தொடதே, பார்!
அவர் மிகச்சிறந்த வயலின் கலைஞர். விஜயநகரம் மஹாராஜா இசைக் கல்லூரியில் பேராசிரியர். உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு வயலின் கலைஞர் ஒருவரின் கச்சேரியைக் கேட்க அவர் சென்னைக்கு வந்தார். கச்சேரி முடிந்ததும் இசைவாணரைப் பாராட்டியதுடன், அவரது வயலினைத் தாம் தொட்டுப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் வந்தவரோ, "என் வயலின் பார்க்கவும் கேட்கவும் மட்டும்தான். யாரும் தொட நான் அனுமதிக்க முடியாது" என்றார். அது அந்த இசைக் கலைஞருக்கு சற்று வருத்தத்தைத் தந்தது. ஆனாலும், ஏதும் பேசாமல் நன்றி கூறி விடைபெற்றார்.

மறுநாள் நண்பர் ஒருவரது வீட்டில் விஜயநகர இசைக்கலைஞரின் கச்சேரி. அதைப் பார்க்க வெளிநாட்டுக் கலைஞர் வந்திருந்தார். "அரை மணி நேரத்திற்கு மேல் கச்சேரியைக் கேட்க இயலாது" என்ற நிபந்தனையோடு வந்தவர், இரண்டு மணி நேரம் அசையாமல் பரவசத்துடன் கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கச்சேரி முடிந்ததும் அந்த இசைக் கலைஞரை ஆரத் தழுவிக் கொண்ட அந்த வெளிநாட்டுக் கலைஞர், "மன்னிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு உயர்ந்த ஞானம் உடையவர் என்பது தெரியாமல் நேற்று நான் அப்படிப் பேசி விட்டேன். நீங்கள் என் அறைக்கு வர வேண்டும்" என்று கூறி அழைத்துச் சென்றவர், தன் வயலினை அந்த இசைக் கலைஞரிடம் கொடுத்து, "நீங்கள் தொட்டுப் பார்ப்பது மட்டுமல்ல. எனக்காகச் சிறிதுநேரம் இதில் வாசிக்கவும் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இசைக் கலைஞர் - துவாரம் வெங்கடசாமி நாயுடு; வெளிநாட்டு இசைவாணர், மேதை யெஹுதி மெனுஹின்.

© TamilOnline.com