பணத்தை மட்டுமே முக்கியமாக எண்ணாமல், ஆத்மார்த்தமாக இசைக்குச் சேவை செய்தவர்களில் ஒருவர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர். ஒருமுறை அவரைக் கச்சேரிக்கு அழைப்பதற்காக மும்பையிலிருந்து சிலர் வந்தனர். அவசியம் அவர் மும்பைக்கு வந்து பாடவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொண்டனர்.
"பண்ணின கச்சேரியெல்லாம் போறுமே... அவ்வளவு தூரம் வந்து பாடறது ரொம்ப சிரமம்" என்றார் ஐயர்.
"அண்ணாவுக்கு ரயில்ல வர்றது சிரமமானால், நாங்கள் பிளேனிலேயே டிக்கெட் ஏற்பாடு பண்ணிடறோம்" என்றார் வந்தவர்களில் ஒருவர்.
"நான் பணத்துக்காகப் பறக்கலை ஐயா.... ஆளைவிடுங்கள்" என்றார் மஹாராஜபுரம். வந்தவர்கள் பேசாமல் அகன்றனர். |