ஜி. அசோகன்
டே பிரேக், டெவில் நாவல், த்ரில் நாவல், திகில் நாவல், க்ளிக் நாவல், டெரர் நாவல், ரம்யா நாவல், சுஜாதா, ஊதாப்பூ, ராஜா ராணி என்றும் இன்னும் பல பெயர்களிலும் ஒரு காலகட்டத்தில் தமிழில் கையடக்க மாத நாவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. புற்றீசல்கள் போலப் புறப்பட்ட இவை சில வருடங்களிலேயே காணாமலும் போயின. ஆனால் இந்த வகை நாவல்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்து மாத நாவல் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இதழ் பாக்கெட் நாவல். 1986ல் அதைத் தொடங்கி நடத்தியவர் ஜீயே என்று அறியப்படும் ஜீ. அசோகன். வெகுஜன வாசகர்களிடையே வாசிப்பார்வத்தைத் தூண்டியவர் என்ற வகையில் முக்கியத்துவம் பெறும் அசோகன் தொடர்ந்து க்ரைம் நாவல், எ நாவல் டைம், சுபயோகம், ஜாப் கைடு லைன்ஸ், குடும்ப நாவல், பாக்கெட்புக்ஸ் என்று பல இதழ்களைத் தொடங்கி இன்றும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். உயர்நிலைக் கல்வி மட்டுமே கற்று, சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு போராடி, பத்திரிகை உலகில் சாதனை படைத்த இவருக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் முதல் புகழ்பெற்ற மருத்துவர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள் எனப் பரந்துபட்ட ரசிகர் வட்டம் உண்டு. சென்னையில் புயல்மையம் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் பத்திரிகைப் புயல் ஜீ. அசோகனைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து....

கே: பத்திரிகைத் துறையின் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
ப: என் தந்தை எல்.ஜி. ராஜ் அவர்கள்தான் காரணம். எங்கள் ஊர் அறந்தாங்கி. ஓவிய ஆர்வத்தினால் என் தந்தை சென்னைக்கு வந்தார். பல போராட்டங்களைச் சந்தித்தார். கஷ்டப்பட்டு உழைத்து ஓவியராக, பத்திரிகையாளராக உயர்ந்தார். பிரபல ராணி வார இதழில் அவர் பணியாற்றியிருக்கிறார். ராணியின் முதல் இதழுக்கு முகப்போவியம் வரைந்து வடிவமைத்தது அவர்தான். 'முயல்' என்ற சிறுவர் இதழ் உட்படப் பல்வேறு இதழ்களைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். அவரது பத்திரிகை ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது எனலாம்.

கே: பாக்கெட் நாவல் என்ற வடிவம் தமிழுக்குப் புதியது. அப்படி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
ப: அந்தக் காலத்தில் ராணிமுத்து மிகவும் பிரபலமாக இருந்தது. நான் ராணிமுத்துவைத் தொடர்ந்து வாசிப்பேன். அப்போது ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரின் நாவல்கள் நிறைய விற்பனையாகின. நாமும் ஒரு நாவல் இதழ் தொடங்கி நடத்தலாமே என்று எனக்குத் தோன்றியது. அது வித்தியாசமாக, வெளிநாட்டு இதழ்கள் போல் ஒரு சட்டை, பேண்ட் பாக்கெட்டுக்குள் அடங்கிவிடக் கூடிய அளவில் சிறியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் பாக்கெட் நாவல். அதை ஆரம்பித்தது நான்தான் என்றாலும், அந்தப் பெயரை 1968லேயே என் தந்தை ரிஜிஸ்தர் செய்து வைத்திருந்தார். நான் செயல் வடிவம் கொடுத்தேன் என்று சொல்லலாம்.

