"தாத்தா, ·ப்ளோரிடாவில் விடுமுறை வீடு வாங்கறது எப்படி இருக்கு?" என்றான் ஏழுமாதமே ஆன கிரி. அவனுடைய தாத்தா, டாக்டர் வத்சன், ஒரு மரபணு விஞ்ஞானி.
பல வருட ஆய்வுக்குப் பின் மரபணுவைத் திருத்தியமைத்துத் தான் தயாரித்த சூப்பர்-குழந்தை கிரியைப் பெருமையோடு பார்த்தார் டாக்டர் வத்சன். "ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து, கவனமா விசாரிச்சு, திருப்தியானப்புறம் ஒரு இடத்தை வாங்கிட்டேன். பங்கு மார்க்கட்ல 'அடிப்படை ஆய்வு' (Fundamental Analysis) செய்து வாங்கற மாதிரிதான்னு வெச்சுக்கயேன்" என்றார் வத்சன்.
வாயோர ஜொள்ளைத் துடைத்துக் கொண்டு கிரி கூறினான், "அங்கே வாங்கின எத்தனையோ பேர் நல்லா ஆராய்ச்சி பண்ணிட்டுத்தானே வாங்கியிருப்பாங்க. நான் வாங்க அதுவே போதும். ·ப்ளோரிடா வீட்டுநிலக் குறியீட்டெண் (Florida Real Estate Index) எப்படிப் போகுதுன்னு பாத்தா, அங்கே விலை ஏறுமுகமா இருக்குதான்னு தெரிஞ்சுடும். 'தொழில்நுட்ப ஆய்வு' (Technical Analysis) பண்ணி பங்குகள் வாங்கறாங்க இல்லை, அதுபோலத்தான். போக்கைத் தெரிஞ்சுக்கிட்டே சொத்து வாங்கலாமே."
"இல்லையப்பா இல்லை" என்றார் வத்சன். "உன்னோட மரபணுவை வகிர்வதற்கு முன்னே எவ்வளவு வருஷம் கூர்ந்து உன் தாய் தந்தையரைக் கவனிச்சிருப்பேன். அவங்களோட உடல்நலம், DNA அமைப்பு எல்லாத்தையும் பார்த்தேனே. எதுக்காக? உனக்கு நீடித்த ஆரோக்கியமான வாழ்வு வேணும்னுதானே?
"அதேபோல, ஒரு கம்பெனியில முதலீடு செய்யவும் முதல் படி என்னன்னா, அது தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டுதா, அதிகக் கடன் இல்லாமல் இருக்கா, Enron, WorldCom மாதிரி வழுக்கிவிழாம இருக்கா என்பதையெல்லாம் தோண்டித் துருவித் தெரிஞ்சுக்கறதுதான். நான் 'அடிப்படைவாதி'தான்! அதாவது கம்பெனியின் அடிப்படைப் பொருளாதாரம் நல்லா இருக்கான்னு பாப்பேன். அடுத்து, அதன் பங்குவிலை நியாயமா இருக்கான்னு பாப்பேன். கன்னாபின்னா விலையில அடிப்படைவாதி வாங்கமாட்டான்.
"வாங்கினா, நெடுநாளைக்கு அந்தப் பங்குகளை வச்சிருக்க முடியுமான்னு பாக்கிறவன் நான். பொறுமையான, புத்திசாலித்தனமான முதலீட்டாளன்னு வெச்சுக்கயேன். அப்போ American Express, Pfizer, Bed Bath and Beyond, CDW Corporation மாதிரியான அட்டகாசமான கம்பெனியிலதான் முதலீடு செய்வேன். சும்மாவாவது இன்னிக்கு வாங்கி நாளைக்கு விக்கறதுல எனக்கு நம்பிக்கை கிடையாது. விலை மேலே போகறவரைக்கும் காத்திருக்க நான் தயார்."
"உங்களுக்கு நேர்மாறாகத்தான் நான் செய்வேன்" என்றான் கிரி. "வேண்டியபடி மரபணுவை மாத்தி அமைச்சும் குழந்தைகளை உங்களை மாதிரி விஞ்ஞானிகள் படைக்கலையா, அப்படித்தான். அதுவும் வெற்றிகரமாத்தானே இருக்கு.
