நிருத்யகல்யா வழங்கிய 'காஸ்மிக்ஸ்'
செப்டம்பர் 19, 2010 அன்று நிருத்யகல்யாவின் கலை இயக்குனர் ஜனனி நாராயணனும் அவரது மாணவியரும் 'காஸ்மிக்ஸ்' என்ற நடன நிகழச்சியை சான்டா கிளாராவிலுள்ள (கலி.) மிஷன் சிடி நிகழ்கலை மைய அரங்கில் வழங்கினர்.

செவ்வியல் நடனத்தை அடிப்படையாகக்கொண்டு எளிய முறையில் விறுவிறுப்போடு நாட்டுப்புற நடனங்களை அவர்கள் வழங்கியது சுவையாக இருந்தது. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் நன்மைகள், பாதிப்புகள் எப்படிப்பட்டவை என்பதை அழகிய அபிநயங்கள், சுத்தமான அடவுகள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தினர்.

புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்து தில்லானாவில் முடிப்பது என்றே பார்த்துப் பழக்கப்பட்ட ரசிகர்களுக்குப் பாரம்பரியத்தோடு கலந்த நாட்டுப்புறக் கலையின் சங்கமம் புதுமையான விருந்தாக அமைந்தது. கேரளத்துக் கைகொட்டிக்களி, மராட்டிய மீனவ நடனம், சீனத்து ரிப்பன் நடனம் போன்றவை ரசிக்கத்தக்கனவாக இருந்தன. செவிக்கினிய ஜாஸ் (Jazz) இசையும் அதற்கேற்ற நடன அசைவுகளும் மொழி பேதத்தைக் கடந்து இந்தியர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் சுலபமாகச் சென்றடையும் வகையில் அமைத்திருந்த நிருத்யகல்யா ஜனனி நாராயணன் பாராட்டுக்குரியவர்.

விஜயா ஜெயராமன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com