முட்டாள் சீடன்
ஒரு ஊரில் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு சீடர்கள் இருந்தனர். அவர்களின் தற்காப்புக்காகச் சில மந்திர, தந்திர வித்தைகளை சொல்லிக் கொடுத்திருந்தார் முனிவர்.

ஒருநாள் சீடர்கள் விறகு சேகரிப்பதற்காக அடர்ந்த காட்டினுள் சென்றனர். வழியில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதன் உடலெங்கும் பலத்த காயங்கள் இருந்தன. அதைக் கண்ட முதல் சீடன், "இங்கு ஏதோ கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருக்கும்போல் தெரிகிறது. ஆகவே நாம் இந்த வழியாகச் செல்ல வேண்டாம். வேறு வழியாகச் செல்லலாம்’ என்று கூறினான். மற்ற சீடர்கள் அதை ஆமோதித்தனர். ஆனால் நான்காம் சீடன் அதை எதிர்த்தான். "ஏன், இந்த வழியில் சென்றால்தான் என்ன? குருதான் நமக்கு நிறைய மந்திரங்களை உபதேசித்துள்ளாரே! அவற்றைப் பயன்படுத்தி நம்மைக் காத்துக்கொள்ள முடியுமே! ஏன் இப்படி எல்லாவற்றிற்கும் பயந்து நடுங்குறீர்கள். வாருங்கள் என் பின்னோடு" என்று அவர்களைக் கட்டாயப்படுத்தினான்.



பிற சீடர்களும் வேறு வழியின்றி அவனைப் பின்தொடர்ந்தனர். சிறிது தொலைவு சென்றதும் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்ததை அவர்கள் கண்டனர். உடனே நான்காமவன், "நான் குரு சொல்லிக் கொடுத்த மந்திரத்தைப் பயன்படுத்தி இந்த எருமையை உயிர்ப்பிக்கப் போகிறேன்" என்றான். மற்ற சீடர்கள் அதனைத் தடுத்தனர். "அது ஆபத்தைத் தரும். உடன் திரும்பிப் போகலாம்" என்று கூறினர். ஆனால் நான்காம் சீடன் அதை ஏற்கவில்லை. "குரு சொல்லிக் கொடுத்த மந்திரம் வேலை செய்கிறதா இல்லையா என்பதை எப்படி நாம் தெரிந்து கொள்வது? நான் இதை உயிர்ப்பிக்கத்தான் போகிறேன்" என்று சொல்லி, இறந்த எருமையின் உடல் அருகே அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினான். அஞ்சிய மற்ற சீடர்கள் அருகில் உள்ள மரங்களில் ஏறிக் கொண்டனர்.

சற்று நேரத்தில் "ம்மா..." எனப் பெருங்குரலெடுத்து அலறியபடியே எருமை எழுந்தது. தன் அருகே இருந்த நான்காம் சீடனை ஆத்திரத்துடன் வேகமாகத் துரத்தத் தொடங்கியது.

சீடன் "காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.." என்று அலறியபடியே அங்கும் இங்கும் ஓடினான். மரத்தில் ஏற முயற்சித்தான். முடியவில்லை. எருமையைச் செயலற்றதாக்க மந்திரங்களை உச்சரிக்க நினைத்தான். ஆனால் பதட்டத்தில் அது நினைவுக்கு வரவில்லை. ஒன்றும் செய்ய இயலாமல் அங்கும் இங்கும் ஓடிய அவனை ஆக்ரோஷத்துடன் தாக்கிய எருமை, தனது கால்களால் மிதித்து, கொம்பால் குத்தித் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றது.

குற்றுயிராகக் கிடந்த அவனை குருவிடம் தூக்கிச் சென்றனர் சீடர்கள். "நம்மிடமுள்ள ஆற்றல்களை முட்டாள்தனமாகப் பயன்படுத்தினால் துன்பம்தான் வரும்" என்று கூறியபடி காயத்துக்கு மருந்து போட ஆரம்பித்தார் குரு.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com