தெரியுமா?: கிருஷ்ணா சங்கர்
ஆஸ்டின், டெக்சாஸில் வசிக்கும் கிருஷ்ணா சங்கர் எடுத்த 'You Can' குறும்படம் நியூயார்க் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த டாகுமென்டரிக்கான பரிசை வாங்கியது. அவரது அடுத்த குறும்படம் 'என்று தணியும்'. இதற்காக ஜூலை மாதம் இந்தியா சென்று படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார். இதைப்பற்றி அவர், "சமூகத்தில் இருக்கும் ஒரு பிரச்சனைக்கு சமுதாயமே காரணம் என்று சொல்லமுடியாது. Community also should change to adapt to society. இதுதான் 'என்று தணியும்' படத்தின் பின்னணி" என்கிறார். 12 நிமிடக் குறும்படமான இதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

கிருஷ்ண கலாலயா புரொடக்‌ஷன்ஸ் என்ற நாடகக் குழுவையும், DirectionFX என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் கிருஷ். அவரது அடுத்துவரும் திரைப்பட, நாடக முயற்சிகளைப் பற்றி www.directionfx.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அடுத்த நாடகம் ஏப்ரல், 2011ல் மேடையேறும், அதற்கான ஒத்திகைகள் தொடங்கிவிட்டன என்கிறார்.

இவரது அண்ணன் பார்த்தா சங்கர் டொரொன்டோவில் Mississuaga Creations நாடகக் குழுவை நடத்தி வருகிறார். கலையில் இவ்வளவு ஈடுபாடும் ஆர்வமும் எப்படி வந்தது என்று கேட்டால் இருவரும் கூறும் ஒரே பதில் "தந்தை, தாய் இருவருமே நாடக, சினிமா பின்னணி கொண்டவர்களாதலால் இயல்பாக வருகிறதோ, என்னவோ?" என்பதுதான்.

2011 முதல் இவரது கலாலயா, 'கலா க்ரிதி' (Kala Krithi) என்கிற விருதை வட அமெரிக்க நாடகக் குழுவினருக்கு வழங்கி கௌரவிக்க இருக்கிறது என்கிறார் கிருஷ். எதிர்காலத்தில் தமிழ் நாடகக் குழுக்கள் நாடகம் நடத்த உதவுவதற்காக ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்பது இவரது ஆசை. "இன்னும் இந்தியாவில் நாடகக் குழுக்கள் தங்கள் கைக்காசு போட்டு நாடகம் நடத்தும் நிலைதான் இருக்கிறது, அது நாடக வளர்ச்சிக்கும், கலைஞர்களின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல" என்று கூறுகிறார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com