ஜி.என்.பாலசுப்ரமணியம்
பல்லாண்டுக் காலம் குருகுல வாசம் செய்து, பயிற்சியாலும், அனுபவத்திறத்தாலும் இசையுலகின் ஜாம்பவான்களாய்ப் பலர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், முறையான குருகுலப் பயிற்சி பெறாமல், சுயம்புவாய், கேள்வி ஞானத்தால் மட்டுமே தன்னைப் புடம் போட்டுக்கொண்டு உயர்ந்த இசை விற்பன்னர் கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம் என்னும் ஜி.என். பாலசுப்ரமணியம். சங்கீத ரசிகரான ஜி.வி. நாராயணசாமி ஐயருக்கும், விசாலம் அம்மாளுக்கும் ஜனவரி 6, 1910 அன்று ஜி.என்.பி. பிறந்தார். நாராயணசாமி ஐயர் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் வசித்தபோது திருமருகல் நடேசப் பிள்ளை, வேணுகானம் சரப சாஸ்திரி, திருக்கோடிகாவல் கிருஷ்ணையர், திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் போன்ற பல சங்கீத வித்வான்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அந்த நட்பு, ஐயர் சென்னைக்குக் குடிபெயர்ந்த பின்னரும் தொடர்ந்தது.

சென்னை ஹிந்து உயநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாராயணசாமி ஐயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவின் செயலராகவும் பொறுப்பு வகித்தார். பின்னர் மியூசிக் அகாடமியின் 'experts commitee' உறுப்பினராகவும் பணியாற்றினார். அல்லிக்கேணியில் இருந்த அவரது வீட்டுக்கு அடிக்கடி பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பல்லடம் சஞ்சீவ ராவ், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை போன்றோர் வருவர். ஓய்வெடுப்பர், உரையாடுவர், பாடுவர். அடுத்த வீட்டில் வயலின் மேதை கரூர் சின்னச்சாமிப் பிள்ளை குடியிருந்தார். அங்கு பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், திருவையாறு சபேசய்யர் போன்றோர் வந்து செல்வர். இசைமயமான அந்தச் சூழலில் ஜி.என்.பி. வளர்ந்தார். வித்வான்களின் தொடர்பாலும், அவர்கள் பாடக் கேட்டு வளர்ந்த ஞானத்தாலும், ஜி.என்.பி.யால் இளவயதிலேயே பல கிருதிகளை அடையாளம் கண்டு, பாட முடிந்தது. குருகுலவாசம் செய்யாமலேயே சஹானா, செஞ்சுருட்டி என்று பல ராகங்களைக் கண்டறிந்து, பிழையின்றிப் பாட முடிந்தது. "ஒரு குருவிடம் சென்று முறையாகப் பயிலாவிடினும் எனக்கு ஸ்வரஞானம் சிறு வயதிலேயே கைகூடியது. இதற்குக் காரணம் பெரியோர்களின் ஆசியே" என்பார் ஜி.என்.பி.

பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜி.என்பி. இசை, நாடகப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றார். மகனுக்கு இருந்த இசைஞானம் கண்டு தந்தை மகிழ்ந்த போதும், ஜி.என்.பி. ஒரு இசைக் கலைஞராக வருவதை அவர் விரும்பவில்லை. இசைத்தொழில் நிச்சயமான வருமானம் இல்லாத தொழில் என்பதால் தன் மகன் பட்டதாரி வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார். அதேசமயம் மகன் இசை கற்கவும் உதவினார். மதுரை சுப்ரமணிய அய்யர், ஜி.என்.பி. வீட்டருகே குடியிருந்தார். அவரிடம் இசை கற்றுக்கொள்ள ஜி.என்.பி.யை அனுப்பினார். சில காலம் அவரிடம் இசை நுணுக்கங்களைப் பயின்றார். ஒருமுறை அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரியை ஜி.என்.பி. கேட்டார். அது முதல் அவரது தீவிர ரசிகரானார். அவரது பாணியையே பின்பற்றி, அவரையே மானசீக குருவாகக் கொண்டு பாடத் தொடங்கினார். ஜி.என்.பி.யின் குரல் வளத்தையும், ஆர்வத்தையும் புரிந்துகொண்ட அரியக்குடியும் அவரை ஊக்குவித்தார். இசைப்பயிற்சியோடு தந்தையின் ஆசையையும் நிறைவேற்றும் முகமாக இண்டர்மீடியட் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றார் ஜி.என்.பி. அப்போது அவருக்கு வயது பதினெட்டு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடக்கும் வசந்த உற்சவ விழாவோடு சங்கீத உற்சவமும் நடக்கும். பிரபலமான வித்வான்கள் பலர் வந்து பாடுவார்கள். 1928ம் ஆண்டு கச்சேரியில் பிரபல இசைமேதை முசிறி சுப்ரமண்ய ஐயர் பாடுவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால் அவரால் வர முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த விழாக் கமிட்டியினர், நேராக நாராயணசாமி ஐயரின் இல்லத்திற்குச் சென்று முசிறிக்குப் பதிலாக ஜி.என்.பி.யைப் பாட அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டனர். அவ்வளவு பெரிய வித்வான்களும் ரசிகர்களும் கூடிய சபையில் மகனைப் பாடச் செய்வது குறித்து நாராயணசாமி ஐயர் யோசித்தார். சுப்ரமண்ய ஐயர், ஏ.கே. ராமச்சந்திரன் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தவே, சம்மதித்தார். துடிப்பான இளைஞரான ஜி.என்.பி.யும் சற்று யோசித்தாலும் இறுதியில் ஒப்புக்கொண்டார். சுப்ரமண்ய ஐயர் வயலின் வாசிக்க, புதுக்கோட்டை ராஜாமணி மிருதங்கம் இசைக்க, ஜி.என். பாலசுப்ரமணியத்தின் முதல் கச்சேரி மயிலாப்பூர் கபாலி ஆலயத்தில் அரங்கேறியது. அதுதான் முதல் கச்சேரி என்பதே தெரியாத வண்ணம் பைரவி (சிந்தயமாம்), அடாணா (நீ இரங்காயெனில்), பந்துவராளி எனத் தேர்ந்தெடுத்த கீர்த்தனைகளை அநாயாசமாகப் பாடி சபையினரின் பாராட்டைப் பெற்றார். அந்த வசந்த உற்சவம் அவரது இசை வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வந்தது.

"ஜி.என்.பி.யின் இசை வாழ்வில் இக்கச்சேரி பலமான அஸ்திவாரமாக அமைந்தது" என்கிறார் ஜி.என்.பி.யின் நண்பரும், ரசிகருமான கே.எஸ்.முத்துராமன். "இனிய குரல் வளத்தாலும், இறைவன் அருளாலும் என் முதல் கச்சேரி திருப்திகரமாக நிறைவேறியது. மூன்று மணி நேரம் பாடிய என்னைப் பெரியோர் பாராட்டினர். உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியோடு புகழ்ந்தனர்" என்கிறார் அக்கச்சேரி பற்றி ஜி.என்.பி. அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக, திருமணக் கச்சேரி வாய்ப்புகள். அவரிடம் கச்சேரிக்குத் தேதி கேட்டு நிச்சயம் செய்துகொண்ட பின்பே, திருமணத்துக்கு நாள் குறித்தனர்.

