இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சி நடந்து வருகிறது. மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மாணவ மாணவிகளுக்குப் புதிய முறைகளில் கல்வி கற்பித்து அவர்களை உயர்த்துவதற்கு அயராது உழைத்து வரும் டாக்டர். பாலாஜி சம்பத் சமீபத்தில் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். வாஷிங்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து....
கே: AID நிறுவனம் எப்போது, எங்கு தொடங்கப்பட்டது? ப: AID (Assosiation for India's Development) நிறுவனம் முதன்முதலாக காலேஜ் பார்க்கில் உள்ள மேரிலாந்து பல்கலைக் கழகத்தில் 1991-92 வருடங்களில் ஒரு சிறு குழுவாகத் தொடங்கியது. முக்கிய நோக்கம் இந்தியாவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குப் (NGO) பண உதவி செய்வதுதான். அவ்வப்போது கூடி, பணம் திரட்டி, சில நிறுவனங்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதிக வளர்ச்சி இல்லாமல் இரண்டு வருடங்கள் சென்றன. 1994ஆம் ஆண்டு நான் காலேஜ் பார்க்கில் PhD மாணவனாக இருந்தபோது உறுப்பினர் ஆனேன். அந்த வருடத்தில் மட்டும் 60 பேர் கொண்ட குழுவாக மாறியது. நான் ஐ.ஐ.டி.யில் இருந்து வந்ததால், PhD, எம்.எஸ். படிக்க வந்த என் வகுப்பு நண்பர்களும் AID நிறுவனத்தின் ஒரு பிரிவை அவரவர் பல்கலைக்கழகங்களில் ஆரம்பித்தனர். படிப்பு முடிந்த பிறகும் பலர் AID நிறுவனத்தோடு தொடர்பு கொண்டே இருந்தனர்.
கே: AID-யின் நோக்கம் என்ன? முதலிலிருந்தே AID நிறுவனத்துக்கு மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. 1. குழந்தைகளின் கல்வி 2. குழந்தைகளின் ஆரோக்கியம் 3. அவர்களின் நல்வாழ்வு நான் முன்னர் கூறியபடி 1996 முடிவுக்குள் 500 உறுப்பினர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. NGOக்களுக்கு உதவி செய்து வந்ததே ஒழிய நிறுவனத்தில் இருந்து யாரும் இந்தியாவுக்குச் சென்று வேலை செய்யவில்லை. 1996 கோடை விடுமுறையில் இரண்டு மாதம் இந்தியாவில் நடக்கும் வேலைகளைப் பார்வையிட நான் சென்றேன். பல கிராமங்களுக்குப் போனேன். அங்கு நடந்துகொண்டிருந்த பணிகள் என்னைப் பெரிதும் ஈர்த்தன. படித்து முடித்ததும் இந்தப் பணிகளில் முழுநேரம் ஈடுபடுவதாக முடிவு செய்தேன். மேலும் AID INDIA என்ற நிறுவனத்தை இந்தியாவில் பதிவு செய்தேன். ஆகஸ்ட் 1997ல் முழுநேர ஊழியனாக AID Indiaவின் பணிகளைத் தொடங்கினேன்.
கே: AID India, AID USAவின் பணிகளைத் தொடர்ந்ததா அல்லது வேறு புதிய பணிகளைச் செய்யத் தொடங்கியதா? ப: முதலில் AID Indiaவின் வேலை AID USAவின் உதவிசெய்யும் பணிகளை மேற்பார்வை செய்வதாகத்தான் இருந்தது. நான் இந்தியாவுக்குச் சென்ற பிறகு நாமே களத்தில் இறங்கி வேலை செய்வது முக்கியம் என்பதைத் தெரிந்து கொண்டேன். தமிழகத்திலேயே எங்கள் முழுக்கவனமும் இருந்தது. பின்னர் என்னைப் போலவே ஆந்திரம், பீஹார், ஒடிஸா மாநிலங்களில் சில மாணவர்கள் பணி செய்யத் தொடங்கினர். ஆனால் தமிழகத்தில்தான் அதிகப் பணிகள் நடைபெறுகின்றன. முதல் சில வருடங்களுக்கு “சமம்” என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து நுண்கடன் (Micro credit) வழங்கி ஏழைகளுக்கு உதவினோம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து வேலை செய்துள்ளோம். சுத்தம், சத்துணவு போன்ற பணிகளிலும் காசநோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சை முதலிய பணியிலும் ஈடுபட்டுள்ளோம். எங்கள் ஆதாரக் குறிக்கோள் குழந்தைகளின் கல்விதான். அதற்குத் தடையாக இருக்கும் நோய்கள், ஏழ்மை முதலியவற்றைப் போக்கத்தான் மற்றப் பணிகள். தவிர, பள்ளிக் கல்வி முடிந்தபின் குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் ஏற்படுத்தி உதவுகிறோம். அங்கங்கு சிறுசிறு நூலகங்கள் தொடங்கியிருக்கிறோம். அப்போதுதான் நமது மாணவ, மாணவிகளைப் பற்றி ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது.
