ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.) தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை
1986ம் ஆண்டில் போப் ஜான்பால் இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் சென்னையும் இருந்தது. திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரன் பாரம்பரிய மிக்க நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி போப்பை வரவேற்கக் காத்திருந்தார். போப் வந்திறங்கிய உடனேயே பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். வேத பாராயண முழக்கங்களுக்குப் பின் சித்ரா வரவேற்பு நடனத்தைத் தொடங்கினார். என்னையும் அறியாமல் என் கைகளைக் குவித்து கண்களை மூடி வணங்கினேன். திடீரென என் உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போலவும், ஒரு மென்மையான உணர்ச்சி பரவியதாகவும் உணர்ந்தேன். நான் மெல்லக் கண்களைத் திறந்தபோது போப்பாண்டவர் கருணையுடன் தனது ஒரு கரத்தை எனது கூப்பிய கரங்களின் மீது வைத்திருந்தார். இதைக் கண்டவுடன் நான் அவரது கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு காலத்தை மறந்து அசைவற்று நின்று கொண்டிருந்தேன். அவருடன் வந்திருந்த குருமார்களில் ஒருவர் ஒரு பரிசுப் பொருளை என் உள்ளங்கையில் வைத்தார். அது ஒரு சிறிய ஜெபமாலை. சித்ராவின் கையிலும் ஒரு ஜெபமாலை. நாங்கள் மிக ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தோம்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டம் மகிமை பொருந்தியது. திருக் குர் ஆன், பகவத் கீதை ஆகியவற்றிலிருந்து சுலோகங்கள் படிக்கப்பட்டன. குருநானக்கின் பாடல் வரிகள் ஓதப்பட்டன. போப் மனித குலத்தின் பொது நலனுக்காகவும் இந்தியாவின் வளமான ஆன்மீகப் பாரம்பரியம் பற்றியும் பேசினார். கூட்டத்திற்குப் பிறகு அனைவருடனும் கலந்து உரையாடினார். சிலர் விழுந்து வணங்கினர். சிலர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். அவரது கரங்களையும் கணையாழியையும் நாங்கள் முத்தமிட்டபோது மிகவும் உணர்ச்சி வசப்பட்டோம். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அன்று ராஜாஜி ஹாலில் நடந்ததை என்றென்றும் சிந்தனையில் வைத்துப் போற்றுவார்கள் என்று நினைக்கிறேன். அவர் அளித்த ஜெபமாலை பல ஆண்டுகள் என் கைப்பையில் இருந்தது. என்மகன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும்போது அந்த ஜெபமாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து கொண்டான். அது துண்டு துண்டாக உடையும்வரை அதை அவன் தன் கழுத்திலிருந்து அகற்றவில்லை. அத்தனை துண்டுகளையும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஜெபமாலையின் துண்டுகளை நான் பார்க்கும்போதெல்லாம் போப் ஜான் பாலுடன் நடந்த புனிதமான சந்திப்பு என் கண் முன்னர் நிழலாடும்.
