சௌபர்ணிகா நடனப்பள்ளி ஆண்டுவிழா
அக்டோபர் 23, 2010 அன்று சௌபர்ணிகா நடனப்பள்ளியின் ஆண்டு விழா நியூஹேம்ப்ஷயரின் நேஷ்வாவில் நடைபெற்றது. இந்த நாட்டியப் பள்ளியின் நிர்வாகியும் நடன ஆசிரியரும் ஆன திருமதி ஷீதல் துவாரகா, இங்கு பல ஆண்டுகளாகப் பாரம்பரிய முறையில் பரதநாட்டியப் பயிற்சி அளித்து வருகிறார்.

குரு துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து ஸ்ராவ்யா பிரதீப், பாவனா, பைரவி ஆகியோரின் புஷ்பாஞ்சலி நடனம். தொடர்ந்து அஞ்சனா தேவி மற்றும் ஜஸ்வந்தியின் அலாரிப்பு நடனம். இருவரின் புன்னகையும், ஒருங்கிணைப்பும் பாராட்டுக்குரியன. ராகமாலிகையில் அமைந்த இனிமையான ஜதீஸ்வரப் பாடலுக்கு மிக அற்புதமாக நடனமாடினர் கங்கா, தேவிகா மற்றும் ஜானகி.

'அகில புவனம் முழுதும் காட்டிடும் அம்பிகையே, ஆனந்த வள்ளியே...' என்ற பாடலுக்கு தன்யா ரதினின் நடனம் சிறப்பு. தொடர்ந்த 'ஆயர்குலத்திலே ஆநிரை மேய்த்தவன்' என்ற ஆரபி ராகப் பாடலுக்கு 'முரளீதர கவுத்துவம்' ஆடினார் அதிதி வர்மா.

குரு ஷீதலில் நடன அமைப்பு அனைவரையும் ஈர்த்தது. அதற்கு ஈடு கொடுத்து ஆடிய செல்வி ஆர்த்தியின் பாவமும், தாளம் தப்பாத நடனமும் கண்டாரை வியக்க வைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில் நாட்டியப் பள்ளியின் குரு ஷீதல் 'தாயே தினம் தினம் அகம் நிறை உனைப் பணிந்தேனே...' என்ற மகதி ராகத் தில்லானாவுக்கு ஆடினார்.

பூங்கோதை கோவிந்தராஜ்,
மாசசூஸட்ஸ்

© TamilOnline.com