மரகதத் தீவுகள்
பரடாங் துறையை அடைந்து படகில் கழியைக் கடந்து முக்கியத் தீவை அடைந்தோம். அங்கிருந்து மறுபடியும் பேருந்தில் மூன்று மணிநேரப் பயணம். வழியில் ஜராவச் சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். உடலில் வெறும் எலும்பினால் ஆன மணிகள், இடுப்பில் காய்ந்த புல்லினால் ஆன சிறு பாவாடை. காட்டுப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கத் தங்கள் கரிய உடலில் வெள்ளை நிற மண்ணைத் தடவி இருந்தனர்.

வழிநெடுக சுனாமியின் பாதிப்பைப் பார்க்க முடிந்தது. வயல்களில் உப்புநீர் தேக்கம். சுனாமிக்கு முன்பு இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் அந்தமான் என்று என் மனம் அசைபோட்டது. மழை நிற்கவேயில்லை. பேருந்தின் உள்ளேயும்.

அடுத்த நாள் போர்ட்பிளேயரில் இருந்து கடலுக்குள் அரைமணி தூரத்தில் இருந்த ராஸ் தீவுக்கு சென்றோம். ஆங்கிலேயர்கள் போர்ட்பிளேயரில் சிறை அமைத்தபோது குடும்பத்துடன் அவர்கள் வசிக்க அமைக்கப்பட்ட தீவு இது.

பாழடைந்த கட்டிடங்கள். ஆலமர விழுது அனைத்துக் கட்டிடங்களையும் கவ்விக் கொண்டிருந்தது. அழகிய கடற்கரை ஓரத்தில் தென்னை மரங்கள், சில வளைந்து படுத்துக் கொண்டிருந்தன. வீடுகள், கடை, சர்ச், அதிகாரிகள் தங்கும் விடுதி, பேக்கரி, ஜெனரலின் பெரிய மாளிகை, பள்ளி, கான்டீன், செயற்கை நீச்சல் குளம், நீர் சுத்திகரிக்கும் தொழிற்சாலை, விளையாட்டுத் திடல் என்று அனைத்து வசதிகளுடன் அங்கு வாழ்ந்தனர். ஆங்கிலேயர் 1943-ம் ஆண்டு இவ்விடத்தைக் காலி செய்து விட்டனர். இடையில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர் இங்கு குடியேறினர். இன்னும் அவர்கள் அமைத்த நிலவறைகள் இங்குள்ளன. அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கு வந்துள்ளார். பழைய புகைப்படங்களுடன் ஒரு சிறு கண்காட்சி இங்குண்டு.

கடலின் ஆரவாரம். காதுகளில் கேட்க ராணுவம் அமைத்த பாதையில் ஏறித் தீவின் அழகை ரசித்தோம். ஆங்காங்கே மான்கள், மயில்கள், முயல்கள். சூரியஒளி கடல்நீரை ஜொலிக்க வைத்தது. படகில் மறுபடியும் ஏறும்போது நுங்கு மீன்கள் (jelly fish) கடலில் மிதப்பதைப் பார்த்தோம். அரை நாளை அமைதியாக இத்தீவில் கடத்திவிட்டு மறுபடியும் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையைக் காணச் சென்றோம்.

கட்டிடத்தின் அழகு பிரமிப்பூட்டியது. அழகிய தோற்றம். மத்தியில் ஒரு கடிகார கோபுரம். அதிலிருந்து இரண்டு மாடிக் கட்டிடங்கள் கதிர்கள் போல நீண்டு உள்ளன. ஏழாக இருந்தது, யுத்தத்தில் நான்கு சேதம் அடைந்துவிட மூன்று எஞ்சியுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் 40 செல்கள். விடுதலைப் போராளிகளைத் தன்னந்தனியே அடைக்கத் தனி அறைகள். உயரத்தில் ஒரு ஜன்னல், இரும்பு அழிக்கதவு, கனமான தாழ்ப்பாள், வெளியே ரோந்து செல்ல நீண்ட நடைகள் கொண்டவை இவை. தப்பிக்க வழியே இல்லை. கட்டிடங்களுக்கு இடையே கொட்டகைகள்.

