எந்தத் துறையிலும் முன்னேறத் தேவை - படிப்பும், பிடிப்பும்: செல்வி ஸ்டானிஸ்லாஸ்
பெண்கள், "நம் பாரம்பரியத்தில் நீந்தி அனுபவிக்க வேண்டும், ஆனால் அதிலிலேயே மூழ்கி அமிழ்ந்துவிடல் கூடாது" என்றார் மகாத்மா காந்தி. அவரின் கருத்துக்களும், வாழ்க்கை நெறிகளும் பல பெண்மணிகளை வழி நடத்தியுள்ளன. அவரை மிக மதித்து, முன்னுதாரணமாகக் கொண்டுள்ளவர்களில் ஒருவர் செல்வி ஸ்டானிஸ்லாஸ்; காந்தியின் கருத்துப்படி நம் பண்பாட்டையும், அமெரிக்க தொழில் கலாசாரத்தையும் அழகாக ஒருங்கிணைத்து வாழ்வில் உன்னதமான ஒரு நிலையை அடைந்துள்ளவர்.

செல்வி அவர்கள், கலிஃபோர்னியா வரி வாரியத் தலைவர் (Franchise Tax Board); இப் பதவியை வகுக்கும் முதல் பெண்மணி, அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த முதல் தலைமுறையைச் சார்ந்தவர், வேற்று நிறத்தவர் (person of color) என்று பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

அவர் தமிழர் என்பதும், தென்றல் வாசகர் என்பதும் நமக்கெல்லாம் மேலும் பெருமை சேர்க்கக் கூடியவை.

அவரின் வாழ்க்கையும், சாதனைகளும் இளைய தலைமுறைக்குச் சிறந்த பாடம். செல்வி அவர்களுடன் ஒரு சுவையான உரையாடல்...

தென்றல்: ஸ்டானிஸ்லாஸ் என்னும் குடும்பப் பெயர் வித்தியாசமாய் இருக்கின்றதே, அதன் பின்னணி?

செல்வி: என் தந்தையின் பெயர் பி.ஸி. ஸ்டானிஸ்லாஸ். அது ஒரு கிழக்கு ஐரோப்பிய, கிருத்துவப் பெயர். எனது பாட்டனார் திரு ஜெ.எல்.ஸ்டானிஸ்லாஸ் பிள்ளை, 1948 சுதந்திரத்திற்குப் பின் இலங்கைத் திறைச் சேரியின் (Ceylon Treasury) முதல் செயலாளர். அவரது ஒரு சகோதரரான பெருந்தகை பீட்டர் பிள்ளை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் (PhD) பெற்றவர்; இலங்கையின் புகழ்வாய்ந்த புனித ஜோஸப் பள்ளியின் முதல்வராக பணியாற்றியவர். இன்னொரு சகோதரரான கலாநிதி (Dr.) எமிலியானஸ் பிள்ளை, யாழ்பாணத்தின் மேற்றிராணியாராகப் (Bishop) பல காலம் இருந்தார். மற்றொரு தமையனார் பெருந்தகை ல்யூக் (Fr. Luke) கொழும்பின் பிரபலமான ஆண்கள் பள்ளியின் முதல்வராக இருந்தார்.

தெ: சுவாரசியமான இளமைக்காலம் போல் தோன்றுகிறதே?

செ: ஆமாம். நான் இலங்கையில் தேசிய அளவில் ஓட்டப் பந்தய வீராங்கனையாக இருந்தேன். மேலும், சிறு வயது முதலே ஆங்கில நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறேன். ஒரு வழக்கறிஞராகவும் மேடைப் பேச்சாளர்களாகவும் பிற்காலத்தில் நான் சிறப்பிப்பதற்கு அவை அடித்தளமாய் அமைந்திருக்கலாம்.