சோப்போரோவின் பனித் திருவிழா சோப்போரோ, ஜப்பானில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று. இது வளரும் தொழில் நகரம். இங்கு ஆண்டுதோறும் பனித்திருவிழா நடைபெறுகிறது. சோப்போரோ மக்கள், நன்கு படித்தவர்கள், நாகரீகமானவர்கள், மதச்சார்பற்றவர்கள். அங்கு பழைய ஜப்பானிய கலாசாரம், ஆடை அணிகள், நாடக அரங்கம், தட்பவெப்ப சூழ்நிலை இவைகளைக் காண முடியாது. மிகவும் குளிரான இடம். ஆண்டில் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். பல மாதங்கள் சாலையின் இருபுறங்களிலும் பொது இடங்களிலும் பனிப்பொழிவு குவிந்து கிடக்கும். கலைஞர்கள் பனியில் மனித உருவம் செய்து விளையாடுவார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் எல்லா வயதினரும் இந்தத் திருவிழாவில் பங்கெடுத்துக் கொள்வார்கள். பள்ளிச் சிறாருக்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் சில வேடிக்கைப் பிறவிகளையும், தேவதைக் கதைகளில் வருகிறவர்களையும் வடிவமைக்கிறார்கள். பெரிய சிற்பங்கள் செய்வதற்கும் இன்னொரு பிரிவு இருக்கிறது. 'ஜப்பானியச் சக்கரவர்த்தியின் கோடைக்கால அரண்மனை', ரஷ்யாவில் உள்ள 'கிரெம்ளின்', 'தாஜ்மகால்' மாதிரியிலான பெரிய கட்டிடங்கள் பனிக்கட்டியில் செதுக்கப்படுகின்றன. 1995ல் சோப்போரோ சிற்பிகளால் மறுவடிவம் அமைக்கப்பட்ட 'ஹங்கேரியின் நாடாளுமன்ற' கட்டடத்திற்கு, திருவிழா நடைபெறும் பிரதான இடத்தில் சிறப்பான இடம் வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோப்போரோவில் ஆறுமாடிக் கட்டட அளவில் தாஜ்மஹால் படிமமாகித் திருவிழாவில் ஆண்டுதோறும் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது இந்தியாவைப் பற்றிப் பெரும் விழிப்புணர்வை உண்டாக்கியது.
வேறொரு காரணத்தாலும் சோப்போரோவில் தாஜ்மஹால் பிரபலமாகி இருந்தது. அங்கே தாஜ்மஹால் என்ற பெயரில் ஆறு உணவகங்கள் இருந்தன. இவற்றின் உரிமையாளர் திலீப் மன்சுக்கானி. சிறந்த இந்திய உணவுவகைகளை ஜப்பானியர்களின் ருசிக்கேற்றவாறு சிறிது மாற்றம் செய்து வழங்குவதில் இந்த உணவகங்கள் பிரபலம். இந்த உணவகங்களில் ஒன்றில் உணவருந்தும் கண்ணாடி மேஜையில் மசாலா, மணமூட்டும் பொருள்கள், மூலிகைகள் போன்றவை வாடிக்ககையாளர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இது சமையலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. சிந்தி வம்சாவளியைச் சேர்ந்த திலீப் மன்சுக்கானி, டேனியல் என்று அறியப்படுகிறார். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு சோப்போரோ வந்தவர். ஒரு ஜெர்மானியப் பெண்ணை மணம் செய்து கொண்டுள்ளார். ஆளுநர் முதல், தொழிலாளி வரை அவருக்கு வாடிக்கையாளர்கள். அவருடைய உணவகம் பெண்கள் குழந்தைகள் மத்தியில் பெரிதும் பிரபலம். அங்கே குழந்தைகளுக்கெனப் பிரத்யேக உணவு வகைகள் உண்டு. அவை மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. வரும் குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரான சிறிய துணி பொம்மை வழங்கப்படுகிறது. இந்த உணவகங்கள் இந்திய கைவினைப் பொருள்கள், நகைகள், கம்பளித்துண்டுகள் பொம்மைகள், மரத்தில் செதுக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றையும் விற்பனை செய்கிறது.
சோப்போரோவில் நான் ரஜா என்பவரைச் சந்தித்தேன். இவர் தாஜ்மஹால் உணவகக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர். இந்தியாவின் கடைசி மொகலாய சக்கரவர்த்தியான பகதூர்ஷா ஜாபர் வம்சாவளியில் வந்தவர். 1857 சிப்பாய்க் கலகத்துக்குப் பின் இனி வரும் காலத்தில் இத்தகைய கலவரம் நடக்கக் கூடாது என்பதற்காக பிரிட்டிஷார், கடைசி மொகலாய சக்கரவர்த்தியின் குடும்பத்து ஆண், பெண் உறுப்பினர்கள் அனைவரையும் ஈவு இரக்கமின்றிக் கொன்றுவிட்டனர். அவருடைய பேத்தியில் ஒருவர் ஆக்ராவிலுள்ள தாய்மாமன் வீட்டுக்குப் போனவர் அங்கேயே தங்கிவிட்டார். படுகொலைச் செய்தி வெளியானதும் அவரது உறவினர்களால் மறைவிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரையில், பிரிட்டிஷ் நிர்வாகத்திற்குத் தெரியாமல் பொய்யான பெயர், அடையாளங்களுடன் மறைந்து வாழ்ந்தார். அவர்தான் ரஜாவின் கொள்ளுப்பாட்டி.