ஓய்வு நேரத்தில் கச்சேரிகள் செய்து கொண்டே, பி.ஏ. (ஹானர்ஸ்-ஆங்கில இலக்கியம்) பட்டப் படிப்பில் சேர்ந்தார். அண்ணாமலைப் பல்கலையில் சில காலம் பயின்றபோது செட்டி நாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் முன் பாடும் வாய்ப்பு கிட்டியது. ஜி.என்.பி.யின் இசையில் மயங்கிய அரசர், ஒரு வெள்ளித்தட்டு நிறைய வெள்ளிக் காசுகளை வைத்துப் பரிசாக அளித்தார். ஆனால் தொடர்ந்து அங்கேயே படிக்க இயலாமல் உடல்நலிவுற்றதால், சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. படிப்பை நிறைவு செய்தார். தொடர்ந்து பல கச்சேரிகள் செய்ததோடு, தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் சக கலைஞர்களும், முன்னோடிகளுமான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், டி.என். ராஜரத்தினம் பிள்ளை போன்றோரின் கச்சேரிகளுக்கும் சென்று ரசிப்பது அவரது வழக்கமாக இருந்தது.

அழகான தோற்றமும், இனிய குரல் வளமும், ராஜ கம்பீரமும் கொண்ட ஜி.என்.பி.க்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 1934ல் பாமா விஜயம் படத்தில் அறிமுகமானார். நாரதராக நடித்த அவர் அடுத்து சதி அனுசூயா, வாசவதத்தா, ருக்மாங்கதா போன்ற படங்களிலும் நடித்தார். 1940ல் சதாசிவம் தயாரிப்பில் வெளியான 'சகுந்தலை' ஜி.என்.பி.யின் வாழ்வில் ஒரு திருப்புமுனையானது. பிருகாக்களுக்குப் பேர் போன ஜி.என்.பி., எம்.எஸ்.ஸூடன் இணைந்து பாடிய பிரேமையில்..., மன மோஹனாங்க அணங்கே போன்ற பாடல்கள் அந்தக் காலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. பாமரரும் அவரது பாடல்களை ரசிக்கத் திரைப்படங்கள் வழிவகுத்தன. அவரது வெகுஜன செல்வாக்கு அதிகரித்தது, ஆனால் அவர் திரைப்படங்களில் நடிப்பவர் என்பதாலும், குருகுல வாசம் செய்து இசை கற்றறியாதவர் என்பதாலும் பல முன்னணிக் கலைஞர்கள் கச்சேரிகளில் அவருக்குப் பக்கவாத்தியம் வாசிப்பதைத் தவிர்த்தனர். ஆனால் விரைவிலேயே நிலைமை மாறியது. தனது இசைஞானத்தால் மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன்பால் ஈர்த்து வெற்றி கண்டார் ஜி.என்.பி. மதுரை சுப்ரமணிய ஐயர், வரகூர் முத்துசாமி ஐயர், மதுரை வேணு நாயக்கர் போன்றோர் மட்டுமே பக்கம் வாசித்துக் கொண்டிருந்த கச்சேரிகளில், பின்னால் மைசூர் சௌடய்யா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மாயவரம் கோவிந்தராஜப் பிள்ளை, பழனி சுப்புடு, பாலக்காடு மணி போன்ற சங்கீத மேதைகள் வாசித்தனர். அதிலும் சௌடய்யாவும், ராஜமாணிக்கம் பிள்ளையும் ஜி.என்.பி.யின் குரலைக் கேட்டு மனம் உருகினர். "மகா வைத்தியநாத சிவனுக்குப் பிறகு அத்தனை இனிய குரலை ஜி.என்.பி. ஒருவரிடம் மட்டுமே கேட்க முடிகிறது" என்று பாராட்டினார் அக்காலத்தின் புகழ்பெற்ற சங்கீத மேதை தஞ்சை வைத்தியநாத ஐயர்.