செக்கு இழுக்க மற்றும் கடின வேலைகள் செய்ய, கைதிகளைக் கட்டிச் சவுக்கால் அடிக்க ஒரு மரப்பலகை வேறு. சிறையையும் ராஸ் தீவையும் உருவாக்கியவர்களே இந்தியக் கைதிகள்தாம். அனைத்து விடுதலை போராளிகளின் பேர்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன. இவர்களில் முக்கியமானவர் வீர சாவர்க்கர். அலுவலகக் கட்டிடம் காட்சிசாலையாக மாற்றப்பட்டுள்ளது. புகைப்படங்கள் விடுதலை இயக்கத்தைக் கண்முன் கொண்டு நிறுத்தின. வீர சாவர்க்கரின் வீரமுயற்சிகள், நேதாஜியின் அந்தமான் பயணம், சொற்பொழிவுகள், ஜெயிலில் மரத்தால் ஆன மாடல், கைதிகளின் உடைகள், புகைப்படங்கள், அவர்களை கட்டிய சங்கிலிகள், எண்ணெய்ச் செக்கு என்று பற்பல பொருட் களும் காட்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன.

ஆறு மணியளவில் தொடங்கும் ஒலிஒளி காட்சி மிக அற்புதமாகப் படைக்கப் பட்டுள்ளது. அயல்நாட்டவர் வருவதில்லை என்பதால் ஹிந்தியில் மட்டும்தான் காட்சிகள் நடைபெறுகின்றன. சிறையில் பல வருடங்களாக இருக்கும் மரம் அங்கு நடந்த அட்டூழியங்களைச் சொல்வது போல் கதையமைப்பு. எவ்வளவு துன்பத்துக்கு ஆளாயினர் நம் முன்னோர்! செல்லுலார் சிறையில் தண்டனை தான் மிகப் பெரிய தண்டனை. ஏன் என்று இப்போது விளங்கியது. கனத்த இதயத்துடன் அந்தமான் சிறையில் இருந்து வெளிப்பட்டோம்.

அடுத்த நாள் நாங்கள் சென்ற இடம் நார்த் பே. இங்குதான் அந்தமானின் கலங்கரை விளக்கம் உள்ளது. அழகிய மாமரங்கள் நிறைந்த தீவு. இங்கு முக்கிய அம்சம் 'ஸ்னார்கலிங்'. மோட்டார் படகில் முப்பது சகாகளுடன் நார்த் பேக்கு பயணமானோம். தீவின் அருகே சென்றதும் பத்துப் பத்து பேராக கண்ணாடித் தரை கொண்ட சிறு படகில் மாற்றினர். அவற்றில் அமர்ந்தவாறு கடலின் அடிபகுதியைத் துல்லியமாக காண முடிந்தது. அதிக ஆழம் இல்லை. பல வகையான பவளப் பாறைகள், மீன்கள் என்று இவ்வுலகத்தைக் கண்டு களித்தோம். கரையை அடைந்த நாங்கள் மண்ணிற்கு பதிலாகப் பவளம் இறைக்கப்பட்டிருந்தது கண்டு அதிசயித்தோம்.

ஸ்னார்கிலிங் மாஸ்க் அணிந்துகொண்டு மிதந்தவாறு இன்னும் ஆழமான கடல் பகுதிக்குப் போனோம். தலையை நீரின் உள் ஆழ்த்தி கடல் உலகை பார்க்க முடியும். மீன் கூட்டங்கள், வண்ணப் பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அனிமோன்கள், நீண்ட பெரிய மீன்கள் என்று ஆழ்நீர் டிஸ்கவரி சானலைப் பார்த்தோம். சூரிய வெளிச்சம் பளிச்சென்று கடலின் தரையில் இருந்து பிரதிபலித்தது. கதிர்களின் ஊடே உயிரினங்கள் அமைதியாக நீந்திக் கொண்டிருந்தன.

அங்கிருந்து வலுக்கட்டாயமாக எங்களை இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. படகோட்டிகளுக்குச் சுற்றி எங்கும் பச்சை அல்லது நீல நிறக் கடலின் நீர் மழைத்தூறல்போல அவ்வப்போது விசிறியது. போர்ட்பிளேயர் திரும்பிய நாங்கள் கடைக்குச் சென்று சங்கு கிளிஞ்சல் பொம்மைகள், மூங்கில் வீட்டு அலங்கரிப்பு சாமான்கள் முதலியன வாங்கினோம். என்னை மிகவும் கவர்ந்தவை தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட ஆபரணங்கள். மேலும் மரக் கம்மல்கள், கிளிஞ்சல் செயின்கள், கம்மல்கள் என்று ஏகப்பட்ட சாமான்கள். உணவு, வண்டி வாடகை, தங்குமரை, நுழைவு சீட்டுகள் போல இவையும் மலிவு விலையில் கிடைத்தன.