1957ல் சிப்பாய் கலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போதுதான் பஹதூர்ஷா ஜாபரின் சந்ததியினர் இருவர் உயிருடன் இருப்பது வெளியே தெரிந்தது. அவரது கொள்ளுப் பேரன்களில் ஒருவரும் பேத்தியும் கண்டுபிடிக்கப்பட்டனர். அண்ணன், தங்கை இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள். 1957 ஆகஸ்டில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி, தர்மயுகம் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் இவர்களுடைய கதை பிரசுரமானது. கடைசி மொகலாயச் சக்கரவர்த்தியும் அவரது மனைவியும் அணிந்திருந்த ஆடைகளை உடுத்திக்கொண்டு இருவரும் தோற்றமளித்தனர். அண்ணன் திருமணம் ஆகாமலேயே இருந்துவிட்டார். அவரது சகோதரி விதவை. அவருக்கு இரண்டு பெண்கள். அவர்களில் ஒருவர் பெண்கள் பள்ளியில் ஆசிரியை. இன்னொருவர் டெல்லி பல்கலைக்கழக நூலக விஞ்ஞான மாணவி. ரஜாவின் தாய் அவர்களுடைய அத்தையின் மகள். பிரிவினைக்குப் பிறகு இந்தக்குடும்பத்தின் கிளை பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது. பாகிஸ்தானிலிருந்து ரஜா ஜப்பான் சென்று விட்டார்.
தாஜ்மகாலைக் கட்டியவர்கள் ரஜாவின் மூதாதையர்கள். இப்போது அவர் தாஜ்மஹால் உணவகக் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பது மிகவும் பொருத்தம். அவர் ஜப்பானியப் பெண்ணை மணந்து கொண்டு ஜப்பானிய கலாசாரத்தைத் தழுவிக் கொண்டுவிட்டார். சோப்போரோ மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
ரஜா எங்களை பாரம்பர்யம் மிக்க ஷின்டோ ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள தலைமைக் குருவுக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். தலைமைக் குரு தனிப்பட்ட பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ரஜாவும் மன்சுக்கானியும் எங்களுடன் இருந்ததனால் எங்கள் பயணம் ரசிக்கத்தக்கதாக, பயனுள்ளதாக அமைந்தது. இவர்கள் பனிச் சிற்பிகளுக்கும், போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கும் கோழி இறைச்சியும், வாட்டிய ரொட்டியும் பரிமாறினர். மேலும், ரஜ்மா, காரமான கறிகளும் பரிமாறப்பட்டன. இந்திய உணவு வகைகள் எப்படி இருக்கும் என்பதை இவை கோடி காட்டியதுடன் நாவில் நீர் ஊறும்படியாகவும் இருந்தன.
எல்லோரையும் கவர்ந்த கணேசர் பனிச்சிற்பம்
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சோப்போரோ பனித் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பெருந் திருவிழா ஒரு கடினமான குளிர்ச் சூழலை, மனிதர்களின் படைப்பாக்க சக்தி எப்படி நல்ல வாய்ப்பாக மாற்றுகிறது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. குளிர்காலத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டு முடங்கிக் கிடக்காமல் சோப்போரோ மக்கள் குளிரையும் பனிக்கட்டியையும் கொண்டாடுகிறார்கள். வெளியே வந்து இயற்கை அன்னையைச் சந்திக்கிறார்கள். கலைப் படைப்பிற்கு ஒரு சாதனமாகப் பனிக்கட்டியை பயன்படுத்துகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இங்கே சர்வதேச ரீதியில் பனிக்கட்டிச் சிலைப் போட்டி நடந்து வருகிறது.
