யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்?
சென்ற இதழில்: கணவன்-மனைவி உறவு முறையில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிய கேள்விக்கு என்னுடைய கருத்துக்களை இந்த இதழில் தெரிவிப்பதாக எழுதியிருந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டியிருக்கிறது. எவ்வளவு யோசித்தாலும் wheel within a wheel' போலத்தான் தெரிகிறது. அலச அலச, ஆழம் வேறு போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் 2, 3 பேர் தங்களுடைய வாழ்க்கைச் சரிதத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி எழுத நிறைய ஆய்வு தேவையாகிறது. ஒன்றுமட்டும் எப்போதுமே தெளிவாகத் தெரிகிறது. எத்தனை பில்லியன் மக்களை இறைவன்/இயற்கை படைத்தாலும், உருவத்தில் ஒரு தனித்துவம் இருப்பது போல, ஒரே அச்சில் வார்த்தாற் போல சில உறவுகள் நமக்குத் தெரிந்தாலும், எத்தனையோ வித்தியாசங்கள், மனோபாவங்கள், சண்டைகள், சமாதானங்கள், காதல்கள், மோதல்கள், விரிசல்கள். இதில் பெரும்பகுதி யாருக்குமே தெரியாது, அந்த இருவரைத் தவிர. இந்த இரண்டு மாதத்தில் ஒரு 200 (கணவன்-மனைவி) உறவுகளைப் பற்றி நான் மனதில் அசை போட்டுக் கொண்டுதான் வந்திருந்தேன். இருந்தும் ஒரு க்ளியர்-கட் ஆன பதில் எனக்குத் தெரியவில்லை. தெரியவும் வராது. 'ஏன், எப்படி, எதனால்' என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கு முடியுமா என்பது சந்தேகம். வியாதிகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்கப்படுகிறது. அதை நாம் எதிர்பார்க்கிறோம். காரணம் நாம் வியாதியிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம். ஆனால் உறவிலிருந்து அப்படியல்ல. எந்த ஆணோ, பெண்ணோ ஒரு திருமண பந்தத்தில் ஈடுபடும்போது, வாழ்க்கை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும்; குடும்பம் ஓர் அன்புக் கூடமாக மாற வேண்டும் என்றுதான் கனவுகளை வளர்த்துக் கொள்வார்கள். இன்னும் 2 வருடத்தில் (அவளை/அவனை) உபயோகித்துக் கொண்டு dump செய்து விடலாம் என்ற எண்ணம் இருக்காது. ஏதோ ஓரிரண்டு முரண்பாடுகள் ஆரம்பத்தில் தெரிந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் இருப்பார்கள்.

விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் "எதை விட்டுக்கொடுப்பது, எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்பது, யார் விட்டுக்கொடுப்பது, எங்கே விட்டுக்கொடுப்பது" என்று யாருக்கு, யார் சொன்னால் அதைக் கடைப்பிடிப்பார்கள் என்பதெல்லாம் கேள்விக் குறிகள். அடுத்த இதழில் கொஞ்சம் தீர்மானமாக எழுதப் பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

(பின் குறிப்பு: ஒரு சிநேகிதி போன இதழைப் படித்துவிட்டு இப்படி எழுதியிருந்தார். "சிரித்துக் கொண்டே இருந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறது. 32 வருடம் வாழ்ந்து வளர்ந்த அந்தப் பொறுமையை ஏன் கைவிட்டு விட்டாள்? "கடலைத் தாண்டியவனுக்கு வாய்க்காலா பெரிது?" என்று. என் பதில்: அதுவும் உண்மைதான். அதேபோல ஒட்டகத்துக்கும் இவ்வளவுதான் சுமக்கலாம் என்று அளவு இருக்கிறது. அதுவும் உண்மைதான்)

© TamilOnline.com