சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்'
நவம்பர் 20, 2010 அன்று லெக்ஸிங்டனில் உள்ள ஹெரிடேஜ் மியூசியத்தின் மாக்ஸ்வெல் அரங்கில் சௌம்யா ராமநாதன் 'சம்ர்ப்பணம்' என்ற தனி நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். தான் பயின்ற கலாக்ஷேத்ராவுக்கும், தனக்கு நடனக்கலை பயிற்றுவித்த குரு சாவித்திரி ஜகன்னாத ராவ் அவர்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாக இந்த நிகழ்ச்சியை அவர் வழங்கினார்.

சௌம்யா சென்னையில் நடக்கும் இயல், இசை, நாடக விழாவில் பலமுறை பங்கேற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. பாரம்பரிய முறையில் அலாரிப்பு ஜதீஸ்வரம் முடிந்து கவுத்துவத்தில் முருகனின் வாகனமான மயில் மற்றும் முருகக் கடவுளின் பெருமையையும் வீரத்தையும் பற்றிச் சொல்லும்போது மயில்போலவே மிக அழகாக ஆடினார். பக்தி ரசம் சொட்டும் வர்ணத்தில் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் நாயகியான அவர் அரங்கனிடம், "கஜேந்திரனுக்கும் திரௌபதிக்கும் அபயம் அளித்த தாங்கள் என்னிடம் பாராமுகம் ஏன்?” என்று கேட்கையில் முகபாவம் மனதைக் கொள்ளை கொண்டது. அடுத்து வந்த கமாஸ் ராக ஜாவளி, த்வஜாவந்தி ராகத்திலான பதம் ஆகியவை அவரது நிருத்யத்தின் சிறப்பை வெகுவாக உணர்த்தின.

முத்தாய்ப்பாக கலாக்ஷேத்ராவின் ஸ்தாபகர் ருக்மணி அருண்டேல் அவர்களுக்கு அஞ்சலி கூறுவதாக அமைந்த தில்லானாவில் இவரது பாதங்கள் துள்ளி விளையாடியது கண்கொள்ளாக் காட்சி. மங்களத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

திருமதி. மீனா சுப்ரமண்யம் (நட்டுவாங்கம்), திருமதிகள் ஜனனி சுவாமி மற்றும் பாலா ராமநாதன் (வாய்ப்பாட்டு), திரு. கார்த்திக் பாலச்சந்திரன் (வயலின்), திரு. கௌரிஷங்கர் சந்திரசேகர் (மிருதங்கம்) இவரது நடனத்துக்குப் பக்கபலமாக அமைந்தனர். திருமதி காயத்ரி ஸ்ரீனிவாசன் அவர்களின் விளக்கவுரை மிக நன்றாக இருந்தது. வாய்ப்பாட்டுப் பாடிய பாலா ராமநாதன், சௌம்யாவின் தாயார் என்பது குறிப்பிடத் தக்கது.

சரஸ்வதி தியாகராஜன்,
பாஸ்டன்.

© TamilOnline.com