர். மக்களால் 'ஷிர்டி சாயி' எனப் போற்றப்பட்டார். ஆரம்ப காலத்தில் பக்கிரியாகவும், பின் மூலிகை வைத்தியராகவும், கிராமத்து மக்களின் வலி, உபாதைகளைப் போக்கி அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம். மசூதியில் தங்கியபடியே மகேஸ்வரன் கோவிலுக்கும் செல்வார். அம்பாள், ஆஞ்சநேயர் அவருக்கு இஷ்ட தெய்வம். ஈஸ்வரன், அல்லா, ராமன் என்பன எல்லாம் ஒரே கடவுளின் பல பெயர்கள் என்பதும், பிறர் மதத்தைப் போற்றுவதும் ஒரு பக்தனின் கடமையாகும் என்பதும் அவரது அருள் வாக்கு. உண்மை, அன்பு, நேர்மை இவை இருந்தால் இறையருள் நம்மைத் தேடிவரும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் பாபா. சமுதாயத்துக்கு ஏற்பட்ட துயர்களைத் துடைத்து, பஞ்சம், பிணி, பாவங்களைப் போக்கி மக்களை, நாட்டை, சமுதாயத்தைக் காத்த கருணாநிதி ஷிர்டி பாபா என்பதை அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், நிகழ்த்திய அற்புதங்கள் மூலம் அறியலாம்.

ஸ்ரீராமநவமி, உருஸ் என்று திருவிழாக்களை ஒன்றாக இணைத்துக் கொண்டாடும் வழக்கத்தை பாபா ஏற்படுத்தினார். ஹிந்து, முஸ்லிம் சமூகத்தினரை ஒற்றுமைப்படுத்தும் இக்குறிக்கோளைப் பிற்கால நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வருடம் ஸ்ரீராம நவமி அன்று (ஏப்ரல் 3, 2010 ) ஷிர்டியைச் சுற்றிலும் அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்தும் நடந்தே இளைஞர்கள், குழந்தைகள், முதியோர்கள் என விடியற் காலையிலிருந்து நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஷிர்டிக்கு வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர் என்பது கண்கூடான உண்மை.

தமிழ்நாட்டில் பாபாவின் கோவிலைக் கட்டி, அவரது புகழைப் பரப்பியவர் நரசிம்ம சுவாமி அவர்கள். 1918ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று பாபா சித்தியடைந்தார். சிறிய பிருந்தாவனமாக இருந்த அவரை அடக்கம் செய்த இடம் இன்று கோடிக்கணக்கில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் மகத்தான சக்தி மிக்க ஆலயமாகத் திகழ்கிறது. ஷிர்டியில் பாபாவின் ஆளுயரத் திருவுருவம் ஜீவசமாதியின் மேல் அமைந்துள்ளது. ஜீவகளையோடு பகவான் ஆசி தருவதைத் தரிசிப்பது பெரிதும் பாக்கியம்.

பகவானின் ஆரத்தி உட்பட ஷிர்டி ஆலய வழிபாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண: www.shrisaibabasansthan.org

பகவானின் முழுமையான வரலாறைத் தமிழில் அறிந்து கொள்ள: www.shrisaibabasansthan.org

ஷிர்டி சாயி சத்சரித்திரம் என்ற அவரது வரலாற்று நூலை ஏழுநாட்களில் பக்தி சிரத்தையோடு முழுமையாகப் பாராயணம் செய்து முடித்தால் நியாயமான விருப்பங்கள் கைகூடும் என்பதும், கோரிக்கை எதுவுமின்றிப் பாராயணம் செய்பவர்களுக்கு ஆன்மீக உயர்வு ஏற்படும் என்பதும் பக்தர்களின் அனுபவமாகும்.

ஷிர்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்: சமாதி மந்திர், குருஸ்தான் வேப்ப மரம், (பாபா அநேக ஆண்டுகள் இருந்த இடம். இங்குதான் ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி வழிபடுகின்றனர்.) அடுத்து சிவன், சனீஸ்வரன், பிள்ளையார் கோயில், லெண்டி பார்க் எனும் நீரோடைக்கு அருகில் உள்ள இடம், நந்தா விளக்கு, துவாரகா மாயி - பாபா வாழ்ந்த மசூதி - உள்ளே வெண்கல மணி, பாபா சாய்ந்து அமர்ந்திருந்த இடம், ஹோம குண்டம் உள்ளது. திருநீற்றுப் பிரசாதம் உதி கவுண்டரில் வழங்கப்படுகிறது. புலி, குதிரை உருவச் சிலைகள், மாருதி கோவில், பாபாவின் சீடர் அப்துல்லா இருந்த இடம், லக்ஷ்மி கோவில், கண்டோபா கோவில், மியூசியம் ஆகியன அவசியம் காண வேண்டியவையாகும்.

ஷிர்டியைக் தரிசிப்போம்; சிறப்பாக வாழ்வோம்.

(இந்திய ரயில்வேயின் 'பாரத தரிசனம் சிறப்புச் சுற்றுலா' ரயிலில் சென்னை டிராவல்ஸ் டைம்ஸ் இண்டியா என்னும் நிறுவனம் இந்தியாவின் முக்கிய திருத்தலங்களைத் தரிசிக்கச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. அவர்களே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று உணவு, ஓய்வறை, பயணங்கள், தரிசனங்கள் என அனைத்து சேவைகளையும் மிகச் சிறப்பாக வழங்குகின்றனர். ரயிலைக் குறித்த நேரத்தில் இயக்குவதுடன், சரியான திட்டமிடல், பயணிகள் உடைமைகளுக்குப் பாதுகாப்பு, மருத்துவ வசதி என அனைத்தையும் மிகச் சிறப்பாகச் செய்கின்றனர். வட இந்தியச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பாதுகாப்பான, நிம்மதியான பயணம், தரிசனம்.)

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com