சகமனிதர்கள் முன்னுக்கு வருவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குபவர் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், பிறரது சாதனைகளைச் சரித்திரமாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார் மு. முத்துசீனிவாசன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி கிராமத்தில் ஜனவரி 06, 1944 அன்று இவர் பிறந்தார். தந்தை என்.எஸ். முத்து ஐயங்கார், தாய் ரங்கநாயகி. விவசாயக் குடும்பம். கல்வி நதிக்குடியில் தொடங்கியது. சூழ்நிலை காரணமாக குடும்பம் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தது. பள்ளி இறுதிப்படிப்பை அங்கே நிறைவு செய்தார். மேற்கொண்டு படிக்கக் குடும்பச் சூழ்நிலை இடம் தராததால் தற்காலிகப் பணிகள் சிலவற்றைச் செய்து வந்தார். பின் அரசுத் தேர்வு எழுதி, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் (மியூசியம்) இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார்.
இயல்பாகவே கலை, இலக்கிய தாகம் மிகுந்த முத்துசீனிவாசன், பள்ளியில் படிக்கும் போதே எழில் என்ற பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். காரைக்குடி கம்பன் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவற்றில் கலந்து கொண்டதும், கம்பனடிப்பொடி சா. கணேசன், வ.சுப. மாணிக்கம் போன்றோரின் சொற்பொழிவுகளைக் கேட்டதும் அவருக்குள் இலக்கிய தாகத்தை அதிகப்படுத்தின. கவிதை, நாடகங்கள் எழுத ஆரம்பித்ததுடன் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பணியில் இருக்கும்போதே இலக்கிய, வரலாற்று, பண்பாட்டு அமைப்புகளில் பங்கேற்றதுடன், தமிழ் நாடு அரசு அலுவலர் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர் எனப் பல பதவிகளை வகித்தார்.
அரசு அருங்காட்சியகத்தில் பணியாற்றியதால் ஒருகாலத்தில் புகழ்பெற்ற சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை நகரின் பெருமை, பண்பாட்டுச் சிறப்பு, வரலாறு ஆகியவற்றை அவர் அறிய நேரிட்டது. புதுக்கோட்டை தந்த சாதனையாளர்களான திவான் சேஷையா, தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை, மான்பூண்டியா பிள்ளை போன்ற பல எண்ணற்ற சான்றோர்களின் வரலாற்றை அறிந்தார். தாம் அறிந்தவற்றை எழுத்தில் வடிக்க ஆரம்பித்தார். வாழும் காலத்திலேயே சான்றோர்கள், சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டுமென்று விரும்பிய இவர், தாம் தலைவராக இருந்த 'புதுக்கோட்டை இலக்கியப் பேரவை' மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்ய ஆரம்பித்தார். அச்சாதனையாளர்களைப் பாராட்டி விருதளிக்கவும் வகை செய்தார். 1992ம் ஆண்டு தொடங்கி இதுவரை 339 சாதனையாளர்களை விழா எடுத்து கௌரவித்திருக்கும் இவர், அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை ஒன்பது நூல்களாக எழுதியிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாகவதர், சாயிமாதா பிருந்தா தேவி, எஸ்.வி.எஸ்., தியாகராஜ காடுவெட்டியார், ராவ்சாகிப் அருணாசலம் உட்படப் பல சான்றோர்களது வாழ்வை ஆவணப்படுத்தியிருப்பதுடன் டாக்டர் நல்லி குப்புசாமிச் செட்டியார், வி.என். சிதம்பரம் உட்படப் பலரது வாழ்க்கை வரலாற்றையும் நூலாக்கியிருக்கிறார்.
வருங்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளவும், வரலாறு பின்னர் எழுதப்படும்போது அடிப்படைச் சான்றாதாரமாகத் திகழும் வகையிலும் சாதனையாளர்களின் வாழ்வைத் தாம் பதிவுச் செய்வதாகக் கூறும் முத்துசீனிவாசன், இப்படிப்பட்டவர்களைப் பாராட்டிப் போற்றுவது சமூகக் கடமை என்கிறார். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தச் சமூகம் அவரைப் பாராட்டிப் போற்றியதில்லை. ஆனால் இன்று உலகெங்கும் அவருக்கு விழா எடுத்துப் பெருமைப்படுத்துகிறது. இந்நிலை ஏற்படக் கூடாது என்பதே தனது எண்ணம் என்று கூறும் முத்துசீனிவாசன், பாராட்டும், அங்கீகாரமும் படைப்பாளிகளுக்குத் தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்துள்ளன. பாரதி கலைக்கூடம் சார்பில் டாக்டர் நல்லி குப்புசாமிச் செட்டியார் இவரைப் பாராட்டி விழா எடுத்துள்ளார். பாலம் கலியாண சுந்தரனாரைத் தலைவராகக் கொண்ட பாலம் அமைப்பு இவருக்குத் தங்கப்பதக்கம் அளித்து சாதனையாளர் விருது வழங்கியுள்ளது. திருவள்ளுவர் விருது, உத்தமர் விருது போன்ற விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. சொல்லாற்றல் மிக்கவர் என்பதால் சொல்லருவி என்று அழைக்கப்படும் இவருக்கு, சாதனைச் செம்மல், பாராட்டுப் பல்கலைக்கழகம், நல்மனச் செம்மல், பேச்சுத் திலகம், சாதனை மாமணி, விழா வித்தகர் எனப் பல்வேறு பட்டங்களும் அளிக்கப்பட்டதுண்டு. 38 ஆண்டுகள் அரசு அருங்காட்சியகத்தில் பணியாற்றித் தலைமை எழுத்தராக ஓய்வு பெற்றிருக்கும் இவர், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், கல்லூரிக் குழுத் தலைவர், ஆலோசகர், கண்ணதாசன் இலக்கிய மைய நெறியாளர் என இருபதுக்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய அமைப்புகளில் பதவிகளை வகித்து வருகிறார். 2010ன் 30க்கும் மேற்பட்ட சாதனையாளர்களை கடந்த டிசம்பர் மாதத்தில் இலக்கியப் பேரவை மூலம் கௌரவித்துள்ளார்.
பிறந்த ஊர் வேறாக இருந்தாலும், தாம் வாழ்ந்த புதுக்கோட்டையை வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்து, அந்த மண்ணின் சாதனையாளர்களை ஆண்டுதோறும் விழா எடுத்து கௌரவித்து வரும் முத்துசீனிவாசன், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு வாழும் உதாரணம்.
சிசுபாலன் |