கே: என்ன அது? ப: நிறைய மாணவ-மாணவிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை. சின்னக் கூட்டல், கழித்தல் கூடத் தெரியவில்லை. ஓரிரு பள்ளிகளில் அல்ல, பல பள்ளிகளில் இதே நிலைமைதான். 2002ஆம் ஆண்டு பிரதம் (Pratham) அமைப்போடு இணைந்து தமிழகப் பள்ளிகளில் ஆய்வு செய்தோம். அப்போது இந்த நிலைமை பரவலாக இருப்பது தெரிந்து போனது.
கே: இந்த நிலைமைக்கு என்ன காரணம், அதற்கான தீர்வு என்ன? ப: தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆனால், சரியான முறையில் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படுவதில்லை. புதிய முறைகள் தேவைப்படுகின்றன. கல்வி கற்க அவர்களை உற்சாகப்படுத்தும் உத்திகள் தேவைப்படுகின்றன. மேலும் P, B, 9, D போன்ற, ஒன்றுபோலத் தோன்றும் எழுத்துக்கள் அவர்களைக் குழப்புகின்றன. தமிழிலே க, ச, த வுக்குள் வித்தியாசம் தெரியாமல் திணறுகிறார்கள். கடன் வாங்கிக் கழித்தல் முதலியவை கஷ்டமாக இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் படிப்பறிவு இல்லாததால், வீட்டில் உதவி கிடைப்பதில்லை. எட்டாம் வகுப்புவரை எந்த வகுப்பிலும் பெயிலாகாமல் அடுத்த வகுப்புக்குப் போகலாம் என்ற நிலை இருப்பதால், அது பெரிய பிரச்சனைக்கு உள்ளாக்கி விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக நாங்கள் பாடப் புத்தகங்களை உருவாக்கினோம். விளையாட்டாகக் கற்பதற்கும் வித்தியாசங்களைப் புரிந்து கொள்வதற்கும் கருவிகளை உருவாக்கினோம். அதைப் பள்ளி மாணவ, மாணவியரிடம் பரீட்சித்துப் பார்த்தோம். அது சிறப்பாக வேலை செய்தது. 2005ல் பிரதமுடன் சேர்ந்து தேசிய அளவில் ஆய்வு செய்தபோது எல்லா மாநிலங்களிலும் இதே பிரச்னை இருப்பது தெரியவந்தது. அந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கண்ட திருப்தி எங்களிடம் இருந்தது.
கே: உங்கள் முயற்சியை தமிழக அரசாங்கம் எவ்வாறு எதிர் கொண்டது? ப: அரசங்கம் எங்கள் ஆய்வை ஓரளவு ஒப்புக் கொண்டாலும் தனியாக இன்னொரு ஆய்வு செய்து, பிறகு நாங்கள் கூறியதை ஒப்புக் கொண்டது. எங்களை அணுகி ஐந்து மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி அளிக்கவும் கேட்டுக்கொண்டது. எங்கள் பாடப் புத்தகங்களை அரசாங்கமே அச்சடித்து மாணவ, மாணவியருக்கு வழங்கியது. 8000 பள்ளிகளில் 8000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தோம். 2006ல் தொடங்கி 2009 ஜூன் மாதம் வரை நன்றாகச் சென்றது. கடைசி இரண்டு வருடங்கள் அரசாங்கத்தின் ஆதரவில்லாவிட்டாலும், பிரிட்டனில் இருக்கும் Children Investment Fund Foundation என்ற அமைப்பின் ஆதரவோடு சிறப்பாக நடந்தது.
