நவம்பர் 2010: வாசகர் கடிதம்
தமிழுக்கு இப்படியொரு சிறப்பான இதழ் அமெரிக்காவில் கிடைப்பது நாங்கள் செய்த பாக்கியம். தென்றல் வந்தவுடன் உடனுக்குடன் படித்து முடித்துவிட்டு, அடுத்த இதழ் வருகைக்காகக் காத்திருப்பது வீண் போவதில்லை. அக்டோபர் மாத இதழ் காந்தியடிகளைப் பற்றிய ஐன்ஸ்டைன் கடிதம் படிக்கப் பெருமிதமாக இருந்தது. பாரதியின் கவிதையோ, வீராவேசமாக இருந்தது. மேலும் இந்த இதழ் அரசியலில் தேர்தலில் நாம் பங்கேற்பதின் அவசியத்தைத் தெளிவாக்கியுள்ளது. நல்ல பயனுள்ள நேர்காணல்களைச் சரியான தருணத்தில் பிரசுரத்ததின் மூலம் என் போன்றோர் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவியுள்ளீர்கள். இந்த இதழில் நித்யவதி சுந்தரேஷ் மூலம் அனு நடராஜன் நேர்காணலையும், அனுநடராஜன், மேதா ஸ்ரீதர் மூலம் கமலா ஹாரிஸ் நேர்காணலையும், வெகு நேர்த்தியாக வெளியிட்டுள்ளீர்கள். இருவருக்கும் இளவயதின் தாக்கங்களே அரசியலில் இறங்க பக்கபலமாக அமைந்துள்ளது. இந்தியராக இருந்து அரசியலில் இறங்கி இந்தியரின் பெயரை நல்ல முறையில் நிலைநாட்டி கௌரவிக்கும் இந்த இருவரும் தெளிவான சிந்தனைகள் உள்ள அசாதாரணப் பெண்களாகவே பார்க்க முடிகிறது. இருவரின் நேர்காணலும் கருத்துப் பெட்டகமாகவே அமைந்துள்ளது. கமலா ஹாரிஸ், அனு நடராஜன் இருவரும் நவம்பர் மாதத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

எம்.கே.டி. பாகவதரின் கடைசிக் கால வாழ்க்கையைப் படிக்க மனம் நெகிழ்கிறது. அநுத்தமாவின் யதார்த்தத்துக்குள் எத்தனை அற்புதமான விஷயங்கள்! கவிஞர் தாமரையின் தவிப்பான எண்ணங்கள், சிறுகதைகளில் பொதிந்துள்ள பெரு விஷயங்கள், சிறுவர்களின் சிந்தனைக்குச் சிலபல யோசனைகள், நலம் வாழ நல்ல அறிவுரைகள், அன்புள்ள சிநேகிதியே, குறுக்கெழுத்துப் புதிர், மாயாபஜார், கதிரவனைக் கேளுங்கள், ஹரிமொழி, சினிமா சினிமா, நிகழ்வுகள், நடந்தவை என தென்றலின் எல்லாப் பகுதிகளும் தெவிட்டாமல் தித்திக்கின்றது. எல்லா வயத்தினருக்கும் பயன்படுமாறு தென்றலை வெளிக்கொணர்வது தங்களின் உழைப்பைக் காட்டுகிறது. தொடரட்டும் உங்கள் பணிகள். வாழ்த்துகள்.

சசிரேகா சம்பத்குமார்

*****


அச்சு வடிவில் தென்றல் வெள்ளி இரவு கிடைத்தது. எந்திரன் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வர வெகு நேரம் ஆனதால் வெள்ளிக்கிழமை இரவு புதிர் பார்க்கவில்லை. சனிக்கிழமை காலை எழுந்ததும் முதல் வேலை இதுதான்!

ஒவ்வொரு மாதமும் வேகமாக ஓடுகிறதே என்ற கவலை இல்லாமல் இன்னும் வேகமாகச் செல்லக்கூடாதா என்று எண்ண வைக்கிறது குறுக்கெழுத்துப் புதிர். டாக்டர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு நன்றி.

யோகநந்தினி,
கலிஃபோர்னியா

*****


தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் இதழ்களில் காணக்கிடைக்காத பலவற்றை நாங்கள் தென்றலில் படித்து மகிழ்கிறோம். மிகவும் தரமான இதழ்.

தமிழின் வளத்தைச் சமுதாயம் நெடுநோக்கில் பார்த்து ஏற்கவும், வட அமெரிக்காவில் தமிழர் ஏற்றுக் கடைப்பிடிக்கும் பாரம்பரியக் கலாசாரத்துக்கு ஜன்னலாக விளங்குவதுமான ஆழமான கட்டுரைகளைத் தென்றல் தருகிறது. 'தென்றல் பேசுகிறது' அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடக்கும் விஷயங்களின் மீது கவனத்தை ஈர்க்கிறது. அரசாட்சி, அரசியல் போன்றவை தமது நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து, தாம் செய்யும் பொதுச் சேவையால் ஏற்படும் நன்மைகளை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

'நேர்காணல்' பகுதியில் வரும் நபர்கள் எத்தனை துன்பங்களை மேற்கொண்டு சமூகத்தின் உயர்நிலையை அடைந்தார்கள் என்பதை இளைய தலைமுறைக்குச் சொல்வதோடு, அவர்களுக்கு வினையூக்கியாகவும் இருக்கிறது.