என் பெற்றோர் எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும், முன்னோடிகளாகவும் இருந்தனர். என் வெற்றிகளுக்கு அவர்களின் பேணுதலும் முக்கிய காரணமாய் அமைந்தது. சிலோன் கோல்ட் ஸ்டோ ர்ஸ் என்ற முக்கிய நிறுவனத்தில், முதன்மை கணக்கராக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர், என் தந்தை; மிகுந்த தயாள குணமுடையவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - சிறு வயதில் வார இறுதிகளில் நான் அவர் மடியில் அமர்ந்திருப்பேன், சாரிசாரியாக வரும் கூட்டத்திற்கு வரிக் கணக்கு ஆவணங்களை தயாரித்துக் கொடுப்பார். அதனால்தானோ என்னவோ கணக்கு வழக்குகள் என் ரத்தத்தில் ஊறிவிட்டன. தந்தையின் ஊக்குவிப்பால் இலங்கைச் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குறைஞராகத் தேர்ச்சி பெற்றேன். என் பெற்றோர்களின் வழியில் நானும் பல வழக்குகளில் உதவியிருக்கிறேன். என் வேலைப் பளு காரணமாக இத்தகைய உதவிகளைத் தொடர்ந்து செய்ய முடிவதில்லை. ஆயினும், ஸாக்ரமண்டோ சட்டக் கல்லூரியில் கற்பிக்கிறேன்; கிழக்காசிய சமூகத்திலும், நான் சார்ந்த தேவாலயத்திலும் உற்சாகத்துடன் பல சேவைகளில் பங்கேற்கிறேன்.

தெ: அமெரிக்கா எப்பொழுது அழைத்தது? உங்கள் குறிக்கோள் இங்கு நிறைவேறியதா?

செ: நான் கொழும்பு நகரில் வழக்குறைஞராக இருந்தேன். எனது கணவர் அர்ஜுன் அமெரிக்காவில் நிர்மாணப் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1986ல் அவர் இலங்கை வந்தபோது எங்கள் திருமணம் நடந்தது. அதன்பின் அவருடன் ஸாக்ரமண்டோ வந்தேன்.

முயற்சி இருந்தால் வாய்ப்புகளை அள்ளி வழங்கும் நாடு அமெரிக்கா. இங்கு வந்தபின், அமெரிக்கச் சட்டப் படிப்பை முடித்து, விற்பனை வரி உள்ளிட்ட பலவற்றை மேற்பார்வை பார்க்கும் மாநில சமன் கழகத்தில் (State Board of Equalization (SBE)) பணியிலமர்ந்தேன். அங்கு, நான் வரி சம்பந்தப்பட்ட மூத்த சட்ட நிபுணராகவும், வழக்குரைஞராகவும் பணியாற்றினேன். சட்டம், வழக்குகள், வரி நிர்வாகம், குற்றவியல், மோசடி போன்ற பல துறைகளில் வழக்காடும், நிர்வகிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

ஏப்ரல் 2005ல் வரி மற்றும் கட்டண திட்டப் பிரிவில் உதவித் தலைமை ஆலோசகராக (Asst. Chief Counsel in the Tax and Fee Programs Division) நியமிக்கப் பெற்றேன். வரி செலுத்துவோர், அவர்களின் பிரதிநிதிகள், வரி நிர்வாக அலுவலர்கள், நகரம், மாவட்டம், நகர நிர்வாகத்தினர் போன்றோருக்கு வரி மற்றும் கட்டணங்கள் பற்றிய விவகாரங்களில் அறிவுரை அளிக்கும் பணி இது. எஸ்.பி.இ சம்பந்தப்பட்ட வரி முறையீடுகளுக்கு மட்டுமல்லாது, எஃப்.டி.பி சார்ந்த முறையீடு களுக்கும் நிர்வாகத்தினரைத் தயார் படுத்துவதில் பங்கேற்றேன். இவ்வாறே, முதன் முதலில் எஃப்.டி.பியுடனான தொடர்பு ஏற்பட்டது. அவ்வாறே மாநில வரி நிர்வாகத்தில் (Franchise Tax Board (FTB)) நான்காவது முதன்மை அதிகாரியாகச் சேர்ந்தேன்.

தெ: எஃப்.டி.பியின் குறிக்கோள்களை அடையத் தாங்கள் செய்யும் முயற்சிகள்?

செ: எஃப்.டி.பி நிர்வாகம் வரித்துறையில் மாநிலங்கள் அளவில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இந் நிர்வாகத்தை, அரசாங்கத் துறையினருக்கும், சட்டசபைக்கும், வரி வல்லுநர்களுக்கும், வரி செலுத்தும் கலிஃபோர்னிய மக்களுக்கும் மிக்க பொறுப்புடன் தொடர்ந்து பணியாற்ற வைத்து, இதன் நடைமுறைகள் எல்லோருக்கும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிய வைக்க வேண்டும்; இங்குள்ள ஒவ்வொரு குடிமகனும், அரசாங்கத்தையும், அதன் அதிகாரிகளையும் அவர்களது கடமை களுக்குப் பொறுப்பேற்கச் செய்யும் உரிமையைப் பெறவேண்டும். எங்கள் நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது, முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, அதன் அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் என்ன, இன்ன பிற தகவல்களும் நடைமுறைகளும் ஒரு திறந்த புத்தகம்போல் இருக்க வேண்டும். மக்கள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஒரு அங்கத்தினர்போல் பங்கேற்கும் நிலை உருவாக வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும், முதன்முறையாக வரி செலுத்தும் பல்லாயிரக்கணக்கானோர், அவர்களது கடமை, உரிமை முதலியன வற்றைத் தெளிவாக உணரும்படிச் செய்ய வேண்டும். இது ஒரு பெரிய சவாலாகவும், சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது - எந்தளவிற்கு அவர்கள் சட்டதிட்டங்களைப் புரிந்து கொள்கிறார்களோ அந்தளவிற்கு அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்.

