தென்றல் பேசுகிறது
இந்தப் பனிக்காலம் நீண்டநாள் நினைவில் நிற்கும் என்று தோன்றுகிறது. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த அரசு செய்யும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி விட்டதைப் பார்க்க முடிகிறது. வேலை வாய்ப்பு அதிகரிப்பு, மக்கள் முகத்தில் நம்பிக்கையின் கீற்று, நுகர்வோர் கையில் அதிகப் பணம் என்கிற அறிகுறிகள் நம்பிக்கை ஊட்டுபவையாக உள்ளன. அதே நேரம், பண விரயம், ஆற்றல் விரயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும், பொருளாதாரப் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வும் இடைக்காலத்தில் ஏற்பட்டு உள்ளது. செழிப்புத் திரும்ப வந்த பின்னரும் இந்த மனப்பாங்கு இருப்பது நல்லது.

***


'Time is money' என்பார்கள். அதை 'Power is money' என்று மாற்றிச் சொல்லலாம். அரசியல் பதவி என்னும் அளப்பரிய சக்தியைத் தம் கைப்பாவையாக மாற்றி எடுத்துக் கொண்டுவிட்டவர்களின் அலமாரிக் கதவு சற்றே திறந்ததும் அடுக்கடுக்காக விழுகின்ற ஊழல் எலும்புக் கூடுகள் மலைக்கச் செய்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் கேம்ஸ் ஊழல், லவாஸா முறைகேடு, ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டிட ஊழல், யெடியூரப்பா நில ஒதுக்கல் ஊழல் - இன்னும் வெளியே வராதவை எத்தனையோ! இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் தாம் தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை, இவற்றுக்காக எந்த அரசியல்வாதியும் குறைந்தபட்சம் கைது செய்யப்படக் கூட இல்லை. மாறாக CAG, உச்சநீதி மன்றம் போன்ற மிக உயர்ந்த அரசுக் கண்காணிப்பு எந்திரங்களை மண்ணில் புரட்டி எடுக்க முயற்சிக்கிறார்கள். போதாக்குறைக்கு, ஊழல் குற்றச்சாட்டப்பட்ட ஒருவரையே மத்திய விஜிலன்ஸ் கமிஷனராகவும் நியமித்து வைத்திருக்கிறார்கள். அதிகச் சம்பளம் தந்து அதிக வேலை வாங்குகிற தனியார் துறையைவிட, சம்பளம் குறைவானாலும், குறைந்த வேலை செய்து, குறைவில்லாமல் கிம்பளம் வாங்க வாய்ப்புள்ள அரசுப் பணிகள் மீது இளைஞர்களுக்குக் கவர்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஒரு பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ராஜா எவ்வழி, மன்னிக்கவும், மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று கூறி, மக்களும் பொதுவாழ்வில் நாணயமின்மையை இயல்பானதென்று ஏற்றுக்கொண்டு விட்டால், அப்போது மக்களாட்சி என்கிற ஆட்சிமுறை கொடுங்கோலாட்சியை விட மோசமானதாகிவிடும் அபாயம் உண்டு.

***


ட்விட்டர், ஃபேஸ்புக், பிளாகுகள் என்று பொதுஜன மேடைகள் கருத்துப் பரப்பலை, முன்பின் அறியாதவர்களிடையே விவாதத்தை, அதிகரித்திருக்கின்றன. திருவாளர் பொதுஜனம் என்பவரின் முகமாக இவை ஆக முயற்சித்து வருகின்றன. பாரம்பரியமான செய்தித்தாள், டி.வி. போன்றவை அரசியல் அதிகாரத்துக்குத் தண்டனிட்டுவிடும் காலகட்டத்தில், இந்தப் புதிய ஊடகங்களில் அதிகச் சுதந்திரம் காணப்படுகிறது. வெகுஜனத்தின் குரலை நேரடியாகக் கேட்க முடிகிறது. ஆனால், இவற்றில் ஆதாரங்களை விட அவதூறுகள் அதிகம் என்பது இவற்றுக்கு எதிராக வைக்கப்படும் வாதம். இவற்றோடு விக்கிலீக்ஸையும் சேர்த்துக் கொள்ளலாம். எந்தக் கட்டற்ற ஊடகத்திலும் ஆதாயமும் உண்டு, அபாயமும் உண்டு. கத்தி முனையில் நடக்கும் கழைக்கூத்தாடியின் லாகவத்தில், புதிய சமூக ஊடகங்களோடு வாழப் பழகிக்கொள்ளுதல் காலத்தின் கட்டாயம்.

***


அரசியலுக்குப் புதியவரான டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன் (கனெக்டிகட்) அங்கே முன்னரே காலூன்றிய அரசியல்வாதிகளுக்குச் சவாலாக நின்று, வித்தியாசமான பிரசார வழிமுறைகளைக் கையாண்டு தேர்தலில் வெற்றி பெற்று இந்திய-அமெரிக்கச் சமுதாயத்துக்குப் புதுப்பாதை இட்டிருக்கிறார். முந்தைய இதழ்களில் கமலா ஹாரிஸ், அனு நடராஜன் போன்றவர்கள் இந்திய அமெரிக்கர்கள் பொதுவாழ்வில் ஈடுபட அக்கறை காட்டுவதில்லை என்று குறைப்பட்டதைப் பார்த்தோம். பிரச்சனைகளைச் சரியாக அலசி, தமது தொகுதியினருக்கு எடுத்துக் கூறி, தக்க பிரசார அணுகுமுறை இருந்தால் வெற்றிக்கனி எட்டாமல் போகாது என்கிற பாடத்தை டாக்டர் பிரசாத் கொண்டு வருகிறார் இந்த இதழின் நேர்காணலில். மாறுபட்ட சினிமா, இலக்கியம், மேடை நாடகம் என்று பல ஆர்வங்கள் கொண்ட நாசர் அவர்களின் நேர்காணல் மற்றொரு மாணிக்கக் கல். அனு நடராஜன் அவர்களோடு நறுக்கென்று ஒரு மினி-நேர்காணலும் உண்டு. சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன், இசைமேதை ஜி.என். பாலசுப்ரமண்யம், சிற்றிதழ்களைச் சேகரித்துக் காலப் பொக்கிஷமாக்கும் பொள்ளாச்சி நசன் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள், மாறுபட்ட சிறுகதைகள், செய்திகள், துணுக்குகள் என்று நீங்கள் ரசிக்கும் எல்லா அம்சங்களோடும் மீண்டும் ஒரு சிறப்பான இதழ் தயாராகி இருக்கிறது.

இந்த இதழில் தென்றல் பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. டாக்டர் வாஞ்சி அவர்களின் குறுக்கெழுத்துப் புதிர் சிந்தனைக்கும் தமிழறிவுக்கும் சவாலாக எப்போதும் போல பவனி வருகிறது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் அதற்கு விசிறிகள் இருப்பதைச் சரியான விடை எழுதியோரின் பட்டியல் காட்டுகிறது. இதற்கு இணையான புதிர் தமிழில் இன்னொன்று இல்லை என்று அவ்வப்போது யாராவது எழுதியபடியே இருக்கிறார்கள். வாசகர் கடிதங்கள் கவிதையாகவும், உரைநடையாகவும் நீள, நீளமாக வந்து எங்கள் பணியைப் பொருள் உள்ளதாக்குகின்றன. தென்றலின் வலிவும் பொலிவும் ஏறிய வண்ணம் இருக்கும், உங்கள் ஆதரவில்.

வாசகர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

டிசம்பர் 2010

© TamilOnline.com