நான் தென்றல் வாசகி. அதுவும் உங்கள் பகுதியை, ஓரிரண்டு இதழ்களை தவிர்த்து, தவறாமல் வாசிப்பவள். சிலமுறை நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களையே என்னுடைய அறிவுரையாக (தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்) மாற்றி, என் உறவினர், நண்பர், கல்லூரியில் உடன் வேலை பார்ப்பவர்கள் என்று எல்லோரிடமும் சொல்லியிருக்கிறேன். இருந்தும் எனக்கு உங்களிடம் ஒரு குறை. ஏன் எப்போதும் Devil's Advocate ஆகவே இருக்கிறீர்கள்? உங்களிடம் ஆலோசனை கேட்க வருபவர்களுக்கு மனதுக்கு ஒத்ததாய், உற்சாகமாய் இருப்பது போல ஏதேனும் கருத்துக்களைச் சொல்லுங்களேன். நம்மை வேதனைப்படுத்துபவர்களிடம் நாம் ஏன் தழைந்து போக வேண்டும்? அவர்களை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகக் காரமாகச் சண்டை போடுவதில் இருக்கும் திருப்தி, சுகம் வேறு எதில் இருக்கிறது. நீங்களே சொல்லுங்களேன்.
இப்படிக்கு, ...................
அன்புள்ள சிநேகிதியே....
உங்களுக்கு மட்டும் என் மேல் இந்த குறை என்று நினைக்காதீர்கள். எனக்கே என்மேல் இந்தக் குறை நிறைய இருக்கிறது. 'மற்றவரைப் புரிந்து கொண்டு நானே ஏன் நடந்து கொள்ள வேண்டும்? என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளுபவர்கள் இருந்துகொண்டு தானே இருக்கிறார்கள்'' என்று என் மனமும் என்னுடன் சண்டை போடும்.
இந்த முறை இந்தப் பகுதியில் கொஞ்சம் சித்தாந்தம் எழுதப் போகிறேன். 'போர்' அடித்தால் மேற்கொண்டு படிக்கத் தொடருவதோ, தொடராததோ உங்கள் முடிவு. என்னுடைய கணக்கில் ஒவ்வொரு மனிதன் உள்ளும் 12 குணவான்கள் இருக்கிறார்கள். மிருகம், அரக்கன், தெய்வம்; தாய் (அல்லது) தந்தை, இளையவர், குழந்தை; ஆண், பெண், அது; ஞானி, சிந்தனையாளன், கிறுக்கன். நம்மை நாமே அலசிப் பார்க்கும்போது (interspection) இத்தனை பேரும் நம்முள் பெரிய வகையிலோ, சிறு வகையிலோ இருப்பது தெரியவரும். சில குணங்கள் வெளிப்படையாக இருக்கும். சிலது ஆழ்மனத்தில் (sub-concisious level) இருக்கும். சிலதை நாமே வெளிப்படுத்துவோம்.
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் சகோதரியின் 8 வயது மகன் சிணுங்கிக்கொண்டே அம்மாவிடம் வந்தான். ''அந்த விக்ரமை என்னிடம் சாரி கேட்கச் சொல்லு'' என்று கத்தினான். விக்ரம் பள்ளித்தோழன். பக்கத்து வீட்டுக்காரன். விளையாட்டு நண்பன்.
''எதுக்குடா?''
''அவன் என்னை அடித்தான்?''
''அவன் அடிக்கும்படி நீ என்ன செய்தாய்?''
"அவன் பொய் ஆட்டம் ஆடினான். நான் ஒரு உதைவிட்டேன்''
''அப்படியா, அவன் உன்னை பதிலுக்கு அடித்திருக்கிறான். சரியா?''
''ஆமாம். ஆனால் என்னைவிட அவன்தான் ஓங்கி அடித்தான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் திருப்பி அடிக்கு முன் அவன் ஓடிப்போய்விட்டான். இரண்டு நாளாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை''
''சரி இப்போது அதற்கு என்ன? பதிலுக்கு பதில் முடிந்துவிட்டது. இனிமேல் யாரையும் நீ அடிக்கக்கூடாது. ஏதாவது இருந்தால் என்னிடம் வந்து சொல். நான் அவன் அம்மாவிடம் சொல்லுகிறேன்.''