தெ: நீங்கள் இப்பொழுது கலிஃபோர்னியா வரி நிர்வாகத்தின் முதன்மை அதிகாரியாய் ஒரு மிக உயர்ந்த பதவியில் உள்ளீர்கள். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணியும் நீங்களே. அமெரிக்காவில் குடிபெயர்ந்த முதல் தலைமுறையைச் சார்ந்தவரும், பெண்ணாகவும் இருந்து இப்பதவி வகுப்பது மிகப் பெரிய முன்னோடிச் சாதனையாகும். பின்னோக்கிப் பார்க்கும்போது, இதற்கான அஸ்திவாரம் என்று எதைக் கூறுவீர்கள்?

செ: இலங்கையில் வழக்குரைஞராக இருந்த நான், இங்கு வந்தபின் அமெரிக்கச் சட்டப் படிப்பைப் பயின்று, ஜே.டி. (JD) பட்டம் பெற்றேன். அதன்பின் மெக்ஜார்ஜ் சட்டக் கல்லூரியில் (பசிபிக் பல்கலைக்கழகம்) உயர்கல்வி பயின்று எல்எல்.எம் (LL.M) பட்டமும் பெற்றேன். 1995ம் ஆண்டு முதல் கலிஃபோர்னியா சட்டக் குழுமத்தில் (State Bar) உறுப்பினராக இருக்கின்றேன்.

எந்தத் துறையில் சிறக்க வேண்டு மென்றாலும், 'படிப்பும்' ஈடுபட்டுள்ள துறையில் 'ஆழ்ந்த பிடிப்பும்' இருப்பது மிக அவசியம். இந்த ஈடுபாட்டை ஒரு தூண்டுகோலாக்கிக் கல்வி மற்றும் உழைப்பை ஆயுதமாக்கினால், 'வானமே எல்லை' என்பதற்கு நான் சாதித்திருப்பதே ஒரு உதாரணமாகும். வரி சம்பந்தப்பட்ட சட்டத்துறையில் ஈடுபாடும், மக்களுக்குத் தொண்டாற்றும் மனித நேயமும் ஒருசேரப் பெற்றிருந்தேன். இவ்விரண்டும் சார்ந்த துறையில் சேர்ந்து, அயரா உறுதியுடன் உழைத்து முன்னேறி இன்று இந்நிலை அடைந்துள்ளேன். இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு ஒருமித்த சிந்தனையுடன் முயன்றால் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைகள் சிறப்புக்களை அடைவர் என்பதில் ஐயமில்லை.

தெ: குடிபெயர்ந்தோர் அரசாங்கப் பதவிகளில் அமர்வதோ, பொதுப்பணியில் ஈடுபடுவதோ கடினம் என்றொரு பரவலான எண்ணம் நிலவுகிறது. உங்கள் அனுபவம் எவ்வாறு அமைந்தது?

செ: என் அனுபவம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருந்தது. கலிஃபோர்னிய அரசாங்கப் பணியில் நான் இதை எப்போதும் உணர்ந்ததே இல்லை. எஸ்.பி.இயில் (S.B.E) பணியாற்றிய பொழுது, வரித்துறை சம்பந்தப்பட்ட பல சட்ட திட்டங்களையும், கொள்கைகளையும் அமலாக்கியதில் பங்கேற்றிருக்கிறேன். என் பணியில் எப்பொழுதும் நன்மதிப்புடனும், பெருமை யுடனும் நடத்தப்பட்டிருக்கிறேன். அது மட்டுமின்றி, வரி சம்பந்தப்பட்ட கல்வி புகட்டுவதில் எனக்கு மிக்க ஆர்வமுள்ளதால், ஸாக்ரமண்டோ சட்டக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்து, வரி சம்பந்தப்பட்ட கல்வியையும் கற்பிக்கிறேன். அங்கும் மிகவும் மதிப்புடன் நடத்தப்படுகிறேன்.

