டொமேடிலோ (Tomatillo) காய் வெங்காயத்தோல் போன்று மெல்லிய இலையால் மூடப்பட்டு, உள்ளே தக்காளிபோன்ற காய் இருக்கும். நிறைய விடமின்கள், தாது உப்புக்கள் கொண்ட டொமேடில்லோவில் குறிப்பாக சி விடமின், நிறைய கால்சியம், பொடாசியம், மேங்கனீஸ் போன்ற கனிமங்கள் உள்ளன. பச்சைத் தக்காளி என்று அழைக்கப்படும் இந்தக் காய் மெக்ஸிகோ சமையலில் (சால்ஸா, சூப், சாலடுகள் போன்றவற்றில்) அதிகம் பயன்படுத்தப் படுகிறது. சமைக்கும் முன் இந்தக் காயின் மேல் இருக்கும் மெல்லிய உறையை அகற்றிவிட வேண்டும். இயன்றவரை பசுமையான, புதிதாகப் பறிக்கப்பட்ட காயையே பயன்படுத்த வேண்டும். அதாவது மேலுறை உலர்ந்து, சுருங்கி இருக்கக் கூடாது. பச்சென்றிருக்கும் காயின் உறையை நீக்கி, நன்றாகக் கழுவி, துடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரம் வரைகூடக் கெடாமல் இருக்கும். ஒருவிதமான புளிப்புச் சுவை கொண்ட இந்தக் காயை உபயோகித்துப் பலவகைப் பண்டங்கள் செய்யலாம்.
டோமோடிலோ புளிக்காய்ச்சல்
தேவையான பொருட்கள்: பொடி செய்ய: கொத்துமல்லி விதை - 2 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி மிளகாய்வற்றல் - 8 அல்லது 10 சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: ஒரு கடாயில் மேற்கண்ட பொருட்களைப் போட்டு இரண்டு தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றிப் பொன்னிறமாக வறுத்து, நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.
புளிக்காய்ச்சல் செய்ய: டொமேடிலோ (பொடியாக நறுக்கியது) -10 அல்லது 12 கடுகு -2 தேக்கரண்டி மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் -1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் -4 மேசைக்கரண்டி சாம்பார் பொடி -2 தேக்கரண்டி கருவேப்பிலை -6 இலைகள் நிலக்கடலை வறுத்தது -2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை -1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் பாதி எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள் போடவும். கடுகு வெடித்தபின் அதில் டொமேடிலோ காய்களைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியபின் உப்பு, சாம்பார்பொடி சேர்த்து இரண்டு கிண்ணம் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்றாக வெந்தபின் பொடிசெய்த கொத்துமல்லி, கடலைப்பருப்பு பொடியுடன் நாட்டுச் சர்க்கரை (பிரவுன் ஷுகர்) சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கொதிக்கவிட்டுக் கிளறவும். மீதி சமையல் எண்ணெயை ஊற்றி, கருவேப்பிலை போட்டுச் சுண்டக் காய்ச்சி எடுக்கவும்.
இந்த டொமேடிலோ புளிக்காய்ச்சலை வடித்த சாதத்தில் கலந்து வறுத்த வேர்க்கடலையை மேலாகப் போடவும். ஆஹா! ருசியோ ருசி. புளி சேராத இந்தப் புளிக்காய்ச்சலை பாட்டிலில் போட்டுவைத்து, தேவையானபோது உபயோகித்துக் கொள்ளலாம்.
பிரேமா நாராயணன், கேன்டன், மிச்சிகன் |