செய்தி (நியூயார்க்: சூலை 8, 2004) எழுபத்தெட்டு வயதான சான் இரீகாசு (John Regas) என்பவர்க்குப் பதினைந்து-இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை. காரணம்: ஆடெல்பியா என்னும் கம்பித் தொலைக்காட்சிக் (கேபிள் டிவி) குழுமத்திலிருந்து 10 கோடி டாலர் களவாடினாராம். அந்தக் குழுமத்தை அவர்தாம் 1952-ல் தம் இருபத்தாறாம் வயதில் தொடங்கினார்; அவரே அதை அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய கம்பித்தொலைக்காட்சிக் குழுமமாக வளர்த்தார். ஆனால் வாழ்நாள் முழுதும் பாடுபட்ட அவர், சிலரே சாதிக்கும் சாதனையின் செருக்கோடு தலைநிமிர்ந்து சுற்றத்தாரிடையேயும் சமூகத்திலும் நடக்கவேண்டியவர், பலநூறு கோடிச் செல்வத்தை முதுமையில் உழைப்பின் வருத்தமின்றி நுகரவேண்டியவர், இறுதிநாளைச் சிறையில் கழிக்கவேண்டும் நிலை! இவ்வாறு பெரிய செயலாற்றல் உள்ளவரும் மிகுந்த செல்வமும் உடையவர்கூட ஏன் இந்த நிலைக்கு ஆளாகிறார்?
அடுத்த செய்தி: (வாசிங்டன், மார்ச் 1, 2005) வால்டர் ஆண்டர்சன் என்னும் தொலைத்தொடர்புத் தொழில்முனைப்பாளரை 20 கோடி டாலர் வரி ஏய்த்தமைக்கு அமெரிக்க நீதித்துறை குற்றச்சாற்றல் பதிந்துள்ளது. அவர் வரியேய்ப்புக்குப் பனாமா மற்றும் வர்ஜின் தீவுகள் என்னும் அயல்நாடுகளில் பொக்கைக்குழுமங்கள் (டம்மி) தொடங்கி அவை மூலம் வருமானத்தை மறைத்துத் தம் வருமானவரியைக் குறைக்கப் பொய்க்கணக்குகள் காட்டினாராம். ஆண்டர்சனும் மிகச் சிறந்த தொழில்முனைப்பாளர். தொலைத் தொடர்புக் குழுமங்களைத் தொடங்கி விற்பதில் அவருக்கு மிக முனைப்பு. நேர்மையாக அரசுக்கு வரிகட்டிக் கொண்டிருந்த பொழுதே அவருக்குக் கோடிகோடியாகச் செல்வம் குவிந்திருந்தது. அதைச் சேர்க்க இளமை முழுதும் வாணிகத்தில் கழித்திருப்பார்; இனிமேலாவது அந்தக் கோடானுகோடியை அமர்ந்து பெயரன் பெயர்த்திகளுடன் ஓய்வாக நுகர்ந்திருக்கலாம். ஆனால் இன்றோ ஐம்பத்தாறு வயதில் ஏறத்தாழ 80 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறும் குற்றச்சாற்றில் சிக்கியுள்ளார். இந்த நிலைக்கு ஏன் ஆளாகிறார்?
இந்தக் களவுகளை நிகழ்த்தியவர்களைப் பற்றித் திருவள்ளுவனைக் கேட்டால் அவன் சொல்லும் ஒரே சொல்: அளவு!
ஆம் களவிலே மிகுந்த காதலை உடையவர்கள் அளவோடு ஒழுகுதலைச் செய்யார் என்கிறான் வள்ளுவன்:
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார், களவின்கண் கன்றிய காத லவர். (திருக்குறள்: கள்ளாமை: 286)
[கண் = இடம்; ஆற்றார் = செய்யார்; கன்றிய = மிகுந்த]
ஏனென்றால் களவினால் ஆகும் செல்வம் தான் நினைத்த அளவைவிடக் கடந்து ஆவதுபோலக் களவாளிக்குக் காட்டுமாம்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் (திருக்குறள்: கள்ளாமை: 283)
[இறந்து = கடந்து]
ஆனால் அப்படிக் காட்டி அது கடைசியில் கெடும் என்று அந்தக் குறள் சொல்வதைக் களவாளிகள் உணர்வதில்லை. உழைப்பேதும் இன்றி அள்ள அள்ளக் கிடைப்பதால் அளவு என்பதை அவர்கள் நினைப்பதில்லை. பிறகு அது பெருகி அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.
