சான் டியேகோவில் தீபாவளித் திருவிழா
அக்டோபர் 24, 2010 அன்று சான் டியேகோ இந்திய-அமெரிக்கக் கழகம், மிங்கேய் பன்னாட்டு அருங்காட்சியகம் மற்றும் சான் டியேகோ கலைக் காட்சியகம் ஆகியவை இணைந்து கோலாகலமான தீபாவளித் திருநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தன. இந்த மூன்றாவது வருடாந்திர விழாவில் பல கலாசாரப் பின்னணிகளையும் கொண்ட 5000 பேர் கலந்து கொண்டனர். "சான் டியேகோவில் நடைபெறும் மிகப்பெரிய இந்திய-அமெரிக்க விழா இதுவே" என்கிறார் அங்குள்ள இந்திய-அமெரிக்கக் கழகத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் எம்.சி. மாதவன்.

ஐந்தடி உயரம் கொண்ட பெரிய குத்துவிளக்குகள் ஐம்பதும், சிறிய விளக்குகள் 1008ம் தாங்கி, எழிலோடு மகளிர் ஊர்வலமாகச் சென்றது கண்கொள்ளாக் காட்சி. திரு. ராமசேஷன் அவர்களின் தொழில்நுட்ப உதவியோடு திருமதி. உமா சேஷன் இயக்கி வழங்கிய நரகாசுரன் நடன நாடகம் அனைவரையும் கவர்ந்தது.

சான் டியேகோவின் கலை, கலாசார, சமூகத் துறைகளுக்குப் பெரும் பங்காற்றிய மார்த்தா லாங்கனெகர், சேலி புல்லார்ட் தார்ன்டன், சூஸன் டேவிஸ் ஆகிய மூன்று பெருமைக்குரிய பெண்மணிகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலை, கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் 'நடன வானவில்' நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் தத்தம் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். இதில் தமிழ் நாட்டின் தில்லானா, கரகம், காவடி, கோலாட்டம் ஆகியவை வழங்கப்பட்டன.

ராப் சைட்னர் வந்திருந்தோரை வரவேற்றார். ஹமீத் தௌதானி கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

செய்தி அறிக்கையிலிருந்து

© TamilOnline.com