தெ: உங்களின் தொழில் வெற்றிக்கு முன்னுதாரண மனிதராக யாரையாவது கருதியதுண்டா?

செ: சிறு வயது முதலே மகாத்மா காந்தியை உதாரண புருஷராகக் கொண்டுள்ளேன். அவரது சகிப்புத் தன்மையும், பிறரை மதிக்கும் குணமும் என்னை மிகவும் கவர்ந்த பண்புகளாகும். வளரும் பருவத்தில் அவை என்னை நல்வழிப்படுத்தின. அன்னை தெரஸாவின் கொள்கைகள் வாழ்வில் மேலும் உயர்வடைய ஏதுவாயின. காந்திஜியின் நேர்மையான நோக்கு, இந்திய சுதந்திரத்திற்கான விடாமுயற்சி போன்ற கோட்பாடுகள், பொறுமை, கடின உழைப்பு, அர்ப்பணம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்து என்னைப் பண்படுத்தி, வாழ்வில் சிறக்க அடித்தளமாய் அமைந்தன.

தெ: உங்கள் தினசரி வாழ்வில் மிகப் பெரிய சவால் என்று எதைக் கருதுகிறீர்கள்? உங்கள் நேரத்தையும், பொறுப்புகளையும் குடும்பம், வேலை இவ்விரண்டிற்கும் பகிர்ந்தளித்து எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

செ: நான் மேற்கூறியது போல், காந்திஜியின் நேர் நோக்கும், அனைத்தும் நன்மைக்கே என்ற மனப்பக்குவமும், என் பெற்றோர்களின் உதார குணமும், அன்னை தெரஸாவின் கொள்கைகளும் வாழ்வில் என்னைச் செம்மைப் படுத்தின. அவர்கள் எத்துணை அக்கறையோடும், ஈடுபாட்டோ டும் பொதுஜனத் துறையில் ஈடுபட்டிருந்தனர் என்பதைப் பார்த்து, இயன்ற அளவு சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளும் ஆழமாகப் பதிந்து விட்டது, வேலையைக் கூட சமூகப் பணியாகவே கருதுகிறேன். அதனால் எதுவும் சவாலாகத் தோன்றுவதில்லை, எல்லாவற்றையும் சந்தர்ப்பமாகவே கருதுகின்றேன். இன்று எனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தர்ப்பம், எஃப்.டி.பியைச் சார்ந்த ஆறாயிரம் அலுவலர்களை ஊக்குவித்து, அவர்கள் இப்போது போல் எப்போதும் சிறந்த பணியாற்றத் தூண்டுகோலாக இருப்பதுதான்.

தெ: உங்களின் பொழுதுபோக்கு, பிற ஆர்வங்கள்?

செ: சமையல்! விதவிதமான, புதுமையான உணவு வகைகளச் செய்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம். வார விடுமுறைகளில் நண்பர்களுக்கு விருந்தளிப்பதை மிக விரும்புவோம். பல மாலை வேளைகளில் நான், என் கணவர், மற்றும் எங்கள் நாய் கேஸர் மூவரும் நீண்ட நடை செல்வோம். இந்த சந்தர்ப்பங்கள் எங்கள் எண்ணங்களையும், அன்றாட நடப்புகளையும் பரிமாறிக் கொள்ள ஏதுவாய் இருக்கின்றன. நாடகத் துறை சிறு வயது முதலே என்னைக் கவர்ந்த ஒன்று; இப்பொழுதும் என் கணவருடன் நாடகங்களுக்குச் செல்வதும், புத்தகம் படிப்பதும் எனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளாகும். கற்பனைக் கதைகள் முதல் வாழ்க்கை வரலாறுகள் வரை பலவகைப் புத்தகங்களையும் விரும்பிப் படிப்பேன்.

தெ: கேஸர் என்ற பெயர் புதுமையாக இருக்கின்றதே?

செ: ஹிந்தியில் கேஸர் என்றால் குங்குமப்பூ. எங்கள் குட்டி கேஸரும் (கோல்டன் ரிட்ரீவர்), குங்குமப்பூ மஞ்சள் நிறத்தில் அழகாக இருப்பான், எங்களுக்குப் பிரியமான நண்பன்.

தெ: உங்கள் கணவரைப் பற்றிச் சற்றுக் கூறுங்களேன்.

