சிக்கில் குஞ்சுமணி
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப் பயில ஆரம்பித்து, பின்னர் புல்லாங்குழல் கற்றவர்கள். அதில் தனிப் பாணியைக் கையாண்டு வரவேற்பைப் பெற்றனர். தந்தை நடேச ஐயரிடம் இசை கற்கத் தொடங்கிய குஞ்சுமணி, மேலே ஆழியூர் நாராயணஸ்வாமி ஐயரிடம் பயிற்சி பெற்றார். ஒனபதாம் வயதில் அரங்கேற்றம். தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வந்தன. சகோதரி நீலாவும் உடன் இணைந்துகொள்ள, சிக்கல் சிஸ்டர்ஸ் எனப் பிரபலமாயினர். இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா உட்படப் பல வெளிநாடுகளிலும் இவர்கள் கச்சேரி செய்துள்ளனர். குறிப்பாக, சகோதரி நீலாவின் மகள் மாலா சந்திரசேகருடன் இணைந்து, மூன்று புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகளை இவர் அளித்தது பலராலும் பாராட்டப்பட்டது. பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி, சங்கீத சூடாமணி விருது உட்படப் பல்வேறு விருதுகளைச் சிக்கில் குஞ்சுமணி பெற்றுள்ளார். பிரபல இளம் பாடகர் சிக்கில் குருசரண் இவர்களது பேரன்.



© TamilOnline.com