முதன்மை மருத்துவரின் அலுவலகத்தில் ஒருநாள்
காலை 9:00 மணி: முதல் நோயாளியாக வந்த சந்திரிகாவுக்கு 4 நாளாக இருமல், சளி. மூச்சு விடச் சிரமம். உடலில் களைப்பும் சோர்வும் அதிகம். மருத்துவப் பரிசோதனையில் நெஞ்சில் கபம் கட்டியிருப்பது தெரிகிறது. மூச்சு விடும்போது இழுப்பு இருக்கிறது. நுரையீரலில் நுண்ணுயிர்க் கிருமி தாக்கியிருக்கிறது என்று மருத்துவர் அதற்கு இழுப்பு மருந்தும், நுண்ணுயிர்க் கொல்லியும் கொடுக்கிறார்.

காலை 9:15: அடுத்த நோயாளி வருடாந்திரத் தடுப்பு மருத்துவம் பார்க்க முதன்மை மருத்துவரிடம் வருகிறார். இவரிடம் மருத்துவர் பல கேள்விகளைக் கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டார். முந்தைய மருந்துவ வரலாறு, குடும்ப மருத்துவ வரலாறு, புகை மதுபானப் பழக்கம் போன்றவை பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. தலைமுதல் கால்வரை பரிசோதனையும் செய்தார். இதற்குப் பிறகு இருதயப் பரிசோதனையாக ECG எடுக்கப்பட்டது. பின்னர் டெடனஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது. வருடாந்திர ரத்தப் பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை, எலும்பு முறிவுக்கான பரிசோதனை ஆகியவற்றிற்கு நாள் குறிக்கப்பட்டது. ஐம்பது வயது ஆகிவிட்டதால் பெருங்குடல் பரிசோதனை (colonoscopy) பரிந்துரைக்கப்பட்டது.

காலை 10:00: மூன்றாவதாக வந்த நோயாளி ரத்த அழுத்தம், நீரிழிவுப் பரிசோதனைக்கு வந்திருந்தார். இவருக்கு ரத்த அழுத்தம் சற்றுக் கூடுதலாக இருக்கவே அதற்கு மாத்திரைகள் மாற்றி எழுதிக் கொடுத்தார். மேலும், ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். நீரிழிவு நோய் இருப்பவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை Hb A1c இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். வருடத்துக்கு ஒருமுறை கண், கால், சிறுநீரகப் பரிசோதனைகள் அவசியம். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், இரண்டு வாரத்திற்குப் பிறகு திரும்ப வரச் சொல்லி அனுப்பினார்.

காலை 10:30: அடுத்த நோயாளிக்கு 2 நாளாக முதுகுப்பிடிப்பு. நடக்க முடியவில்லை, நிற்க முடியவில்லை. வேதனையில் தூங்க முடியவில்லை. பரிசோதனையில் முதுகுத் தண்டில் தசைப்பிடிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்கு உடற்பயிற்சியும், (Physical therapy) தசை இளக மாத்திரைகளும் பரிந்துரைக்கப் பட்டன. தசைநார்களுக்கு லேசான சூட்டில் ஓத்தடம் கொடுக்கச் சொன்னார்.

காலை 10:45: அடுத்த நோயாளி அலுவல் நிமித்தமாகத் தடுப்பு மருத்துவம் செய்து கொள்ள வந்திருந்தார். இவரது மருத்துவ வரலாறும் கேட்டறியப் பட்டது. பின்னர் பரிசோதனை. தவிர, Hepatitis நுண்ணுயிர்க் கிருமி இருக்கிறதா என்று கண்டுபிடிக்கப் பரிசோதனை நடந்தது. இதைத் தவிர MMR தடுப்பு மருந்துகள் அளவைக் கண்காணிக்க ரத்தப் பரிசோதனை செய்யப் பரிந்துரைக்கப் பட்டது.

காலை 11:30: தோட்டத்தில் வேலை செய்யும்போது ஏற்பட்ட உடல் அரிப்பில் கொப்புளம் என்று அவசரமாக வந்த நோயாளி. இவருக்கு Poison Ivy இருப்பது உடல் பரிசோதனையில் தெரியவந்தது. உடனடி நிவாரண மாத்திரைகள் தரப்பட்டன.

இதுபோல நாள் தொடர்ந்தது. ஆக முதன்மை மருத்துவம் அவசியம் என்பது இப்போது புரிந்திருக்கும். தனக்கென்று ஒரு மருத்துவரை வைத்துக்கொள்வதன் மூலம் நோயாளி தனது மருத்துவ வரலாறு முழுவதையும் ஒரு மருத்துவரிடம் சொல்ல முடியும். இதனால் நோயாளி எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகளைத் தடுக்க முடியும். நோய் முற்றுவதைத் தடுக்க முடியும். நோயின் தீவிரம் அதிகமானால் உடனடியாகச் சிறப்பு மருத்துவரை நாடவும் முதன்மை மருத்துவர் உதவுவார். பலதுறைச் சிறப்பு மருத்துவர்களை நோயாளி காண நேரிட்டால் இவர்களின் பரிசோதனை முடிவுகளையும், மருந்துகளையும் முதன்மை மருத்துவர் ஒருங்கிணைக்க முடியும். நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் இந்த ஒருங்கிணைப்பின் அவசியம் தெரியவரும். பல பேருக்கு நோய் வருவதற்கு முன்னர் தடுப்பதற்கு வருடாந்திரப் பரிசோதனை மிகவும் அவசியம். இது அவரவர் வயதுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை தேவைப்படும். இந்தப் பரிசோதனையில் புற்றுநோய் தடுக்கும் விதங்களும், நோய் தவிர்க்கும் முறைகளும் விவாதிக்கப்படும். வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்தப் பரிசோதனை தேவைப்படுகிறது. இதில் உயிரை நீட்டிக்க உதவும் (Artificial Ventilation) முறைகள் பற்றி உரையாடலாம். மேலும் வயதான பின்னர் தேவையான வீட்டு உதவி, செவிலியரகம் போன்றவை குறித்துப் பேசலாம்.

உடனடிப் பரிசோதனை, தடுப்புப் பரிசோதனை, மாதாந்திர/வருடாந்திரப் பரிசோதனை ஆகியவற்றுக்கு முதன்மை மருத்துவர் அவசியம். பல சமயம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை நாடாமல், முதன்மை மருத்துவரின் அலுவலகத்திலேயே சுலபமாகக் குறித்த நேரத்தில் பரிசோதனையை முடித்துக் கொள்ளலாம். இதனால் பணவிரயம் குறையும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் தீர்வு அளிக்க முடியும். முதன்மை மருத்துவத்தின் முக்கியம் உணர்ந்து நோய் வரும்முன் காக்கவும், நோயின் தீவிரம் தணிக்கவும், நோய் வரலாறு மருந்துகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவும் முதன்மை மருத்துவம் செய்து கொள்வது அவசியம். வாழ்க வளமுடன்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com