பட்டு வேட்டி, பட்டு ஜிப்பா, பட்டு அங்கவஸ்திரம், நெற்றியில் செந்தூரப் பொட்டு, ஜவ்வாது வாசம், காதில் பளபளக்கும் வைரக் கடுக்கன் என அழகான கம்பீரத் தோற்றத்துடன் ஜி.என்.பி. மேடைக்கு வந்து அமர்ந்தாலே சபை நிசப்தமாகி விடும். மற்ற இசைக் கலைஞர்களுக்கு இல்லாத அளவிற்கு, கூட்டம் கூட்டமாய் வந்து மக்கள் அவரது கச்சேரிகளை ரசித்தனர். அவர் கச்சேரியில் துக்கடாப் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 'கந்தர்வகான சிரோன்மணி' என்று போற்றப்பட்ட ஜி.என்.பி.யின் தனித்துவமான குரலுக்குச் சங்கீத விற்பன்னர்களும் தீவிர ரசிகர்களாக இருந்தனர். மதுரை மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் ஜி.என்.பி., துக்கடாக்கள் பாடும் அழகில் மயங்கி, திரும்பப் பாடுமாறு கூறிக் கேட்டு ரசித்தனர். தோடி வாசிப்பதில் புகழ்பெற்ற டி.என். ராஜரத்தினம் பிள்ளை, மைசூர் தசரா விழாவில், ஜி.என்.பி.யின் தோடி ஆலாபனையைக் கேட்டு வியந்து, பாராட்டி, தான் அணிந்திருந்த மோதிரத்தை அவர் விரலில் போட்டுச் சிறப்புச் செய்தார். அந்த அளவுக்குத் தோடியை மிகச் சிறப்பாகக் கையாண்டிருந்தார் ஜி.என்.பி

ஜி.என்.பி. அடிக்கடி கச்சேரிகளில் பாடும் ராகங்கள் தோடியும் காம்போதியும். ஸ்ருதி பேதம் செய்வதில் அவருக்கு இணை யாருமில்லை. அவரது கச்சேரிகளில் ராகம், தானம், பல்லவிக்கு முக்கிய இடமுண்டு. அங்க சேஷ்டைகள் எதுவுமில்லாமல், ஆற்றொழுக்காக அமர்ந்து பாடுவதே அவரது பாணி. இதை அரியக்குடியிடமிருந்து அவர் பின்பற்றினார். கச்சேரி பத்ததியை அரியக்குடி ஏற்படுத்த, அதற்கு மெருகூட்டி, பாமரனும் ரசிக்கும் அளவுக்கு எளிமையாக்கியவர் ஜி.என்.பி.தான். தேவையற்ற தலையாட்டல்கள், உறுமல்கள், சேஷ்டைகள் அவர் கச்சேரியில் இருக்காது. ஒரே ராகத்தின் ஆலாபனையை கச்சேரிக்குக் கச்சேரி மாற்றியோ அல்லது கீர்த்தனைக்குக் கீர்த்தனை வேறு வேறாகவோ அவர் பாடுவார். ஆனால் அதில் கேட்பவருக்கு ராகக் குழப்பங்கள் எதுவும் இருக்காது.

'தாமதமேன் சுவாமி', 'ப்ரோசேவா', 'மா ரமணன்', 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே', 'கண்ணனே என் கணவன்', 'ஜெயதி ஜெயதி பாரதமாதா', 'ராதா சமேத கிருஷ்ணா', 'திக்குத் தெரியாத காட்டில்...' போன்ற பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் ஜி.என்.பி.யின் பங்கு மகத்தானது. அழகாகப் பாடுவதோடு சிறப்பாகப் பாடல் இயற்றும் திறனும் அவருக்கு இருந்தது. பாடகர், பாடலாசிரியர், இசையாசிரியர் என்று பல துறைகளிலும் அவர் சிறந்து விளங்கினார். சதாசிவ பிரம்மேந்திரரின் 'ப்ரூஹி முகுந்தேதி' பாடலுக்கு முதன்முதலில் மெட்டமைத்தவர் ஜி.என்.பி.தான். அவர் அமைத்த மெட்டுக்களும் சங்கதிகளுமே இன்றும் பல கச்சேரிகளில் பாடப்படுகின்றன, பின்பற்றப்படுகின்றன என்பதே அவரது பெருமைக்குச் சான்று.

