வாழைக் கன்னு
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்னு சொல்லுவாங்க. அத்தோட அமெரிக்காவில் வாழமரம் வளர்த்துப்பார்னும் சேர்த்துக்கணும்னு பணிவன்புடன் கேட்டுக்கரேனுங்க. எல்லாரையும் போல நானும் எங்க அத்தைய அமெரிக்காவுக்கு கூட்டிட்டு வந்தோமா, நயாகராவை காமிச்சோமா, நாலு கெட்டுகெதர் பார்ட்டிக்கு கூட்டிட்டு போனோமான்னு இருந்திருக்கணும். இல்லியே! தான் உண்டு, தன் சன்(டிவி) உண்டுன்னு இருந்தவங்களை நான்தான் "அத்தை, உடலுக்கு ரொம்ப நல்லது, நடந்துட்டு வாங்க"ன்னு வெளியே அனுப்பி வச்சேன். அனுப்பினவ தனியா அனுப்பிருக்கக் கூடாதா? நாலு வீடு தள்ளியிருக்கும் அந்தச் சுடிதார் போட்ட இந்திக்கார பாட்டிய எனக்கு தெரிஞ்ச அரைகுறை இந்தியில் பேசி அறிமுகப்படுத்திவிட்டேன். அத்தோட சரி. தினமும் சாயங்காலம் அஞ்சு மணியானால் அத்தை சீவி சிங்காரிச்சு கிளம்பிடுவாங்க.

ஊரு ஒலகத்தில புது எடத்துக்குப் போய் மொழி தெரியாமல் திண்டாடினேன்னு சொல்றவங்கெல்லாம் இங்க வந்து பாக்கணும். கருவம்பட்டியத் தாண்டி சென்னைக்கு வந்ததையே வெளிநாடுன்னு சொல்லும் அத்தையும், இட்லி வடையத் தவிற வேறொண்ணும் தமிழ் நாட்டுல இல்லன்னு நினைக்கிற பாட்டியும் அப்படி என்னதான் பேசுவாங்களோ, என்னதான் புரிஞ்சுப்பாங்களோ அந்த காத்தவராயனுக்குதான் வெளிச்சம். நடையா நடந்துட்டு வந்து கதை கதையா சொல்ற அத்தைய நம்பறதா வேண்டாமான்னு ஒரே யோசனை! அத விடுங்க! ஒருநாள் விறுவிறுன்னு உள்ள வந்து செருப்ப கழட்டியும் கழட்டாமலும் ஆரம்பிச்சாங்க, "இந்த கோடிவீட்டு வாசல்ல வாழமரம் என்னமாய் வளர்ந்திருக்கு. ஆயிரம் மரஞ்செடி கொடி இருந்தாலும் வீட்டுல வாழையைப் போல வருமா?"ன்னு.

வலையில தானா வந்து விழற மீனா நானும், "அப்படியா அத்தை. இங்கெல்லாம் வாழையைப் பாக்கமுடியாதே. கடையிலயும் கிடைக்காதே. எங்கேருந்து வாங்கி வச்சாங்களோ"ன்னு சொல்லி வச்சேன். மறுநாளே ஒரு காயிதத்தில் வாழமரம் விக்கற வெப்சைட் பெயரை அந்த வீட்டுக்காரரிடமிருந்து எழுதி வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. கம்யூனிகேஷ்ன் க்ளாசெல்லாம் இவங்க மாதிரி ஆளவிட்டு எடுக்க சொல்லணும்பா.