செ: என் கணவர் தீவிர கர்நாடக இசைப் பிரியர், சென்னை டிசம்பர் இசைத் திருவிழாவிற்குத் தவறாமல் செல்பவர். முடிந்த போதெல்லாம், நான் அவருடன் ஸாக்ரமண்ட்டோ மற்றும் வளைகுடாப் பகுதியில் நடைபெறும் கச்சேரிகளுக்குச் செல்வதுண்டு. வார இறுதிகளில் எங்கள் இல்லத்தில் கர்நாடக இசை ரீங்கரித்துக் கொண்டேயிருக்கும்; எங்கள் தினசரி வாழ்க்கை, கிழக்கு, மேற்கு கலாசாரத்தின் அழகிய கலவை. என் தாய்நாடுடனான உறவும் தொடர்கிறது, என் தாயைக் காண வருடம் தவறாமல் இலங்கை செல்வேன். ஆனால், வேலைப்பளு காரணமாகச் சென்ற மூன்று ஆண்டுகளாகச் செல்ல இயலவில்லை என்பதில் வருத்தமே.

தெ: வாழ்க்கையில் முக்கியமானது என்று எதைக் கருதுவீர்கள்?

செ: சந்தேகமில்லாமல் என்னை வளர்த்த என் கிறித்தவ மதம், என் நன்னம்பிக்கைகள்.

தெ: இன்றைய இளைய தலைமுறையினருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் சில வார்த்தைகள்?

செ: இங்கு வந்து பல துறைகளில் வெற்றிகளை ஈட்டிய பின்பும், பாரம்பரியக் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றிக் கட்டிக் காத்து வரும் நம் தேசத்தவர் பலரையும் எங்கும் காண்கிறோம். அமெரிக்கா அளிக்கும் மேன்மையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், நமது பாரம்பரியத்தில் உள்ள நன்மைகளையும் மறக்கக்கூடாது. எல்லா கலாசாரங்களிலும், நாகரீகங்களிலும் நல்லதும், கெட்டதும் கலந்தே இருக்கும். நல்லவற்றை எடுத்துக் கொண்டு, தீயவற்றைக் களைவது நம் முதன்மைப் பொறுப்பாகும். எப்போதும் நேர் நோக்குடன் அனைத்தும் நன்மைக்கே என்ற மனப்பக்குவத்துடன் செயல்படுங்கள். மேலும், உங்களைப் பண்படுத்திய நம்பிக்கைகளின் மேல் மிகுந்த பற்றுக் கொண்டு அக்கறையுடன் செயலாற்றுங்கள். பரந்து விரியுங்கள், வேரை மறக்காதீர்கள். எங்கிருந்து வந்தோம், நாம் சிறக்க வழிவகுத்த பண்பாடு என்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வானமே எல்லை. இல்லை, இல்லை, விண்ணைத் தாண்டியும் செல்வீர்கள்.

பெட்டி செய்தி:
விளையும் பயிர் முளையிலே என்பதற்கேற்றார் போல், செல்வி அவர்கள் சிறு வயதிலேயே பல துறைகளில் சிறந்து விளங்கினார். இலங்கையில் தேசிய அளவில் ஓட்டப் பந்தய வீராங்கனையாக இருந்தார். ஒவ்வொரு வயதினருக்குமான 100 மீட்டர், 200 மீட்டர் பந்தயங்களிலும் தம் பதினெட்டாம் வயதுவரைத் தலைசிறந்த முதன்மை வீராங்கணையாகத் திகழ்ந்தார்.

இப்பொழுதும் அதைத் தொடருகிறீர்களா என்று கேட்டதற்கு, ஓஇப்பொழுதெல்லாம் அம் மாதிரி நான் ஓடுவதில்லை, சட்டசபைக் கூட்டத்திற்கு விரைவதையோ, ஸான்ஃப்ரான்ஸிஸ்கோவிற்குச் சொற்பொழிவாற்ற அவசர கதியில் செல்வதையோ கணக்கில் கொண்டாலொழிய!ஔ என்று வேடிக்கையாக பதிலளித்தார்.


அடுத்த இதழில், செல்வி அவரின் தற்போதைய பொறுப்புகள், வரிகள் பற்றிய விளக்கம், மக்கள் கழகங்கள் வரிகள் பற்றிக் குடி பெயர்ந்தோர் அறிந்து கொள்ள எவ்வாறு உதவ முடியும், வீடு கட்டுதல் போன்றவற்றிற்கான வரிச் சலுகைகள் - இன்னும் பல சுவையான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

சந்திப்பு: வெங்கட் ராமகிருஷ்ணன், உமா வெங்கடராமன்
தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com