குழந்தைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் டி.வி.யில் சேனல் தாவல் என்பது எங்கும் பார்க்க முடிகிறது. ரிமோட் கண்ட்ரோலைப் பியானோ போல ஒற்றைக் கை விரலால் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இது ஏதோ அறிவுப் பசியால் ஏற்பட்ட அலைச்சல் அல்ல. அமைதியற்ற, இன்னது வேண்டும் என்று தெரியாமல் தேடுகின்ற, ஒரு நிமிடம் கூட ஓரிடத்தில் நிலைக்காத மனத்தின் அலைச்சல். இது பொறுமையின்மை, எரிச்சல், வீண் செயல் என்று பலவாறாக வெளிப்படுகிறது. பக்குவப்பட்ட மனிதனின் முதல் அடையாளம் அமைதி, எளிதில் குவியும் மனது. 'மனதின் அலைச்சலை அகற்றுவது யோகம்' என்றுதான் பதஞ்சலி யோக சூத்திரம் தொடங்குகிறது. கூர்மை இழந்த கத்தி எவ்வாறு வெட்டாதோ, அதே போலக் குவியாத மனது எதையும் செம்மையாகச் செய்யாது. தன்மீது செலுத்தப்படும் முழு ஆற்றலையும் தனது கூர்முனை வழியே கத்தி செலுத்துவதால்தான் அதனால் வெட்ட முடிகிறது. ஒருபுறத்தில் விழும் சூரியக்கதிரை மறுபுறத்தில் ஒரே புள்ளிக்குச் செலுத்துவதால்தான் ஒரு குவிலென்ஸால் நெருப்புப் பற்றவைக்க முடிகிறது. அவ்வாறே, தனது அளப்பரிய ஆற்றலை மனம் குவித்து, கையிலிருக்கும் பணியின் மீது செலுத்தும் போதுதான் அது சாதனையாக மாற வாய்ப்பிருக்கிறது. சிந்திக்காமல், மனதின் முழு ஈடுபாடு இல்லாமல், நாள் முழுவதும் காற்றில் அலையும் காகிதம் போலச் சுழன்றால், களைப்பும் அலுப்பும்தான் மிஞ்சும். ஒரு நிலையில் நிற்காத உடலும் மனமும் நோய்வாய்ப் பட்டவை என்றே கூறலாம். அந்த நோயை அகற்றுவதற்கான வழிகள்தாம் பிராணாயாமம், யோகம், தியானம் போன்ற நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பெருங்கொடைகள். அவை உடல், மன நோய்களை அகற்றுவதோடு பெரும் ஆன்மீக லாபங்களைத் தருவதும் ஆகும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி, நிம்மதி, நல்லுறவு, நேயம் ஆகியவற்றை ஏற்படுத்த வல்லது. புத்தாண்டில் இவற்றைப் பற்றி அறிய முயல்வோம், முன் தீர்மானங்கள் இல்லாமல் சோதித்துப் பார்த்து, எது நன்மை செய்கிறதோ அதை ஏற்போம். தொடர்ந்து செய்வோம். உயர்வடைவோம்.
*****
காலம் தங்கு தடையின்றித் தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அது காட்டும் சில அடையாளங்களில் மைல்கல்களை நட்டு வைத்து, நாள், வாரம், மாதம், வருடம் என்று பெயரிடுகிறோம், நம் வசதிக்காக. காலம் அதைப் பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தில் இதோ வந்துவிட்டது இன்னுமொரு புத்தாண்டு. ஒவ்வொரு மனிதனும் தனது சிந்தனையாலும் செயலாலும் தன்னைச் சுற்றிய உலகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறான். மனித சிந்தனைகளின் நிகரத் தாக்கம்தான் மனித சமுதாயத்தை உயர்த்தவோ தாழ்த்தவோ செய்கிறது. நம்மைச் சுற்றிலும் காணப்படும் குற்றங்கள், ஒழுக்கக் குறைவு, இழிசெயல், வன்முறை ஆகியவற்றைப் பார்த்தாலே, மனித சிந்தனை எவ்வளவு பாழ்பட்டிருக்கிறது என்பதை நாம் ஓரளவு கணிக்க முடிகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் ஓட்டையை அடைப்பதற்குக் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது இந்தக் குறைபாட்டை நீக்குவதில் காண்பிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தத் திக்கிலே சிந்தித்து அதற்கான செயல்முறைகளை நாமே வகுத்துக் கொண்டால் நன்மை ஏற்படும். ஒன்றே ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும்: There is no need to reinvent the wheel.
*****
நல்லதையே சிந்தித்து, நல்லதையே பேசும் உறுதியைக் கைவிடாமலே தென்றல் பத்தாண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் பயணத்தில் நம்மைத் தொடர்ந்து ஆதரித்த சிலரைப் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் பட்டியல் அத்தனை சிறியதல்ல. நாச்சா சுப்ரமணியன் (ரியால்டர்), அனுராதா சுரேஷ் (ஸ்ருதி ஸ்வர லயா), மீனா லோகன் (புஷ்பாஞ்சலி), மருத்துவர்கள் கலை, மஞ்சரி ஆராவமுதன், பாலா அண்ணாதுரை மற்றும் பல புரோகிதர்களும் தொடர்ந்து தென்றலில் விளம்பரம் செய்து வருகின்றனர். பொருளாதார ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல் வாசகர்களைத் தென்றல் சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இவர்கள் தரும் ஆதரவை இங்கே நன்றியோடு தென்றல் பதிவு செய்கிறது.
*****
தேசியமும் தெய்விகமும் இரண்டு கண்களாகக் கொண்டிருந்த வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த தினம் ஜனவரி 12 என்பதால் அவரது வாழ்க்கையிலிருந்து சில உத்வேகமூட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் தன்னார்வ நிறுவனமான கிமிஞி மிஸீபீவீணீவின் டாக்டர் பாலாஜி சம்பத், மாதநாவல் ஜீ. அசோகன் ஆகியோரின் நேர்காணல்கள், சிறுகதைகள் தவிர, ஒரு நீண்ட மொழிபெயர்ப்புக் கதை, பயனுள்ள தகவல்கள், மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டி, ஷிர்டி திருத்தலத்தைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரை என்று மற்றொரு வண்ணக் கதம்பம் உங்கள் கையில். சுவையுங்கள், சொல்லுங்கள்.
வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஜனவரி 2011 |