இன்னும் ஒரே ஒரு நாள் மீதம் உள்ள நிலையில் சற்று அருகிலேயே இருந்த கார்பைன்ஸ் கோல் என்ற விடுதிகள் நிறைந்த கடற்கரைக்குச் சென்றோம். சுனாமிக்கு முன்பு கரை மிக நீளமாக இருந்ததாம். இப்போது கரையோரச் சாலைவரை நீர் இருந்ததால் கரை குறைந்துவிட்டது. எனினும் தென்னை மரங்கள், ஜப்பானிய நிலவறைகள் இடையிடையே இருந்தன. தோட்டங்களில் பற்பல வகையான பட்டாம்பூச்சிகள் பூக்களை மொய்த்தவண்ணம் இருந்தன. சுனாமியால் தகர்க்கப்பட்ட சுவர்கள் ஆறு மாதங்கள் ஆகியும் கட்டப்படவில்லை.

ஒருபுறம் நீலக் கடல் விரிந்திருக்க மறுபுறம் பசுமையான உயர்ந்த நிலப்பரப்பு. மணலில் பிள்ளைகள் விளையாட அமைதியாக நாங்கள் நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருந்தோம். அடுத்து அறிவியல் சென்டருக்கு சென்றோம். புயல், சுனாமி, எரிமலை, தீவுகளின் பிறப்பு, கடல்களின் அந்தரங்கம் என்று ஏகப்பட்ட விளக்கம் அளிக்கும் வேலை செய்யும் மாடல்கள். எதிர்வினை புரியும் ஒலிஒளி ஊடகங்கள் (Interactive audio-visual media) அறிவியலின் அனைத்துத் துறையையும் உள்ளடக்கி இருந்தது கோளரங்கம் (Planetorium). விண்வெளிக் கூடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் (சுனாமிக்கு முன்/பின்), நாமே செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகள் ஆகியவை எங்களை மிகவும் கவர்ந்தன. இவ்வளவு அழகான அறிவியல் மையத்தை வேறெங்கும் பார்த்தது இல்லை என்றே சொல்லலாம்.

வாசலுக்கு எதிரே கடலில் பெரிய கப்பல் மாலைச் சூரிய ஒளியில் தகதகவென்று வெள்ளியைப் போல மின்னியது. இவ்வளவு அழகையும் எந்த இயற்கைச் சீற்றமும் மேலும் சேதப்படுத்தகூடாது என்று அங்கு இருந்த பெரிய பைரவர் ஆலயத்தில் வேண்டிக் கொண்டு எங்கள் அறைக்குத் திரும்பினோம்.

தினமும் காலையில் கடலில் துறை முகத்துக்கு வரும் கப்பல்களைக் காண்போம். மாலையில் அவற்றின் விளக்குகளைக் கண்டு களித்தோம். நார்த் பேயிலிருந்து வரும் கலங்கரை விளக்கின் வெளிச்சம், மழையின் ஆராவாரம் (கல்நார் அல்லது தகரக் கூரைகளில் இருந்து எழும்) கடலலைகளின் அலைச்சல் என்று இயற்கையின் ஓசைகளுக்கும் காட்சி களுக்கும் பழகிவிட்ட எங்கள் காதுகளையும், கண்களையும் மறுபடியும் நகர வாழ்க்கைக் குத் திரும்பிச் செல்ல ஆயத்தமாக்கினோம்.

நேரத் தட்டுப்பாட்டால் முக்கியமான இடங்களுக்கு மட்டும்தான் நாங்கள் சென்றோம். மேலும் வைப்பர் தீவு, காந்தி பார்க், சிடியா தாப்பி, நீல்தீவு, ஹாவ்லாக் தீவு என்று நிறைய தீவுகளுக்குப் படகு சவாரி இருந்தது. ஹெலிகாப்டர் சவாரி இந்தியாவின் தெற்கு மூலையான இந்திரா பாயிண்ட் வரை உண்டு. ஜாலி பாய் போன்ற பவளப்பாறைத் தீவுகள் முற்றிலும் சுனாமியால் அழிந்துவிட்டன. நிகோபார் தீவுகளுக்கும் ஏகப்பட்ட சேதம்.

அடுத்த நாள் காலை பச்சை பசேலென்ற அந்தமான் தீவில் இருந்து விமானம் கிளம்பியபோது இவற்றை ஏன் 'மரகத தீவுகள்' என்று அழைக்கிறார்கள் என்பது விளங்கியது.

முற்றும்

ஷமிலா

© TamilOnline.com