கே: அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
ப: மிக நல்ல வரவேற்பு. 'ஒரு தேவி என்னைத் தேடுகிறாள்' என்பது முதல் நாவல். ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லோரும் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தனர். முதலில் 21000 பிரதிகள் அச்சிட்டோம். பின்னர் அது 31000, 41000 என்று படிப்படியாக வளர்ந்து ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பிரதிகள் அச்சிடும் நிலைமைக்கு வளர்ந்தோம். மாத நாவலைப் பொருத்த வரையில் அது ஒரு பெரிய ரிவல்யூஷன். பின்னர் க்ரைம் நாவல், எ நாவல் டைம், குடும்ப நாவல், சுபயோகம் போன்ற இதழ்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் வாசக ஆதரவுடன் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

கே: இந்த ஃபாஸ்ட் ஃபுட் யுகத்தில் இளைஞர்கள் இதுபோன்ற நாவல்கள், தொடர்கள், வார இதழ்கள் படிப்பதில் ஈடுபாடு காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையா?
ப: முன்பு இளைஞர்களுக்கு அதிகப் பொழுதுபோக்குகள் இல்லை. புத்தகம், நாவல் படித்தார்கள். தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் இப்போது புத்தகங்களை வாசிக்கிறார்கள். அவர்களால்தான் இதுபோன்ற பத்திரிகைகள் காப்பாற்றப்படுகின்றன.

கே: தற்போது தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளியாவதில்லை. ஏன்?
ப: பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளியாவதில்லை என்பது உண்மைதான். ஆனால் படிக்க வாசகர்கள் இல்லாமல் இல்லை. வாசகர்கள் விரும்பிப் படிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பத்திரிகையாசிரியர்கள்தான் சிறுகதைகளுக்கு, சிறுகதை எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதில்லை. அந்தக் காலத்தில் சாவி, எஸ்.ஏ.பி., வாசன், பாலன் எல்லோரும் எழுத்தாளர்களை நேசித்தார்கள். அவர்களைச் சுதந்திரமாக எழுதச் சொல்லி ஊக்குவித்தார்கள். சிறுகதை, தொடர் போன்றவை சிறப்பாக இருந்தால் கடிதம் எழுதிப் பாராட்டுவார்கள். ஆனால் இன்று ஒரு பக்கக் கதை, அரைப் பக்கக் கதை என்று எதையோ வெளியிடுகிறார்களே தவிர, நல்ல சிறுகதை ஆசிரியர்களை ஊக்குவிப்பதில்லை. ஆதரிப்பதில்லை. அதுதான் தேக்க நிலைக்குக் காரணம்.

கே: சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களால்தான் நாவல்கள், சிறுகதைகளுக்கு அதிக வரவேற்பில்லாமல் இல்லாமல் போய்விட்டது என்ற கருத்து குறித்து...
ப: இல்லை. முழுக்க அப்படிச் சொல்ல முடியாது. திரைப்படங்களுக்கு, தொலைக்காட்சிக்கு எழுதுபவர்களும் பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, சுபா போன்றோர் தானே! அவர்கள் இன்றும் மாத நாவல்களையும் தொடர்ந்து எழுதிக் கொண்டுதானே இருக்கிறார்கள். ஆனால் எழுத்துலகில் கிடைக்கும் ஒரு அங்கீகாரம், பெருமை, புகழ் எழுத்தாளர்களுக்குத் திரையுலகில் கிடைக்கிறது என்று சொல்ல முடியாது. எவ்வளவுதான் நல்ல வசனங்கள் எழுதினாலும் ஏதோ ஒரு மூலையில்தான் அவர்கள் பெயர் வருகிறது. எவ்வளவு திறமை இருந்தாலும் அவர்கள் அங்கே தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால் பத்திரிகை, மாத நாவல்களில் ரைட்டர் தான் எல்லாம். இந்த இடைவெளிக்குக் காரணம் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகாததுதான்.

கே: இந்த வெற்றிடம் ஏன் ஏற்பட்டுள்ளது?
ப: இன்றைக்கு முன்னணியில் இருக்கும் பல பிரபல எழுத்தாளர்களை ஊக்குவித்தவர் அமரர் சாவி. அவரை 'எழுத்துலகப் பிதாமகர்' என்று சொல்லலாம். தினமணி கதிரில் சுஜாதாவையும் புஷ்பா தங்கதுரையையும் எழுதச் செய்தார். விகடன், சாவியில் பணியாற்றிய போது பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் ஆகியோரை ஊக்குவித்திருக்கிறார். "சாவி சார் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் இந்த அளவிற்கு வந்திருக்க மாட்டோம்" என்று பட்டுக்கோட்டை பிரபாகர் தனது மகள் திருமணத்தின் போது என்னிடம் சொன்னார். இப்படி அவரால் குட்டுப்படாத எழுத்தாளர்களே கிடையாது. ஆனால் அவர் உருவாக்கிய அந்தத் தலைமுறைக்குப் பிறகு புதிய, பெரிய எழுத்தாளர் தலைமுறை உருவாகவில்லை. எழுத்தாளர்கள் தேவை என்ற சிந்தனை தற்போதைய பத்திரிகை ஆசிரியர்களிடமும் இல்லை. எழுத்தாளர்களைச் சரிவர ஊக்குவிக்காததுதான் உண்மையில் இந்த வெற்றிடத்துக்கான காரணம்.

ஆனால் நான் எங்களது இதழ்கள் மூலம பல புதுமுக எழுத்தாளர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அவர்களது சிறுகதைகளை, நாவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். இதில் நம்பிக்கை தரும் விஷயம் நிறைய பெண் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். முன்பைவிட அதிக எண்ணிக்கையில் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மாத நாவல்களாக வெளிவராவிட்டாலும் கூடப் பல பதிப்பகங்களின் மூலமாக ஜெய்சக்தி, முத்துலட்சுமி ராகவன், உமா பாலகுமார் போன்றோரின் நாவல்கள் நிறைய வெளியாகி இருக்கின்றன. ஆனால் இவர்கள் ஏன் மாத நாவல்கள் எழுத முன்வரவில்லை என்பது தெரியவில்லை. வாய்ப்புத் தேடவில்லையா அல்லது விருப்பமில்லையா என்பது புரியவில்லை. நான் இவர்களைப் போன்றவர்களைத் தேடிப் பிடித்து என்கரேஜ் செய்து கொண்டிருக்கிறேன்.

கே: தற்போதைய பதிப்புலகச் சூழல் எப்படி இருக்கிறது?
ப: மிக நன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் பதிப்பகத்தார் அல்லாத ஒரு சிலர் கூடத் தாங்களாகவே புத்தகம் வெளியிடுவார்கள். லைப்ரரி ஆர்டரும் கூடப் பெற்று விடுவார்கள். விற்காத புத்தகங்களைப் பழைய புத்தகக் கடைகளிலோ இல்லை பிளாட்பாரக் கடைகளிலோ தள்ளி விடுவார்கள். நிறைய குப்பைப் புத்தகங்கள் இருந்தன. ஆனால் இப்போது பபாஸி வந்த பிறகு எல்லாம் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. நிறைய விதிமுறைகளை உருவாக்கி அதன்படி செயல்படுகிறார்கள். பதிவு பெற்றவர்களுக்கு மட்டும்தான் அனுமதி தரப்படுகிறது. புத்தகங்களும் பதிவு செய்யப்படுகிறது. அதனால் பதிவு பெற்ற புத்தகங்களைத்தான் விற்க முடியும். இதனால் தரமான, நல்ல புத்தகங்கள் வாசகர்களுக்குக் கிடைக்க வாய்ப்பாகிறது. நிறையப் புத்தகங்கள் வெளியாகின்றன, நிறைய பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அரசும் இதை ஊக்குவிக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றத்திற்கு அறிகுறி.

கே: நீங்கள் ஏன் ஒரு சிறுவர்களுக்கான இதழ் தொடங்கி நடத்தக் கூடாது?
ப: ஆம். நிச்சயமாக. எதிர்காலத்தில் முயல், அணில் போல ஒரு குழந்தை பத்திரிகை இதழைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என் தந்தையே ஒரு குழந்தைப் பத்திரிகை நடத்தியவராயிற்றே. எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது.

கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார்?
ப: பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், தேவிபாலா, பாலகுமாரன், சுபா, ஸ்டெல்லா புரூஸ், இந்திரா சௌந்தர்ராஜன் இவர்கள் எல்லாம் பிறவிக் கலைஞர்கள். எனக்கும் இவர்களுக்கும் சில சமயங்களில் நிறையக் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் எழுத்து ஒரு வரம் போன்றது. ஆன்மீக, அமானுஷ்யத் துறையில் இந்திரா சௌந்தர்ராஜன்தான் இன்று நம்பர் 1. பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை என்று பல்வேறு திறமைகள் உள்ளவர். அது போல பாலகுமாரன். நிறைய சமூக நாவல்களை எழுதியவர் இன்று தெய்வீக எழுத்தாளராக உயர்ந்திருக்கிறார். எழுத்துச் சிற்பி என்று இவரைச் சொல்வார்கள். அது மிகச் சரியானது. பலதரப்பட்ட கேரக்டராக உருமாறி எழுதும் திறமை மிக்கவர்.

கே: மறக்க முடியாத, உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து...
ப: இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்தது ராஜேஷ்குமாரும், பட்டுக்கோட்டை பிரபாகரும்தான். அதுபோல ரொம்ப அவுட் ஸ்டேண்டிங் பெர்சன் என்று சொன்னால் அது தேவிபாலா. அவர் என் சகோதரர் போன்றவர். அதுபோல தஞ்சைவாணன். மிகச் சிறந்த கவிஞர், அறிவுஜீவி. என்னைப் பலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அது போல பால்யூ. எனக்குப் பல யோசனைகள் சொல்லிக்கொண்டே இருப்பார். புத்தக விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று திட்டம் வகுத்துக் கொடுப்பார். குடும்ப நாவலில் அவர் ஒரு தொடர்கூட எழுதியிருக்கிறார். நல்ல மனிதர். அடுத்து குமுதத்தில் ‘கல்பனா' என்ற பெயரில் ப்ரூஃப் ரீடராக இருந்த ரகுநாதன். இவர் இரண்டாவது குரு. நான் பத்திரிகைத் துறையில் இந்த அளவுக்கு வரக் காரணம் ரகுநாதன் அவர்கள்தான்.

கே: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
ப: நிறைய சாதிக்க வேண்டும். வார இதழ் கொண்டு வர வேண்டும். குழந்தைகளுக்கான இதழ் கொண்டு வர வேண்டும் என்றெல்லாம் திட்டம் உள்ளது. அதற்கெல்லாம் காலம் கனிந்து வர வேண்டும். ஏனென்றால் எழுத்துலக ஜாம்பவான்கள் கோலோச்சிய காலம் போய், இப்போது பண முதலாளிகள் கோலோச்சும் காலமாக இருக்கிறது. எனவே எதையுமே கவனமாகச் செய்ய வேண்டி இருக்கிறது.

கே: எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் அரசு அறிவித்திருக்கும் நூல்களை நாட்டுடைமை ஆக்கும் திட்டம் குறித்து...
ப: வரவேற்கத் தக்கதுதான். ஆனால் திறமையான, நலிவடைந்த, பணம் கொடுத்துப் பதிப்பிக்க இயலாத எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கினால்தான் அது அவர்களது குடும்பத்திற்கும், வாசகர்களுக்கும் பயன்தரும். நன்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதால் என்ன பயன்?. அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அசோகனின் துணைவியார் இல்லத்தரசி. அவரது பெண்கள் இருவரும் கல்லூரிகளில் படிக்கின்றனர். ஜனவரி மாதப் புத்தகச் சந்தைகைக்குப் புதிய நூல்கள் வெளியீடு, இதழ்கள் தயாரிப்பு என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அசோகனுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

தமிழில் குழந்தைப் பத்திரிகைகள்

குழந்தைப் பத்திரிகை என்றால் அது குழந்தைகளுக்கானதாக இருக்க வேண்டும். சின்னச் சின்னச் சம்பவங்கள் மூலம் கதை சொல்லி, அவர்களை நெறிப்படுத்த வேண்டும். இது சரி, இது தவறு என்று மனதில் பதியும் படியாக நீதி போதிக்க வேண்டும். அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். மனதில் நல்லனவற்றை விதைக்க வேண்டும். ஆனால் தமிழில் இன்றைக்கு வெளிவரும் சிறுவர் இதழ்கள் அப்படி இல்லை. அவை அவுட்ஸ்டேண்டிங் மாணவர்களுக்கானதாக இருக்கிறது. ஏன் என்று கேட்டால் இன்னும் அம்புலிமாமா மாதிரி மாயம், மந்திரம், வேதாளம், பூதம், மிருகம் பேசுவது, வாத்து கதை, கரடி கதை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? குழந்தைகளின் அறிவை மேம்படுத்த வேண்டாமா என்கிறார்கள். ஏன் இவற்றை மையமாக வைத்து எழுதினால் குழந்தைகளின் அறிவு வளராதா? நாம் எல்லாரும் இதுபோன்ற கதைகளைப் படித்துத் தானே வளர்ந்திருக்கிறோம், நாம் என்ன முட்டாள்களாகி விட்டோமா? இல்லை வீணாகி விட்டோமா? அப்துல்கலாம் இதைப் படித்துத் தானே மேதையாகி இருக்கிறார். உலகிலேயே அதிகம் விற்பனையான சிறுவர் நாவலான ஹாரி பாட்டரில் மந்திர, தந்திர, மாயாஜாலங்கள் இல்லையா? இல்லை, அதை வாங்கிப் படிப்பவர்களின் அறிவுதான் வளராமல் போய் விட்டதா? குழந்தை இதழ்கள் என்பது குழந்தைகளுக்காக நடத்துவது. ஒரு சராசரி கிராமத்துச் சிறுவனும் படித்தால் புரிந்து கொள்ளும்படி எளிமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழில் அப்படி இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் இன்னும் அந்தப் பழமையை மாறாமல் கடைப் பிடிக்கிறார்கள். 'சம்பக்' எல்லாம் இன்னமும் அதே மாதிரிதான் வருகிறது.

*****


டாக்டர் பிரகாஷ்

எனது வாசகர் அட்வகேட் நமோ நாராயணன் மூலம் தான் எனக்கு டாக்டர் பிரகாஷின் அறிமுகம் ஏற்பட்டது. நாராயணன் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். சிறையில் அவருக்கு பிரகாஷின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. பிரகாஷ் சிறையில் இருக்கும் போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிறைய நூல்களை எழுதியிருந்திருக்கிறார். அவற்றைப் பதிப்பித்து வெளியிட ஒரு நல்ல பதிப்பாளரைத் தேடிக் கொண்டிருந்தார். அந்த நூல்களைப் படித்த நமோ நாராயணன், அவற்றின் ரசிகராகி விட்டதுடன், என்னிடமும் தெரிவித்தார். பின் நான் அவரது நூல்களை வெளியிட முடிவு செய்தேன். பாக்கெட் புக்ஸ் மூலம் "சிறையின் மறுபக்கம்" என்ற அவரது நாவலை முதலில் வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஒருவர் எய்ட்ஸ் நோயாளி என்பதற்காக நாம் அவரை விலக்கி வைத்து விடுவதில்லை. அவரது வாழ்வதற்கு உதவுகிறோம். அதுபோல சட்டத்தின் முன் பிரகாஷ் குற்றவாளி என்றாலும், நான் அவரை ஒரு திறமை வாய்ந்த எழுத்தாளராகப் பார்க்கிறேன்.

*****


எழுத்தாளர் நல வாரியம் வேண்டும்

"பிச்சைக்காரர் மறுவாழ்வு மையம்" என்பது கூட இங்கே இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் இங்கே இல்லை. முதலில் எழுத்துலகில் நிலைத்து நிற்பதே கஷ்டம். அப்படியே எழுதி ஜீவித்தாலும் அதில் போதிய வருமானம் ஈட்ட முடிவதில்லை. சிறந்த எழுத்தாளர்கள் பலர் வறுமையிலேயே வாடித்தான் இறந்திருக்கின்றனர். ராஜேந்திரகுமார் ஒரு காலகட்டத்தில் பெரிய எழுத்தாளர். அவர் வறுமையில்தான் இறந்தார். அவருக்கு அஞ்சலிக் கூட்டம் கூட நடக்கவில்லை. அதேபோல பி.டி.சாமி. பேய்க்கதை மன்னன், மர்ம நாவல்களின் அரசன் என்றெல்லாம் புகழப்பட்டவர். அவர் இறந்தது யாருக்காவது தெரியுமா? பிரெய்ன் ட்யூமர் வந்து வறுமையில் இறந்தார். பத்திரிகைகளில் இரங்கல் செய்திகூட இல்லை. இப்படி நிறைய எழுத்தாளர்களைச் சொல்லலாம். இவர்கள் நலமும், குடும்ப நலமும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 'எழுத்தாளர் நல வாரியம்' அமைக்கப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தேன். அரசு யார், யாருக்கோ விழா எடுக்கிறது. கொண்டாடுகிறது. கலைஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள் என்று பலருக்கு விழா எடுக்கிறது. ஆனால் நலிவுற்ற எழுத்தாளர்களுக்கு அரசாங்கம் எதுவும் செய்வதில்லை. எழுத்தாளனுக்கு என்று எந்தச் சலுகையும் இல்லை.

பல தளங்களில் சாதனை படைத்த சுஜாதா கூட அரசின் அங்கீகாரம் இல்லாமல்தான் மறைந்தார். அவருக்கு அஞ்சலிக் கூட்டம் நண்பர்கள், எழுத்தாளர்களால் நடத்தப்பட்டது. இசைக் கலைஞர்களின் மறைவிற்குப் பின் மியூசிக் அகாடெமியில் அவர்களது படங்களை வைக்கிறார்கள், நினைவஞ்சலி நடத்துகிறார்கள். எழுத்தாளர்களுக்கு? எந்த எழுத்தாளரின் புகைப்படமாவது, வாழ்க்கைக் குறிப்பாவது எங்காவது வைக்கப்பட்டிருக்கிறதா? பாதுகாக்கப்பட்டிருக்கிறதா? அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ சாதனை படைத்த எழுத்தாளர்கள் வறுமையில், மன உளைச்சலில், சோகத்தில் இறந்தே போய் விட்டார்கள். இத்தனைக்கும் தமிழக முதல்வர்கள் அண்ணாதுரை, கலைஞர் ஆகியோர் எழுத்தாளர்கள் தாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூடச் சிறிது எழுதியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் இந்த நிலைமை.

மிகவும் வறுமையில் வாடிய ஒரு பெண் எழுத்தாளருக்கு, கதைகள் எல்லாம் வெளியிட்டு, நான் உதவி வந்தும் கூட வறுமையால் அவர் இறந்து போனார். இப்படி நிறையப் பேரைச் சொல்லலாம். இனியும் அந்த நிலை தொடரக் கூடாது என்பதற்காகத்தான் நான் எழுத்தாளர் நல வாரியம் தேவை என்ற வேண்டுகோளை அரசுக்கு வைத்திருக்கிறேன்.

© TamilOnline.com