இந்திய அரசின் சற்றுலாத் துறையின் பிராந்தியப் பொது இயக்குநராக டோக்கியோவில் பணியாற்றி வந்த திருமதி. டாக்டர். பூர்ணிமா சாஸ்திரியின் முன் முயற்சியினால், தமிழ்நாடு கலை, கலாசாரத் துறையின் ஆணையராக இருந்த எனக்கு இந்தத் திருவிழாவில் பங்குகொள்ளச் சிற்பிகளையும் பரத நாட்டியக் கலைஞர்களையும் அனுப்பி வைக்கும்படி அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எங்கள் துறையின் பட்ஜெட்டில் பணம் இல்லை. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மாநில அரசு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தது. டாக்டர். பூர்ணிமா சாஸ்திரி தனது ஓட்டல் அறையில் எனக்கு, தங்கிக்கொள்ள இடமளித்தார். டோக்கியோவுக்கு எங்களை இலவசமாக அழைத்துச் செல்லும்படி ஏர் இந்தியா நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டேன். குழுவினரை டோக்கியோவிலிருந்து சோப்போரோவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல அந்த ஒரு லட்சம் ரூபாயை நான் பயன்படுத்திக் கொண்டேன்.
அங்கே இந்தியாவின் சார்பாக எந்தப் பனிச்சிற்பத்தைச் செய்வது என்பதையும் முடிவு செய்ய வேண்டி இருந்தது. மிகவும் யோசித்து, கணேசரை வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். யானைமுகக் கடவுள் இந்தியத் தெய்வங்களின் திருக்கூட்டத்தில் மிகவும் வசீகரமானவர். குழந்தைகளுக்கு அவரை மிகவும் பிடிக்கும். மங்களகரமான சுபம் தரும் கடவுள். எந்தப் புதிய காரியத்தைத் தொடங்குவதற்குமுன் இந்துக்கள் கணேசரின் ஆசியைக் கோருகின்றனர். ஆகவே அதையே சின்னமாகத் தேர்ந்தெடுத்தேன்.
மகாபலிபுரம் கோவில் சிற்பக் கட்டடக்கலைப் பள்ளியிலிருந்து ராஜேந்திரன், சபாபதி என்ற இரண்டு சிற்பிகளையும் இரண்டு அழகிய நாட்டியப் பெண்களையும் தெரிந்தெடுத்தேன். அவர்களில் ஒருவர் ஸ்ரீகலா பரத். ஷெரடன் ஓட்டல் குழுவிலிருந்து இரண்டு இளம் சமையல்காரர்களையும் பனிக்கட்டிச் சிற்பிகளையும் சேர்த்துக் கொண்டதின் மூலம் எங்கள் குழு வலுவடைந்தது. குளிர் இருபது டிகிரிக்கும் கீழாக இருந்தபோதிலும் கணேசரைச் சுற்றிப் பெண்கள் நடமாடியதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர். இந்த நிகழ்வுகள் படம் எடுக்கப்பட்டு பி.பி.சி., சி.என்.என். மற்றும் பல சர்வதேசத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியது.
கணேசர் சிற்பம் கம்பீரமாக, அற்புதமாக இருந்தது. ஆனால் அது போட்டிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அளவை விட உயரமாக இருந்ததால் பரிசு கிடைக்கவில்லை. இருந்த போதிலும் அது பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றது. யானைமுகக் கடவுள் சோப்போரோ வருகிறார் என்று பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டபோது ஜப்பானிய மக்கள் வசீகரிக்கப்பட்டனர். வருகை தந்தவர்களாலும், பத்திரிகை நிருபர்களாலும் பேட்டி காணப்பட்டோம். இந்த அரிய வாய்ப்பை இந்தியாவின் கலாசாரத்தை மேம்படுத்தப் பயன்படுத்திக் கொண்டோம். அடுத்த ஆண்டு நான் கலை, கலாசாரத்துறையில் ஆணையராக இல்லாத போதிலும் பூர்ணிமா சாஸ்திரி, சோப்போரோ விழாவில் பங்கெடுக்க மீண்டும் அழைப்பு விடுத்தார். இம்முறை அவர்கள் படைத்த சரஸ்வதி தேவியின் பனிச்சிலை இரண்டாவது பரிசைப் பெற்றது. இதிலிருந்து இந்தியா தொடர்ந்து அவ்விழாவில் பங்கு பெறுவது வழக்கமாகிவிட்டது.
ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.) தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை |