தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 12)
பொருளாதாரச் சூழ்நிலை சற்றே முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளான தகவல் பாலம் மற்றும் பாதுகாப்புப் பாலம் பற்றி விவரங்களைக் கண்டோம். சென்ற பகுதியில் கம்பிநீக்க நுட்பங்களைப் பற்றிப் பார்க்க ஆரம்பித்து கம்பியற்ற அண்மைத் தொடர்பைப் பற்றி விவரித்தோம். கம்பிநீக்கத் துறையிலுள்ள வாய்ப்புக்களைப் பற்றி மேலே காணலாம் வாருங்கள் ...

*****


கம்பியற்ற அண்மைத் தொடர்பு பற்றிக் கூறினீர்கள்; கம்பிநீக்கத் துறையில் இன்னும் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன, விவரியுங்களேன்?

முன்பகுதியில் கூறியபடி, கம்பிநீக்கத் துறையை நான்காகப் பிரிக்கலாம்:
(1) அண்மைத் தொடர்பு - wifi
(2) தொலைத்தொடர்பு - mobile Wireless
(3) சாதனப் பிணைப்பு - Wirelss device connectivity
(4) மின்சக்தி அனுப்புதல் - Wileless power transmission

அண்மைத் தொடர்பைப் பற்றிச் சென்ற இதழில் அலசியாயிற்று! அடுத்து இப்போது, கம்பியற்ற தொலைத்தொடர்புத் துறையில் உள்ள வாய்ப்புக்களைப் பார்க்கலாம். இத்துறையில் கைத்தொலைபேசி பற்றியும், வீட்டுக்கு கம்பியுள்ள மின்வலைத் தொடர்புக்குப் பதிலாக, கம்பியற்ற மின்வலைத் தொடர்பு கொள்வதற்கான நுட்பங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

கைபேசி உபதுறையைப் பற்றி விவரிக்கையில், பேச்சைப் பற்றிக் காண்பது அனாவசியம், அது மிகப் பழைய துறையாகிவிட்டது! அதை விடுங்கள், ஏன் - கைபேசியின் மூலம் அதிவேக மின்வலைத் தொடர்பு கொள்ளும் நுட்பங்களில் கூடச் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், அதை விட முக்கியத்துவம் வாய்ந்த, பரபரப்பளித்துக் கொண்டிருக்கும் நுட்பம் ஒன்று உள்ளது. அதுதான் இடம்!

இடமா, இது என்ன மடத்தனம் என்கிறீர்களா? ரியல் எஸ்டேட் என்னும் நிலவணிகத் துறையில்
சொல்வார்கள் - ஒரு வீட்டின் விலையை நிர்ணயிக்க மிக முக்கியமான அம்சங்கள் மூன்று: முதலாவது இடம், இரண்டாவது இடம், மூன்றாவதும் இடம்தான் என்பார்கள் (location, location, location)! அதாவது, வீடு எந்த இடத்தில் உள்ளதோ அதுதான் முக்கியம், மீதியெல்லாம் அந்த அளவுக்கு முக்கியமில்லை என்பது. அதுபோல் கைபேசித் துறைக்கும் இடத்தின் முக்கியத்தும் வானளாவ உயர்ந்து வருகிறது. வானத்திலேயே கூடத்தான்! எந்த விமானத்தில் பறந்து கொண்டு மின்வலை பார்க்கிறீர்கள் என்று கவனித்துச் செயல்பட ஆரம்பித்துள்ளனர்! பயனர் இருக்கும் இடத்தை வைத்துத் தரும் சேவைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி சற்றுப் பிறகு மேற்கொண்டு விவரிப்போம்.

அதற்கு முன் கைபேசி தொலைத்தொடர்பில் உள்ள மற்ற வாய்ப்புக்கள் சில:
* வழக்கம்போல் இன்னும் வேகம் அதிகரிப்பதற்கான வலைச் சாதனங்களை உருவாக்குதல்
* பயனர்கள் நகர்ப்படங்களைப் (video) பார்க்கத் தேவையான, அதிவேகமாக வளர்ந்து வரும் அளவை விட ரேடியோ அலைவரிசை அளவு (spectrum) குறைவாக இருப்பதால், அதை எப்படி சமாளித்து அத்தனை பயனர்களுக்கும் பலன் தருவது என்பதற்கான நகர்ப்பட நுட்பங்கள் பல ஆராயப்பட்டு வருகின்றன.
* அதே மாதிரி, சேவை அளிப்போரின் தொலைத்தொடர்பு வலையை நகர்ப்படத் தகவல் ஓடை (streams) வெள்ளத்தில் மூழ்காமல் எப்படி, அவ்வலையின் எல்லையிலிருந்தே வினியோகிப்பது (edge distribution) என்ற நுட்பங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவை போன்ற இன்னும் பல அடிப்படை வலை நுட்பங்களுக்கு வாய்ப்புக்கள் சில இருப்பினும், இத்துறையில் தற்போது மிக அதிகப் பரபரப்பளிப்பது பயனர்களுக்கான பலதரப்பட்ட சேவைகளை உருவாக்கும் வாய்ப்புகள்தாம். இத்தகைய வாய்ப்புக்கள் நகர்வலையை (mobile network) மேம்படுத்தும் வாய்ப்புக்களை விட இன்னும் பல மடங்கு அதிகப் பலனளிக்கக் கூடிய, ஆனால் தோல்வி அபாயம் பல மடங்கு அதிகமான வாய்ப்புக்கள். தரைவலையில் (land network) பயனர்களுக்குச் சேவையளித்துப் பெரும் வெற்றி பெற்ற கூகிள், ஃபேஸ்புக், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் பல மில்லியன் பயனர்கள் பெற்று வேகமாக வளர்ந்தவை ஆதலால், பல பில்லியன் டாலர்கள் மதிப்புப் பெற்றன. அதேபோல், நகர்வலைத் துறையிலும் பெருமளவு பயனர்களைப் பெரும் சேவை நிறுவனங்கள் பெரும் வெற்றி பெறலாம். ஆனால், அதற்குப் போட்டி மிகவும் அதிகம். தரைவலை நிறுவனங்களும் தங்கள் சாம்ராஜ்யங்களை
நகர்வலையில் பரப்ப முயற்சிக்கன்றன. மேலும் ஆப்பிளின் iOS மற்றும் கூகிளின் அண்ட்ராய்ட் போன்ற பயன்பாட்டு மேடைகள் கைபேசிகளில் மென்பொருட்களை தருவதையும், வலைமேகக் கணினிச் சேவைகளை உருவாக்குவதையும் மிக எளிதாக்கியுள்ளன. அதனால் பல்லாயிரக் கணக்கானவர்கள் இத்துறையில் குதித்துள்ளனர். இருந்தாலும் இத்துறை மிகச் சுவாரசியமானது, பெரும் வெற்றிக்கான வாய்ப்பளிக்கக் கூடியது என்பதால் மிக பரபரப்பான மூலதனத் துறையாக உள்ளது.

இதில் மிக முக்கியமானது பயனர்கள் உள்ள இடத்துக்குச் சரியான தகவல்களையும், மற்றச் சேவைகளையும், ஏன் மற்ற பயனர்களையும் கூட பின்னிப் புனைந்து (link and integrate) அளிக்கும் சேவைகள். இடப்பொருத்த சேவைகள் பல வகைப்படும்: நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள கடைகளில் எந்தப்
பொருளுக்கு, என்னவகை விசேஷத் தள்ளுபடி உள்ளது என்று அறிவித்தல்; அதுவும் உங்களுக்கு மட்டுமே பிடித்த அல்லது தேவையான பொருளின் பட்டியலுக்குப் பொருத்தி தேர்ந்தெடுத்து அறிவித்தல்; உங்கள் சமூகவலை நண்பர்கள் உங்களுக்கு அருகிலுள்ளார்களா என்று காட்டுதல்; உங்கள் குழந்தைகள் தங்கள் ஸெல்பேசிகளுடன் எங்குத் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணித்தல் - இப்படிப் பல சேவைகள் தினமும் உருவாகிக் கொண்டுள்ளன! பயனர், இடம், சமூகவலை, வணிகம் இவை நான்கையும் பிணைத்துப் பார்த்தால் பல வாய்ப்புக்கள் தோன்றுகின்றன.

எனக்குத் தோன்றுவதென்னவென்றால், இத்தகைய சேவைகளை உருவாக்குவது நாளுக்கு நாள் எளிதாகிக் கொண்டே போகிறது. எனவே வாய்ப்பு உள்ளதா என்பதைவிட எந்த வாய்ப்பு வெற்றி பெறக்கூடியது என்பதைக் கணிப்பதுதான் இன்னும் பெரிய பிரச்சனையாகி வருகிறது! அதைப்பற்றி யோசித்துச் செயல் படுவது நலம்!

இத்தகைய, அறிவுப்பேசி (smart phones) சம்பந்தப்பட்ட நுட்பங்களும் வாய்ப்புக்களும் இன்னும் பல உள்ளன. அவற்றைப் பற்றியும், மற்ற கம்பியில்லா நுட்பங்களையும் பற்றி அடுத்த பகுதியில் தொடர்வோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com