குட்டிக் கதை: வளரும் நாடு
லண்டனில் இருந்து சிவா தங்கை திருமணத்துக்காகத் திருச்சிக்கு வந்திருந்தான். மூன்று வருடங்களில் நல்ல மாற்றம் தெரிந்தது. பெரிய கட்டிடங்களும், வீடுகளும், கடைகளும் என ஊரே பரபரப்பாக இருந்தது. ஜெட்லாக் தூக்கம் முடிந்தபின் தங்கை ஜெயாவுக்கு வாங்கி வந்த பொருள்களைக் கொடுத்தான். பர்ஃப்யூம், சாக்லேட், ஃபேஷன் ஆடைகள் என்று வரிசையாக எடுத்து வைத்தான்.

"என்ன ஜெயா எல்லாம் பிடிச்சிருக்கா? உனக்காக இன்னொரு பொருள் ஸ்பெஷலா வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா?"

"நீயே சொல்லிடு அண்ணா"

"இதான் ஐ-பாட் (ஷஃபுல்). பாக்கச் சின்னதா இருக்கு, ஐநூறுக்கு மேல பாடல்களை இதில போட்டு வச்சுட்டு கேக்கலாம். உனக்குத்தான் பாட்டுனா உயிராச்சே. அதான் கொஞ்சம் காஸ்ட்லியானாலும் வாங்கிட்டு வந்தேன்."

"தேங்க் யூ அண்ணா. ரொம்ப பிடிச்சிருக்கு."

அடுத்த நாள் காலை சிவன் கோவில் போவதற்காகக் காரில் அமர்ந்தான். ஊர் விஷயங்களை டிரைவரிடம் கதைத்துக் கொண்டிருந்தான்.

டிரைவர் எதையோ அமுக்கிக் கொண்டு காதில் சொருகிக் கொண்டார்.

"என்ன டிரைவர் செய்றீங்க?"

"ஓ... இதுவா? ஐ-பாட்(ஷஃபுல்). எனக்கு பாட்டு கேட்டுகிட்டே வண்டி ஓட்டப் பிடிக்கும். அதான் வாங்கிருக்கேன் சார்."

சிவா ஆச்சரியத்தோடு ஜெயாவைப் பார்த்தான்.

நாச்சா,
மேரிலாந்து

© TamilOnline.com