நாடெங்கும் பயணம் செய்து கச்சேரிகள் செய்த ஜி.என்.பி.யை, பல சமஸ்தான அரசர்களும் போற்றி ஆதரித்தனர். திருவிதாங்கூர், எட்டயபுரம் சமஸ்தானங்களின் ஆஸ்தான வித்வானாக அவர் விளங்கினார். ஒருமுறை, மைசூர் அரண்மனை தர்பாரில் நடந்த கச்சேரியில், தான் எழுதிய 'ப்ரோசேவா' கிருதியை ஜி.என்.பி. அழகாகப் பாடக் கேட்ட மைசூர் வாசுதேவாச்சார் கண்களில் கண்ணீர் பெருக, 'இத்தனை அழகான இப்பாடலை நானா எழுதினேன்?" என்று ஆச்சரியப்பட்டாராம்.

ஹிந்துஸ்தானிப் பாடகர் படே குலாம் அலிகான் ஜி.என்.பி.யின் மீது தனிமதிப்பு வைத்திருந்தார். ஆந்தோளிகா ராகத்தை, அதே நேர்த்தியோடு பாட ஜி.என்.பி.யிடமிருந்து கற்ற படே குலாம், டில்லி, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களில் அதைப் பாடி, "இதை நான் ஜி.என்.பி.யிடமிருந்து கற்றுக் கொண்டபடியே பாடுகிறேன்" என்று அறிவிப்பு செய்து, ஜி.என்.பி.க்கு கௌரவம் செய்தார். ஒருமுறை மயிலை ரசிகரஞ்சனி சபாவில் படே குலாம் அலிகானின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஜி.என்.பி. முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார். படே குலாமின் "க்யா க்ரூன் ஸஜனா ஆயே.." என்ற பாடலைத் தன்னை மறந்து ரசித்துக் கேட்டவர், அந்தப் பாடல் முடிந்ததும், நேராக மேடைக்குச் சென்று படே குலாம் அலிகானின் காலில் விழுந்து வணங்கினார். ஆனால் அது ரசிகர்களாலும், மற்றவர்களாலும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜி.என்.பி. எப்படி அவர் காலில் போய் விழலாம் என்று பல சர்ச்சைகளையும் தோற்றுவித்தது. ஆனால், "நீங்கள் ஏன் இதற்கெல்லாம் கவலைப்படுகிறீர்கள், நான் வணங்கியது மிகப்பெரிய இசைத் திறனை..." என்று கூறி அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜி.என்.பி.

அகில இந்திய வானொலியில் இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றிய ஜி.என்.பி., பல இசைக் கலைஞர்களுடன் இணைந்தும், தனியாகவும் பாடி, பல இசைத் தட்டுக்களை அளித்திருக்கிறார். திருவனந்தபுரம் ஸ்வாதித் திருநாள் இசைக் கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்திருக்கிறார். 27 ஆண்டுகள் தொடர்ந்து அகாடமியில் பாடிய பெருமை உடைய அவருக்கு, 1958-ஆம் வருடம் மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

எம்.எல். வசந்தகுமாரி, எல். கிருஷ்ணன், டி.ஆர். பாலசுப்ரமணியம், திருச்சூர் ராமசந்திரன், தஞ்சாவூர் எஸ், கல்யாணராமன் போன்ற திறமையும், ஞானமும் கொண்ட சிஷ்ய பரம்பையினரை உருவாக்கி அளித்தார் ஜி.என்.பி. மே, 1, 1975 அன்று, ஐம்பத்தைந்தாம் வயதில் காலமானார். இன்றும் அவரது வழிவந்த சுதாரகுநாதன், சாருமதி ராமச்சந்திரன், யோகம் சந்தானம், டி. பிரபாவதி போன்ற சிஷ்ய பரமபரையினர் தங்கள் பாடல்கள் மூலம் அவரது பெருமையை உலகுக்குப் பறை சாற்றி வருகின்றனர். உலகெங்கிலுமுள்ள அவரது இசை ரசிகர்களால் அவரது நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

(நன்றி: 'இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்', சுரா; 'இணையற்ற சாதனையாளர்கள்', முக்தா சீனிவாசன்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com