"நான் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளன் (Technical Analyst). எனக்கு குழுமத்தின் பொருளாதார நிலைமையைப் பத்தி அக்கறை இல்லை. சரித்திரம் மீண்டுவரும்னு நம்பறவன் நான்."
கிரியின் தந்தை ராமனுக்கு ஒரே வியப்பு, "அப்போ எது சரியான வழிங்கிறே?" என்றார்.
"தாத்தா ஒரு அடிப்படை ஆய்வாளர். அதனால அவர் Google-ல பணத்தைப் போடமாட்டார். அதுக்கு விளம்பரத்தைத் தவிர வேறு வழியில வருமானம் இல்லைங்கறதுனால அதன்மேல அவருக்கு நம்பிக்கை வராது.
"இத்தனை ஆயிரம் பேரு அதில நம்பி பணத்தை முதலீடு செய்தா ஒரு காரணம் இருக்கும்னு நெனக்கறவன் நான். பங்குவிலை மேலே ஏறும்போதே நான் அதை வாங்கிடுவேன். தாத்தா மாதிரி ஆசாமி தவறவிட்ட வாய்ப்பு என்னன்னு இப்பப் புரியுதா?
"செப்டம்பர் 2004-ல கூகிள் 85 டாலரா இருந்தது. மெதுவா நூறாச்சு, நூத்தி ஐம்பதாச்சு. டெக்னிகல் அனாலிஸ்ட் இதைக் கவனிச்சு, ஏதோ காரணம் இருக்குன்னு தீர்மானிச்சிருப்பார். நான் அந்த பங்குகளை வாங்கியிருப்பேன். இப்ப பாரு அது 300 டாலருக்கு மேல போயாச்சு. நூறு சதவீதத்துக்கும் மேல லாபம் ஆச்சே!"
"பேராண்டி, ஒரு விஷயத்தை நீ மறந்துட்ட. ஒரு உயிரணு தன்னையே ஒரு பிரதி செய்துகொண்டு, எல்லா மரபுத் தகவலையும் தன் பிரதிகளுக்கும் கொடுப்பதன்மூலம் தான் பெருகுகிறது. இதற்கு DNA இரட்டிக்கிறது. அப்படிப் பிரதி செய்யும்போது தவறுகள் நிகழலாம். சூரிய ஒளி, சிகரெட் புகை இப்படி எந்தக் காரணத்தாலும் அந்தத் தவறு நிகழலாம்.
"அதே போல, சரித்திரம் திரும்ப நிகழும்போதும், அது முந்தைய வீரியத்தில் நிகழாமல் போகலாம். அது பொருளாதார பலவீனத்தால் ஏற்படலாம், அதை நீ கணக்கில் கொள்ளவில்லையே.
"செல்போன் கேம்ஸ் தயாரிப்பாளர் Jamdat Mobile-ஐ எடுத்துக்கோ. ஒரே நாளில் பங்குவிலை 29 டாலரில் இருந்து 22-க்கு விழுந்தது. 25 சதவிகிதச் சரிவு! ஓர் அடிப்படைவாதி என்கிற முறையில் நான் 29 டாலர் இருக்கும் போது அந்தப் பங்கை வாங்கி இருக்கமாட்டேன். அது அநியாய விலை" என்றார் டாக்டர் வத்சன்.
சோளப்பொரியை வாயில் போட்டுக்கொண்ட கிரி, "விஞ்ஞானிகள் DNA பிரதியெடுக்கையில் நிகழும் தவறுகளைக் குறைக்க முயல்வதில்லையா? அதே போல தொழில்நுட்ப ஆய்வாளனும், மார்க்கெட்டின் போக்கு, வரைபடம் (Chart) ஆகியவற்றின் மூலம் ஒரு பங்கை வாங்கச் சரியான விலையை கணிக்க முயற்சிக்கிறார்கள். இதுக்கு பதில் சொல்லுங்க. நார்ட்டன் ஆன்ட்டை வைரஸ் தயாரிக்கும் சிமான்டக்கின் பங்குவிலை போன வாரம் 24 டாலரில் இருந்து 23, 22.50ன்னு சரிஞ்சுது. அதுக்கு என்ன சொல்றீங்க?"