இதற்கு நல்ல எடுத்துக்காட்டு இந்தச் செய்தி: (சென்னை: சனவரி 27, 2006) ஒளிப்படச்சேவை விற்கும் அமெரிக்க நிறுவனமொன்றின் சென்னை அலுவலகத்தில் விமல் இராசன், பிரசாந்து உண்ணி என்னும் இருவர் 41 இலட்சம் ரூபாய்க்கு மோசடி செய்தமைக்குச் சிறைபிடிப்பு. அவர்கள் அந்த நிறுவனத்தின் கணினியில் போலிவாடிக்கையாளர் பெயர்கள் பலவற்றைப் பதிந்தனர்; பிறகு அவர்கள் பெயரில் பண்டங்களை விற்பதாகப் பதிந்தனர்; அதன்பிறகு அந்தப் பண்டங்கள் பிடிக்காததால் வாடிக்கையாளர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பிப் பெறும் கோரிக்கையை உருவாக்கிக் கணினியில் பதிந்தனர். ஆனால் அந்தப் பணத்தைத் தங்கள் பெயரில் உள்ள கடனட்டைகளில் (கிரெடிட்டு அட்டை) வரவாகத் திரும்பி வருமாறு ஏற்படுத்தி யிருந்தார்கள்! அதனால் ஒவ்வொரு தடவை போலி வாடிக்கையாளர் திரும்பளிப்புக் (ரீபண்டு) கோரிக்கை எழுப்பும்பொழுதும் பண்டத்தின் விலையாகிய 29.95 டாலர் (தோராயம் ரூ.1300) அவர்களின் கடனட்டைக் கணக்கில் வரவாகச் சேரும்.
இங்கே அவர்கள் அளவோடு நிற்காமல் களவு செய்ததைச் செய்தியில் உள்ள மீதி விவரங்களால் அறிகிறோம்: அவர்கள் இந்தத் திரும்பளிப்பை ஒருமுறை இருமுறையோடோ பத்து இருபது முறையோடோ நிறுத்தவில்லை. இருவரும் சேர்ந்து 3047 முறை அந்தப் போலிப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர்! அந்த மூவாயிரம் பரிமாற்றங்களையும் பத்துமாதம் இருபது மாதம் என்று நெடுநாட்கள் செய்யவில்லை. இத்தனைப் பரிமாற்றங்களையும் சூன் 8, 2005 முதல் செப்டம்பர் 15-க்குள் செய்தனர்.
மூன்றே மாதத்தில் 3047 தடவை; அதாவது, சராசரி ஒரு நாளைக்கு 30 தடவை பண்டங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்காமல் திரும்புவது ஒரு சிறு நிறுவனத்தின் கணக்காளர்களின் கவனத்தை ஈர்க்காதா? அதிலும் அவர்கள் முப்பதே போலி வாடிக்கையாளர்கள் பெயரில் இத்தனையும் நிகழ்த்தினார்கள்! அதாவது சராசரி ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு நாளைக்கு மூன்று தடவை திரும்பளிப்புக் கோருவதுபோல் செய்திருக்கிறார்கள். அளவு என்பதோடு நிற்கத் தெரியவில்லை அவர்களுக்கு!
அதனால்தான் வள்ளுவன் சொல்லினான்:
அளவல்ல செய்து,ஆங்கே வீவர், களவல்ல மற்றைய தேற்றா தவர் (திருக்குறள்: கள்ளாமை: 289)
[வீ = அழி; வீவர் = அழிவர்; ஆங்கே = அங்கேயே அப்பொழுதே; தேற்றாதவர் = தெளியாதவர்]
அதாவது, களவைத் தவிர மற்ற நல்ல நெறியில் வாழ்க்கையைச் செலுத்தும் தெளிவில்லாதவர்கள் அளவுக்கு மீறியதைச் செய்து அப்பொழுதே அழிவார்கள் என்கிறான் பொய்யாமொழிப் புலவன்.
பெரியண்ணன் சந்திரசேகரன் |