''ஆமாம். உனக்கு கிரிக்கெட்டில் ஏபிசிடிகூடத் தெரியாது. உன்னிடம் நான் போங்கு ஆட்டம்னு சொல்லி ஆட்டத்தை விட்டு வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குத் தெரியாது. அவனைக் கூப்பிட்டு என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லு.''
''எப்படிடா நான் செய்ய முடியும். இரண்டு பேரும் பேசாமலே இருந்து விடுங்களேன். நிம்மதி. இன்றைக்கு இல்லாவிட்டால், நாளைக்கு அவன் விளையாட்டில் தப்பு செய்தது தெரியும். நீ கொஞ்சம் பெரியவன் இல்லையா, விட்டுக் கொடுக்க வேண்டாமா?''
''முடியாது. எனக்கு இன்றைக்கு கேமில் கலந்துகொள்ள வேண்டும். நேற்றைக்கு வீட்டில் இருந்து போரடித்துவிட்டது'' என்று மீண்டும் கத்தினான்.
என்னுடைய சகோதரி தன் மகனை எப்படி வழிக்குக் கொண்டு வந்தாள் என்பது வேறு கதை.
பிரச்சினைகள், அதுவும் உறவுகள் முரண்படும்போது, நாம் எல்லோருமே இந்தச் சின்னப் பையன் நிலையில்தான் இருப்போம்.
இளம்மனது ஒரு அநியாயத்தைக் கண்டு மிருகம்போல் பாயத் துடிக்கும்.
தாய்மனது உணர்ச்சிகளுக்கு அணை போடும்.
ஞானியின் மனது நல்ல சிந்தனைகளை ஊக்குவித்துத் தெய்வ உணர்வுகளை உருவாக்க முயற்சி செய்யும். அப்படி இல்லையென்றால் நாம் மிருகமாகி, கிறுக்கனாகி, அரக்கனாகி வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம்.
இந்தச் சித்தாந்தத்தை இப்போது படிப்பவர்களில் எத்தனை பேர் இன்னும் குழம்பிப் போவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் யாருக்கு எது பிரச்சனையாகத் தெரிகிறதோ அவர்கள்தான் முயற்சி எடுத்து தங்கள் சிந்தனை மார்க்கத்தை மாற்றி வலி தெரியாமல் செய்து கொள்ள வேண்டும்.
இரு நண்பர்கள் ஒரு பாதையில் நடந்து போகிறார்கள். ஒரு பெரிய கல்லில் மோதிக் கொள்கிறார்கள். யாருக்கு வலி அதிகம் தெரிகிறதோ அவர்தான் அந்தக் கல்லை அப்புறப்படுத்த பார்க்க வேண்டும். அந்தக் கல்லை அவர் மலைக்கல்லாகப் பார்க்கும் போது வேதனை கூடியிருக்கிறது. மற்றவர் அதை மணல் குன்றாக நினைத்திருக்கலாம். அவருக்கு வலி அந்த நேரத்தில் தெரியாது போயிருக்கக்கூடும். அவரும் சேர்ந்து அந்தக் கல்லை அப்புறப்படுத்த முயற்சி செய்தால், இருவருக்கும் நல்லதுதான். ஆனால், அவர் முனையவில்லை, மற்றவருக்குத்தான் நிம்மதி குலைகிறது. வலி பெருகுகிறது. மகிழ்ச்சி மறைகிறது.
சுயநல ரீதியிலேயே நான் சொல்லுகிறேன். நமக்கு நிம்மதி வேண்டும். சந்தோஷம் வேண்டும். பிறரை மாற்ற நினைப்பது நம் சுயநலம்தான். நம் பையன் படிப்பில் ஆர்வம் இல்லாமல், ஊரைச் சுற்றி வந்தால் அவனை மாற்றத்தான் பாடுபடுவோம். அவன் பெயரில் அக்கறை என்றுதான் சொல்லுவோம். ஆனால் உண்மையில் அவன் நம் மகன். சுயம். ஊரில் ஆயிரம் பேர் இப்படி இருக்கிறார்கள். அவர்களை நாம் மாற்றப் போராடுவது இல்லை.
நான் Devil's Advocate ஆக இருப்பது மற்றவரைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு யுக்தி. அப்போது நம் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். மாற்றம் இரண்டு பக்கமும் ஏற்படும்.
வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம் சித்ரா வைத்தீஸ்வரன் |