"சுலபம். விலை விழும்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப் போடுவேன். ஒரு நல்ல கம்பெனிப் பங்கு விலைகுறைவதை நான் ஒரு வாய்ப்பாகத்தான் நினைப்பேன்."
"ஆஹா!" தெய்வீகமாகச் சிரித்தான் கிரி. "நல்ல வாய்ப்புதான், சந்தேகமில்லை. இப்படி யோசிச்சுப் பாருங்க. முன்னே நடந்தது, அதன் விலை நகரும் விதம், டெக்னிகல் அனாலிஸிஸ் ஆகியவற்றை வைத்து நான் அது 21.50 டாலர் விலையைத் தொடும் என்பதை அறிவேன். அதுக்குக் கீழே போக வாய்ப்பில்லை என்பதும் எனக்குத் தெரியும். காத்திருந்து கொக்கு மாதிரி அந்த விலையில் கவ்விடுவேன்."
"யப்பாடி, மரபணு ஆராய்ச்சிமுறையில பங்குகள் வாங்கலாம்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சது" என்றார் சிரித்தபடியே கிரியின் தந்தை நாராயணன்.
"அடிப்படையை கவனித்து வாங்கும் நான் வலுவான கம்பெனிகளில்தான் முதலீடு செய்வேன் அப்படீங்கறதுதான் என்னுடைய பலம். காலக்கிரமத்தில் எனக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஒரு குழுமத்தின் நியாயமான உள்ளீட்டை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை அறிய நிறைய முயற்சி தேவைப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நியாய விலைக்கும் கீழே பங்கு விலை போனதும் நான் வாங்குகிறேன்."
"உண்மைதான் தாத்தா" கிரி கூறினான், "தொழில்நுட்ப ஆய்வு எளிதுதான். ஆனாலும் கூர்ந்து கவனிக்காததால் நம்ம அனுமானம் பிசகிட்டா போச்சு, நஷ்டம்தான்."
"பங்குச் சந்தையில பணம் பண்றது அடிப்படை ஆய்வாளரா, தொழில்நுட்ப ஆய்வாளரான்னு யாராவது சொல்லுங்களேன், பிளீஸ்" என்றான் நாராயணன்.
கிரிக் குட்டிதான் பதில் சொல்லியது: "நீடித்த கால முதலீட்டில் அடிப்படை ஆய்வாளர்தான் நல்ல வருமானம் பெறுவார்னு நான் ஒப்புக்கறேன். தொழில்நுட்ப ஆய்வாளர் விலை எப்ப ஏறுதோ அப்பதான் முதலீடு செய்வார். அதனால ஆரம்பகால வளர்ச்சியைத் தவற விட்டுடறார். இரண்டு தந்திரங்களையும் சேர்த்துப் பயன்படுத்தினா மத்தவங்களை விட நிறைய லாபம் சம்பாதிக்கலாம்."
"நாராயணா, மைக்ரோசாப்ட் பங்குகள் ரெண்டு வருஷமா 30 டாலருக்கு மேலயோ 24 டாலருக்குக் கீழயோ போகலே, ஏன் தெரியுமா? பனேரா பிரெட் பங்குகளின் விலை 66 டாலரிலிருந்து விழுந்தபோதும், 55க்குக் கீழே போகவே இல்லை, அது எதனாலே?" என்று கேட்டார் டாக்டர் வத்சன்.
"அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ஆய்வு பண்ணிக் கண்டுபிடிச்சாப் போச்சு. உங்க பாஷையில சொன்னா, அதுக்கு 'இரட்டைக் கூம்புத் தீர்வு'தான் காணவேணும்" என்றார் நாராயணன் தன் சூப்பர் குழந்தையை இறுக அணைத்தபடி.
ஆங்கிலத்தில்: சிவா, பிரியா தமிழ் வடிவம்: மதுரபாரதி |