சரி, அத்தை ஆசைப்படறாங்களேன்னு அந்த வெப்சைட் போனா ஒரு நூறு விதமான வாழைக்கன்னை போட்டிருக்கான். எப்பேர்ப்பட்ட குளுரானாலும் வெயிலானாலும் வளரும்ன்னு போட்டிருந்த ஒரு வகையை தேர்ந்தெடுத்தேன். நம்ம ஊர்ல சும்மாவே கெடக்கிற வாழையைச் சொளையா இருவது டாலர் அதாவது ஆயிரம் ரூவா கொடுத்து வாங்கிட்டேன். தெனமும் வேலை முடிஞ்சு வீடு நுழையும்போதே வாசலில் பெரிய பாக்கேஜ் ஏதாவது இருக்கான்னு பாத்துட்டே வருவேன். ஒரு பதினஞ்சு நாள் கழிச்சு சின்னதா ஒரு கவர்ல வெரல் அளவுக்கு ஒரு செடி வந்தது. அமெரிக்காவுக்கு எங்கூரு வாழத் தோப்பையே கொண்டு வந்தாப்புல ஒரு மகிழ்ச்சி. போதாக் கொறைக்கு அத்தையும் வாழக்கன்னு வச்சா சடசடன்னு வளர்ந்திரும். அது பெருசானா நெறைய கன்னு போட்டுரும்ன்னு நாக்குல தேனத்தடவுனாங்க.

கனவுல கூட வாழைத் தோப்பில நடக்குறாப்புல இருந்துது. ஒரு சமயம் இந்த கம்ப்யூட்டரக் கட்டி அழுவறதுக்கு பதிலா வாழை சாகுபடி பண்ணா என்னன்னு நெனப்பு வந்துதுன்னா என்ன சொல்வீங்க. சரி, மொதல்ல வேர் புடிக்கட்டும் அப்புறமா நெலத்துல வச்சிக்கலாம்னுட்டு கடைக்கு போனேன். வளர்ற பையனாச்சேன்னு பாதிரியார் அங்கியாட்டம் சட்டை தைப்பாங்களே அத மாதிரி இக்குனூண்டு செடிக்கு என் ஒசரத்துல பாதிக்கு தொட்டிய வாங்கிட்டேன். அத்தைக்கு ஒரே சந்தோஷம். ஊருக்கு போகறத்துக்குள்ள ஒரு சீப்பானும் பார்த்துறலாம்ன்னு நெனப்பு. வீட்டுக்குத் தொட்டிய கொண்டு வந்து ஒரு பை ஒரம் கலந்த மண்ணக் கொட்டி செடிய வச்சு தண்ணி விட்டப்புறம் பெருமூச்சு விட்டேன்.

மறுநாளே அஞ்சாறு எலவிட்டு தளதளன்னு வளந்திருக்கேன்னு ஆச்சரியப்பட்டா அது விடியக்கால கனவுன்னு தெரிஞ்சுது. எழுந்து பல்லக்கூட வெளக்காம போய் பார்த்தா ரொம்ப நாளா கவனிக்காத செடியாட்டம் துவண்டு கெடந்தது. சரி, அரசமரத்தை சுத்தின ஒடனே அடிவயத்தத் தொட்டுபார்க்க கூடாதுன்னு பொழப்பப் பாக்க போயிட்டேன். போர்டு மீட்டிங்குன்னு கூப்பிட்டு நிக்க வச்சு வாயாலயே சுட்டுட்டு இருந்த மானேஜர் கும்பலை, நிராயுதபாணியா நின்ன ராவணனாட்டம் பாத்துட்டிருந்தோம். ட்ரிங், ட்ரிங்னு செல்ஃபோன் மணியடிச்சதும் இதாண்டா சாக்குன்னு "வீட்டுல அவசரம். இன்று போய் நாளை வரேன்"ன்னு கிளம்பிட்டேன். வெளியே வந்து ஃபோன் யாருன்னு பாத்தா எங்க அருமை அத்தை. "சொல்லுங்க அத்தை. என்னாச்சு?"ன்னு பதட்டத்தோட கேட்டா, "வாழக் கன்னுக்கு வெய்யில் பத்தலன்னு நெனக்கிறேன். அத தொட்டியோட வீட்டு முன்வாசல்ல வச்சிரலாம்"னாங்க. எதிர்வீட்டு கதீஜாவை துணைக்கு கூப்பிட்டு தொட்டியத் தூக்கி முன்வாசல்ல வச்சோம். அவ பங்குக்கு அவளும் மிராக்கிள் க்ரோன்னு ஒரு ஒரம் இருக்கு. போட்டிருக்கல்லன்னு கேட்டா. இருந்த ஒத்த எலயும் தொவண்டதக் காணச் சகிக்காம போய் மிராக்கிள் க்ரோவை வாங்கிட்டு வந்து தெளிச்சேன். நீட்டமான நுனி இலையில தண்ணி தெளிச்சு சாதம், கொளம்பு, கறி,அப்பளம், பாயாசம், பீட்சா... இரு இரு, இதென்ன பரிகாரப் பூசணியாட்டம் நெறஞ்ச இலைல பீட்சா இருக்குன்னு பாத்தேன். அலார்ம் கடிகாரம் மணி அடிச்சுது. அடங்..சைன்னு வந்தது. ஒரு வாரமா அத்தை நடந்துட்டு வரும்போதெல்லாம் வாழையை பொழைக்க வைக்க ஒரு யோசனையோட வருவாங்க. "இங்கெல்லாம் சாணி ஒரம் கெடக்காதா?"ன்னு கேட்டாங்க. அது ரோஸ் செடிக்கு இல்லயா போடுவாங்க அத்தைன்னேன். மண்ணுக்குள்ள காத்து போகாம இருந்தா வளரும், மேல சருகு எதாச்சம் போடறியான்னாங்க. சரின்னு மல்ச் வாங்கி போட்டேன். தொட்டியே மெதக்கிற அளவு தண்ணியோட சொகமாத்தான் இருந்தது. ஆனா ஒரு எல துளுக்கணுமே, ஊஹூம்.