கோலிவுட் செய்திகளைக் குறைக்கலாம், அல்லது தவிர்க்கலாம். தேவையிருந்தால் மட்டுமே வெளியடலாம். தென்றல் வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையல்ல என்று நான் நம்புகிறேன். எங்கள் வாசிப்பறையில் அது ஓரிடத்தைப் பெறுகிறது. முன்னாளில் நான் ஆனந்த விகடனுக்குக் காத்திருந்ததைப் போல மக்கள் தென்றலின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

கண்ணன் ராகவன், டாப்பிள்வே, சான் டியேகோ, கலி.

*****


தென்றல் பத்தாண்டு நிறைவு கண்டமைக்கு வாழ்த்துக்கள். இது குறிப்பிடத்தக்க, பெருமைப்பட வேண்டிய மைல்கல் ஆகும். ஒரு எழுத்தாளரின் மகன், பல பதிப்பாளர்களுடன் தொடர்புடையவன் என்பதோடு எத்தனையோ பத்திரிகைகள் தொடங்கவும் மூடவும் படுவதைப் பார்த்தவன் என்ற முறையில், இது எவ்வளவு கடினமான பணி என்பதை அறிவேன். It is your passion that keeps Thendral going.

சோமலெ சோமசுந்தரம்

*****


ரஜினியின் 'எந்திரன்' படம் உலகெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. சென்னையில் இருபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் டிக்கெட் விலை 400, 500 ரூபாய் விற்பதாகச் செய்தி வந்தது. நியூயார்க்கிலும் முதல் வாரத்தில் டிக்கெட்டை 25 டாலர் விலையில் விற்றார்கள். இரண்டாவது வாரத்த்தில் 15 டாலர். முதல் வாரத்திலேயே படத்தின் மொத்த வசூல் 200 கோடிக்கும் மேல் தாண்டி விட்டதாகச் சொன்னார்கள். நானும் மிகுந்த எதிர்பார்ப்போடு 15 டாலர் கொடுத்துப் படத்தைப் பார்த்தேன்.

படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த பின்பு எனக்கு அந்தக் காலத்தில் சென்னையில் பார்த்த மோடி மஸ்தான் வித்தைதான் ஞாபகத்திற்கு வந்தது. அதே வேலையைத் தான் ஷங்கர் ரஜினியின் துணையுடன் செய்திருக்கிறார். மோடி மஸ்தான் நூற்றுக்கணக்கான மக்களை மயக்கி, நூற்றுக்கணக்கில் சம்பாதித்தான். ஆனால் இவர்களோ கோடிக்கணக்கான மக்களை மயக்கி, கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

அதுபோல தமிழகப் பத்திரிகைகளும் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் பிரபலங்களுக்கு எதிராக எதையும் எழுத, வெளியிட முன்வருவதில்லை. அவர்கள் எது செய்தாலும், அவர்களை ஆதரிப்பதையும், புகழ் பாடுவதையுமே தங்கள் கொள்கையாக வைத்திருக்கின்றன. இது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. எந்திரன் படத்தில் கதை என்று எதுவுமே இல்லை. நகைச்சுவை இல்லை. நம்பும்படியாக ஒரு காட்சிகூட இல்லை. வெறுமனே ஐஸ்வர்யாவையும், ரோபோவையும் வைத்து வித்தை காட்டியிருக்கின்றனர். நானும் என்னைப் போலப் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மற்ற வாசகர்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

எஸ்.மோகன்ராஜ்,
க்வீன்ஸ், நியூயார்க்

*****


தென்றல் மூலம் எண்ணற்ற தமிழர்கள் அளவற்ற பலனடைகிறார்கள். குறிப்பாக தொடர்கள், கதைகள், கட்டுரைகள், போட்டிகள், தகவல்கள், செய்திகள், தலையங்கம் மற்றும் தேவையான அறிவுரைகள் மூலம் வாசகர்கள், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்வது போல உணர்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. தென்றல் மூலம் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்கள் 5 வருடங்களில் அமெரிக்கக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்த இந்தியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற அமெரிக்க அரசு நடத்தும் நேர்முகத் தேர்வுக்கு ஆஜராகி, அங்கு கேட்கப்பட்டும் கேள்விகளுக்கு பதில் தந்து, தேர்வில் வெற்றி பெற்றால், குடியுரிமை வழங்கப்படுகிறது. இது தொடர்பான விதிகள் கொண்ட ஆங்கிலப் புத்தகம் உள்ளது. ஆனால் பலரும் இங்கு தங்களுடைய வாரிசுகளுடன் வந்து கிரீன் கார்ட் பெற்றுத் தங்குகிறார்கள். அவர்களில் அதிக வயதானவர்கள், அதிகாரிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாதவர்கள், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளச் சிரமப்படுகின்ற்னர். இவர்களில் பலர் மீண்டும் மீண்டும் முயன்றும் தேர்ச்சி பெற இயலாத நிலையில் உள்ளனர்.

