பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை'
நவம்பர் 6, 2010 அன்று, கலிஃபோர்னியாவின் சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் இயங்கும் க்ரியா நாடகக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து 'தனிமை' என்ற மேடை நாடகத்தை வழங்கினார்கள்

பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ் கலாசார அமைப்பாகும். இந்தப் பகுதியில் வாழும் குழந்தைகள் மற்றும் இளைஞரின் திறனை வளர்க்கும் பொருட்டுக் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன் பாரம்பரிய இந்துப் பண்டிகைகளையும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அவர்கள் க்ரியாவின் 'தனிமை' நாடகத்தை மேடையேற்றினர். ஃப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரி அரங்கில் மதியமும் மாலையும் என இரண்டு முறை அரங்கு நிறைந்த காட்சிகளாகத் தனிமை அரங்கேற்றப்பட்டது. சங்கத் தலைவர் ராகவேந்திரன் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து சங்கத்தின் நோக்கங்களை விளக்கினார். செயலர் திருமுடி நன்றி அறிவித்தார்.

தனிமை நாடகத்தின் காட்சிகள் ரசிகர்களின் வாழ்வுடன் ஒன்றியிருந்தமையினால் அவர்களை நெகிழ்வித்துக் கலங்கவும் சிரிக்கவும் வைத்தன. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாகவும், கலகலப்புடனும் வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை காணாமல் போன ஒன்றாகும். "எல்லோரும் நம்மை விட்டுப் போன பிறகு, உடலும், மனமும் தளரும்போது புரியும்டா உறவுகளின் வலிமை உனக்கு" என்று அம்மா சொன்னதை வயதான மணி நினைத்துப் பார்ப்பது நெகிழ்வான தருணம்.

கனமான கதைக் கருவின் நடுவிலும் சித்தப்பா கதாபாத்திரத்தின் மூலம் நகைச்சுவைக் காட்சிகள் கதை ஓட்டத்தைக் கெடுக்காமல் வந்து ஆரவாரமான வரவேற்பைப் பெற்றன. பாடல்களும் பின்ணணி இசையும் ரசிக்கத்தக்கவையாக அமைந்திருந்தன. அம்மாவாக தீபா ராமானுஜம், இளவயது மணியாக ராஜீவ், முதுமையான மணியாக நவீன் நாதன், நண்பர் ஸ்ரீதராக கணேஷ், கலகலப்பான சித்தப்பாவாக திலீப் ரத்தினம் என்று எல்லோருமே, குழந்தைகள் உட்பட, அருமையாக நடித்திருந்தனர்.

இந்நாடகத்தின் மிகப்பெரிய வெற்றி காண பிற மொழி இந்தியர்களும், அமெரிக்கர்களும் வந்திருந்ததே. அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வசதியாக சினிமாக்களில் வருவது போல ஆங்கில வசனங்களைத் திரையில் ஓட விட்டிருந்தது ஒரு புதிய, பாராட்டத்தக்க முயற்சி.

பாரதி தமிழ்ச் சங்கம் பண்டிகைகள் தவிர இலக்கிய நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்களுடன் சந்திப்பு, சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் போன்றவற்றையும் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், உதவவும் விரும்புவோர் கீழ்க்கண்டவர்களைத் தொடர்பு கொள்ளவும்:

ராகவேந்திரன் - 785.979.5497
வாசுதேவன் - 510.868.0510
திருமுடி - 510.684.9019

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com