கே: அரசாங்கத்தோடு ஏற்பட்ட கருத்து மாறுபாடு என்ன? ப: எங்கள் அணுகுமுறை பலன் சார்ந்ததாக இருந்தது. எங்கள் முறையில் கல்வி பயின்ற மாணவர்கள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது எங்கள் வாதம். ஆனால் அராசங்கம் அதற்கு ஒப்பவில்லை. அவர்கள் பயிற்சி கொடுத்தால் போதும் என்றார்கள். எங்களின் ஆய்வின்படி, தொடர்ந்து கண்டறியாவிட்டால் பழைய நிலைமை தொடரும் என்பது தெளிவாக இருந்தது. இதனால் அரசாங்க ஆதரவு கிடைக்காமல் போனது. நாங்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்த பள்ளிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கே: Eureka Super Kidz பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்! ப: எங்களுக்கு இன்னொன்றும் புலப்பட்டது: பெற்றோருக்கும் ஆசிரியர் போலவே குழந்தைகளின் கல்வியில் முக்கியப் பங்குள்ளது என்பது. நாங்கள் கிராமங்களுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்த்து நிலைமையை விளக்கினோம். நாலாம் வகுப்பில் படிக்கும் தன் மகனுக்குப் படிக்கத் தெரியாது என்று அறிந்த ஒரு தந்தை அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். ஆத்திரம் அடைந்து பிரயோசனமில்லை என்று கூறித் தீர்வு இருப்பதாகச் சொன்னோம். அவர்களையும் ஈடுபடுத்தும் தீர்வு அது. அதுதான் Eureka Super Kidz Program. ஒரு கிராமத்தில் சராசரியாக 60 மாணவர்கள் இருப்பார்கள். அவர்களின் பெற்றோர்கள் ஒன்று கூடி 3 ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் அந்த கிராமத்திலேயே அவர்களுக்குத் தெரிந்தவராகவும், பெரிதாக மேல்படிப்பு படிக்காதவராகவும் இருக்கலாம். கிண்டர்கார்டன், 1 முதல் 6 வகுப்புவரை படிப்பவர்களுக்கு மாலை வேளையில் 3 மணி நேரம் அவர் பாடம் சொல்லித் தர வேண்டும்.. ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதம் 1000 ரூபாய் சம்பளம் தரப்படும். அதில் 500 ரூபாய் பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். மீதம் தலா ஐநூறு ரூபாயை AID நிறுவனம் கொடுக்கும். ஒவ்வொரு பெற்றோரும் தலா 25 ரூபாய் தன் குழந்தைக்காகச் செலவழிக்க நேரிடும். அது அவர்களை ஈடுபடுத்தும். பெரும்பாலான தலித் கிராமங்களில் ஒரு குடும்பத்துக்கு மாத ஊதியமே ரூ. 2000-2500 கூட இருக்காது. இருந்தாலும் அவர்கள் இதில் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர்.
இவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் தேவையான எல்லாக் கருவிகளையும், புத்தகங்களையும், AID இண்டியா நிறுவனம் இலவசமாக வழங்கிவிடும். ஒவ்வொரு ஆசிரியரும் ஓர் அட்டவணை வைத்திருப்பார். அந்தந்த மாணவ-மாணவி என்னென்ன கற்றிருக்கிறார், எதை நன்றாகப் புரிந்திருக்கிறார் என்று அதில் பதிவு செய்து கொண்டே வருவார்கள். இதைத் தவிர இவர்களை மேற்பார்வையிட இரண்டு சிறப்பு ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை வருவார்கள். 5 கிராமங்களுக்கு 2 வல்லுநர்கள். இது சிறப்பான முறையில் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த கிராமங்களில் இருந்து எங்களுக்கு விண்ணப்பம் வந்த வண்ணம் இருக்கிறது. நாங்கள் மார்ச் 2010ல் 50 கிராமங்களில் தொடங்கினோம். அதுவே நவம்பர் 2010ல் 436 கிராமங்களுக்கு விரிவாக்கப்பட்டது. ஜனவரி 2011க்குள் 500 கிராமங்களுக்கும், டிசம்பர் 2011க்குள் 1000 கிராமங்களுக்கும் எடுத்துச் செல்வதுதான் எங்கள் குறிக்கோள்.
கே: தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு கிராமங்கள் உள்ளன? Eureka Super Kidz திட்டத்தை எதிர்காலத்தில் எவ்வாறு விரிவாக்கப் போகிறீர்கள்? ப: தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றியம் என்பதை Block என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிட்டத்தட்ட 100 கிராமங்கள் இருக்கும். நாங்கள் 52 ஒன்றியங்களில் உள்ள சில கிராமங்களில்தான் வேலை செய்கிறோம். எங்களுடன் பல நிறுவனங்களும் சேர்ந்து இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தப் பணிகளில் தமிழகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். புத்தகங்கள் மற்றும் கருவிகளை சகாய விலைக்குக் கொடுக்கிறோம். இன்னமும் நிறையத் தேவை இருக்கிறது. அரசாங்கமும் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும். நாங்கள் செய்வதைப் போல எல்லா கிராமங்களிலும் செய்வது அராசங்கத்துக்கு எளிதில் சாத்தியம்.