ஜெயகிருஷ்ண படேல் என்பவர் குஜராத்தி மொழியில், ஆங்கில மொழி அனுபவம் குறைவாக உள்ளவர்களுக்காக எழுதியுள்ளார். இதன்மூலம் அவர்கள் மிகவும் பயனடைகின்றனர். தமிழிலும் இதே போல ஒரு நூலை வெளியிடலாம். இதற்கு அமெரிக்காவில் இருக்கும் தென்றல் வாசகர்கள் முன்வர வேண்டும். ஒருவேளை புத்தகமாக வெளியிட இயலாவிட்டாலும், மாதந்தோறும் தென்றல் இதழில் பகுதி பகுதியாக அதை வெளியிடலாம். செய்வீர்களா?

சீனிவாசன் ராமநாதன்,
ஃப்ரிமாண்ட், கலிஃபோனியா

(நல்ல யோசனை. எளிய தமிழில் யாராவது எழுதினால், தென்றல் மாதந்தோறும் வெளியிடத் தயார் - ஆசிரியர்)

*****


நான் முருகன் கோயிலுக்குச் சென்றபோது பிரசாதமும் கூடவே பஞ்சாமிர்தமாகத் தென்றலும் கிடைக்கப் பெற்றேன். படிக்கப் படிக்க பலப்பல ஆச்சரியங்கள். தென்றல் பேசுவதில் தொடங்கி வாசகர் குரலில் முடியும் வரை. கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள் என அனைத்துமே ஈர்ப்பு சக்தியின் வார்ப்படங்கள். ஆசிரியர் பக்கத்தில் பிஹார், உத்திரப்பிரதேசம் என்று பல மாநிலச் செய்திகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. எழுத்தாளர் இமையத்தின் கட்டுரையும், அவரது சிறுகதையும் வெகு சிறப்பு. குறிப்பாக 'வாழ்வு குறித்து சமூகம் குறித்து சிந்திக்க வைப்பதால் எழுதுகிறேன்' என்ற அவரது வார்த்தைகள் மிகவும் ஆத்மார்த்தமான வார்த்தைகள். வெடிமருந்துக் கிடங்காக இருந்த பாரதியின் வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றிப் பாதுகாத்த டாக்டர் நாகசாமியின் மனநிறைவில் நாமும் பங்கு கொள்ளலாம். அதேபோன்று கட்டபொம்மன் கோட்டையின் இடிபாடு மீது கோட்டை கட்டாமல் அதை வரலாற்றுச் சான்றாக இருக்க வைத்து, அருகிலேயே மற்றொரு மண்டபத்தை அவன் நினைவாக எழுப்புவோம் என்று முதல்வர் கலைஞர் கூறி அப்படியே செய்து முடித்ததும் பெருமைப்பட வேண்டிய செய்தியாகும்.

ஆத்மாவின் ராகங்கள் கோவை வாலிபாளையத்தில் மக்கள் மருத்துவமனை கட்ட உதவி, கூடலூர் ஆதிவாசி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்ட வேலூர் சி.எம்.சிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க உதவி என்று தொண்டு கானமாக இசைக்கிறது. அம்புஜவல்லி தேசிகாசாரி அவர்களின் கல்லுக்குள் ஈரம் வைத்தான் கதையில் சரளமான நடை காணப்பட்டது. ஸ்ரீதர் சதாசிவனின் 'அடைகாக்கும் சேவல்கள்' ஒரு மண்வாசனைக் கதை. ஆம், அமெரிக்க மண்வாசனை. நெஞ்சைக் கொஞ்சம் புரட்டிப் போட்ட கதை.

சிகாகோவில் 'நாட்யா' நடனப்பள்ளியை நிறுவி 37 ஆண்டுகளாகத் தொய்வின்றி நடத்தி வரும் திருமதி ஹேமா ராஜகோபாலன் அவர்களின் சாதனை வியக்க வைக்கிறது. நல்ல நடனக் கலைஞரான அவரது மகள் கிருத்திகாவின் நடனத்தை அன்றைய ஜனாதிபதி கிளிண்டன் பார்த்து ரசித்துப் பாராட்டியது சிறப்பு.

ஹரி கிருஷ்ணனின் பேராசிரியர் நினைவுகள் மிக ஆழமான கட்டுரைத் தொடர். வழக்கமான சொல்லை விடுத்து வேறொரு வடிவத்தில் சொல்லும் போது மனதில் தைக்கின்றன என்பது அறிவுபூர்வமானது. அது ஒரு அற்புதமான உண்மை. 'வர்த்தக சந்தை சொற்கூட்டங்கள்' - நல்ல வார்த்தைப் பிரயோகம்.

குறிப்பாக நிகழ்வுகள், நடந்தவை எனப் பல செய்திகளைத் தொகுத்து வட அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு ஒரு சந்தனத் தென்றலாகத் தமிழ் மணம் கமழச் செய்யத் தொண்டு புரியும் தென்றலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பழனிகோபு,
ராக்வில், மேரிலேண்ட்

© TamilOnline.com