அத்தை பொலம்பின பொலம்பல்ல தெருவில போற வரவங்கெல்லாம் வந்து துக்கம் விசாரிக்கறதும், அவிங்களுக்கு காப்பித் தண்ணி தரதுமா அத்தைக்கு நல்லா பொழுது போச்சு. ஆளுக்கு ஒரு ஐடியா சொல்றதும் அதை நாங்க செஞ்சி பாக்கறதுமாய் ரெண்டு மூணு வாரம் ஓடிடுச்சு. குளுர ஆரம்பிக்கவும் தொட்டிய எடுத்து உள்ள வச்சோம். வேற எடத்துலேந்து எடுத்து வச்சோம் இல்லயா. அதனால சாமிக்கு கும்பிட்டுக்கலாம்ன்னு வாழத்தொட்டிய ஒரு தொளசி மாதிரி மஞ்சள் பூசி குங்குமம் வச்சி மங்களகரமாய் ஆக்கிட்டாங்க.

சனிக்கிழமையாச்சேன்னு சொகமா தூங்கிட்டிருந்தேன். "இங்க வந்து அதிசயத்தைப் பாரேன்." அத்தை கூக்குரலிட்டது கேட்டுது. மாடியிலிருந்து வந்து பார்த்த எனக்கும் கண்ணெல்லாம் விரிஞ்சு போச்சு. சின்னதா ஒரு துளிர் விட்டிருந்தது. அது வெளிர் பச்சையில நிமிர்ந்து நின்னுட்டு இருந்தது. எனக்கு புள்ள பொறக்கப்போற சேதி கேட்டுக்கூட இவ்வளவு சந்தோசப் பட்டிருப்பாங்களான்னு தெரியலை. அத்தை மொகத்தில அத்தன நெறவு. "நான் சொல்லல, சாமி கும்பிட்டது வீண் போகலை"ன்னாங்க. அது சாமியாலையோ, அத்தை மாமியாயாலையோ, வாழை கன்னும் பொழச்சிடிச்சு. மனசும் நெறைஞ்சிருச்சு. அத்தை ஊருக்குக் கிளம்பி போய் கிராமம் முழுசும் வாழக்கன்னு வளர்ந்த கதைதான் சொல்லிட்டிருந்தாங்க. வாழை இந்த ஆறு மாசத்தில விறுவிறுன்னு நல்லா வளர்ந்து நிக்குது.

இப்போல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் வாழை எலயிலதான் சாப்பாடு. ஞாயிற்றுக் கெழமை அத்தைக்கு ஃபோன் போட்டா "அடுத்த தடவை நான் வரும்போது கறிவேப்பிலை கொட்டை எடுத்துட்டு வரேன். கறிவேப்பிலை செடி இல்லாத வீடெல்லாம் ஒரு வீடா"ன்னாங்க. யப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே!

அபர்ணா பாஸ்கர்,
அட்லாண்டா

© TamilOnline.com