கே: இந்தப் பணியில் நாங்கள் எந்த வகையில் உதவலாம்? ப: ஒரு கிராமத்துக்கு ஒரு வருடம் ஆகின்ற செலவு கிட்டத்தட்ட 50,000 ரூபாய். இது 3 ஆசிரியர் மற்றும் வல்லுநர்கள் சம்பளம், புத்தகம் எல்லாம் சேர்த்து. விருப்பப்படுபவர்கள் ஒரு வருடத்துக்கு ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்காகும் செலவு $1000. தொகையைப் பெற்ற பின்பு எந்த கிராமம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று அறிவிப்போம். அந்தக் கிராமத்தின் கல்வி முன்னேற்றம் பற்றி ஒவ்வொரு மாதமும் தகவல் தருவோம். யார் பயனடைகிறார்கள் என்று பட்டியல் தருவோம். Eureka Super Kidz திட்டத்தின் மேல் பேரார்வம் கொண்ட சில அமெரிக்க வாழ் இந்தியர்கள் இணைந்து 250 கிராமங்களுக்கு நிதி வழங்க முன்வந்துள்ளனர். அதன்படி டிசம்பர் 31க்குள் ஒருவர் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து $500 செலுத்தினால் போதும். மீதி $500ஐ அவர்கள் செலுத்துவார்கள். ஆனால் டிசம்பர் 31க்குள் நிதி வழங்கினால்தான் இந்தச் சலுகை.
கே: AID இண்டியாவின் நீண்டகாலத் திட்டம் என்ன? ப: Eureka Super Kidz திட்டத்தை 2000 முதல் 5000 கிராமங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். Eureka செயல்படும் எல்லா கிராமங்களிலும் நூலகம் அமைக்க வேண்டும். இப்போது Eureka செயல்படும் கிராமங்கள் எல்லாவற்றிலும் நூலகங்கள் உள்ளன. தற்போது இந்த வகுப்புகள் கோயில் வாசல் மற்றும் சில பொது இடங்களில் நடக்கிறது. எதிர்காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து உதவியுடன் அதிகச் செலவில்லாத வகுப்புக் கட்டடங்கள் அமைக்க எண்ணியுள்ளோம். தற்போது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் கற்றுத் தருகிறோம். வரும் காலத்தில் வரலாறு, புவியியல் போன்றவையும் சேர்க்க உள்ளோம். மேலும் 7, 8 வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்த எண்ணியுள்ளோம். சிறப்பாகப் படிக்கும் மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புப் பயிற்சி அளித்து ஐ.ஐ.டி. போன்ற நல்ல கல்லூரிகளுக்கு மேற்படிப்புக்குச் செல்ல வழி வகுப்போம். Eureka திட்டக் கிராமங்களில் எல்லாம் கம்ப்யூட்டர் சென்டர் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
கே: Eureka திட்டத்திற்கு நிதி வழங்க என்ன செய்ய வேண்டும்? ப: Eureka250 என்ற வலைப்பக்கத்துக்குச் சென்று வழங்கலாம். AID USA கிட்டத்தட்ட 150 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்கிறது. நீங்கள் AID USA மூலமாகப் பணம் வழங்கினால் மெமோ வரியில் AID India என்றோ Eureka Project என்றோ எழுதினால் அது எங்கள் திட்டத்துக்கு வந்துவிடும். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ எங்கு நிதி உதவி செய்தாலும் வரிவிலக்கு உண்டு. தொடர்புக்கு: Eureka250 www.eurekachild.org
15 வருடங்களுக்கும் மேலான பொதுப்பணியில், 13 ஆண்டுகளாக முழுநேரக் களப்பணி செய்து, பின்தங்கிய கிராமத்து ஏழை மாணவர்களின் கல்வி உயர்வுக்காக அயராது உழைத்து வரும் டாக்டர். பாலாஜி சம்பத் அவர்களின் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டி, தென்றல் வாசகர்கள் சார்பாக நன்றி கூறி விடைபெற்றோம்.
சந்திப்பு: Dr.பாலாஜி சீனிவாசன், மேரிலேண்ட் |