லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி
வள்ளி-தெய்வானையுடன் முருகன் அருள் பாலிக்கும் லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நவம்பர் 7 முதல் 13 வரை விமரிசையாக நடந்தன. நவம்பர் 13 அன்று காலை பக்தர்கள் புடை சூழ பால் காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடி சகிதம் தன் அடியார்கள் குழாத்துடன் முருகன் மயில்மீது உலா வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சி. தொடர்ந்து முருகனுக்கு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் பாடிய பாடல்கள் இசை வெள்ளமாய் நெஞ்சை உருக்கின. தொடர்ந்து தீபாராதனை, மாவிளக்கு, அருட்பா, தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் ஆகியன அளிக்கபெற்றன. மறுநாள் திருமுருகன் கல்யாண வைபோகமும், சிறப்பிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்தத் தெய்வீக வழிபாட்டை காஞ்சிபுரம் சந்திரமௌலி சாஸ்திரிகள் தலைமையில் சிறப்பாக நடத்தினர்.

27ம் தேதியன்று சிறுவர் தின விழா நடந்தது. பிளசன்டன் தமிழ்ப்பள்ளிச் சிறார் ஆடல், பாடல், நாடகம் மூலம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களை அந்த மழை நாளிலும் கட்டிப்போட்டு தத்துவங்களை ஊட்டினர். தந்தைக்கு உபதேசம் செய்த தமிழ் சிறப்பு. மருத்துவர் கமலா சங்கர் நெறியாள்கையில் 'சூரசம்ஹாரம்' நாடகத்தில் சரவணனின் புகழ் பாடி செந்தில்வேல் எடுத்து விளையாடினர். மொத்தத்தில் நிறைவான விழா.

பாலு,
லிவர்மோர், கலிஃபோர்னியா

© TamilOnline.com